22 டிசம்பர் 2022

கிணற்றை எட்டிப்பார்ப்பவர்களுக்கு…

நல்லெனும் யாமத்தில்
புன்னை நிழல் விழும்
புறக்கடைக் கிணற்றில்
பாங்கி டார்ச் அடிக்கிறாள்
 
மதி என்றால்
நிலவு என்றோ
அறிவு என்றோ
கொஞ்சமும் நம்பாத தலைவி
துஞ்சாமல் பரிதவிக்கிறாள்
 
பிறைமதி வளர்ந்து
நிறைமதி ஆனதும்
கிணற்றுத் தவளைக்கு
இரவா பகலா எனக் குழப்பம்
இப்போது
சுள்ளெனும் மதியத்திலும்
ஒல்லெனும் ஊர் டார்ச் அடிக்கிறது
 
மதி;
வண்ணங்களால் ஒளிர்வது
சமயத்தில் பறக்குமாம்
அது துரிசையில் லயித்திருக்குமாம்
இனிவர் ஒருவர் முனிவர் ஆனதற்கு
அதுதான் காரணம் என்றார்கள்
பேருந்துநிறுத்தத்தில் பார்த்தவர்கள்
அதை மோகினி என்றார்கள்
பகல் எல்லாம் திரிந்துவிட்டு - அது
இரவு கிணறடையும் எனக் கட்டினார்கள்
கடுப்பான நிகண்டொன்று
மதி என்றால்
’மதித்தல்’ என்றும்
’தோழமையை மதி’ என்றும்
பொருளோடு எடுத்துக்காட்டியது
 
ஆயினும்
கிணற்றை எட்டிப்பார்த்தவர்கள்
இறைத்து தள்ளினார்கள்
வாளிக்கொரு மதியென
999மதிகள் வெளியேறியதும்
மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்ய
அம்மதி எங்கோ மறைந்துகொண்டது
அப்போது பெருமூச்சு விட்டவர்களுக்கு
அகராதி படித்த தலைவன் சொன்னான்
மதி என்றால்
ஸ்பெசல் தோசை என்றும்
தான் அதை
இரவு உணவாக சாப்பிடுவேன் என்றும்
 
- மகேஷ் பொன்
 

 

கருத்துகள் இல்லை: