அனுபவத்தை சோறாகவும்
படிமத்தை சாம்பாராகவும்
குறியீட்டை பொறியலாகவும்
ஹைக்கூவை ஊறுகாயாகவும்
சமைக்கத்தெரியும் எனக்கு…
அந்தாதியை ரசமாக்குவேன்
முரண் தொடையை மோராக்குவேன்
அறுசுவை படையல் செய்வேன்
நான் செய்யும் மான் பிரியாணிக்கு
ஒருசில பிரியர்கள் இருக்கிறார்கள்
அவர்கள் சாப்பிட்டுவிட்டு
வாவ் சொல்வார்கள்…
அதற்காக
நீ என்னை சமைக்க சொன்னால்
பிய்ந்த தோசைதான் கிடைக்கும்
காஃபி கூட பதமாக கிடைக்காது
உப்பும் உரப்பும் சொல்லவா வேண்டும்
ஏதோ ஒன்று கூடி ஒன்று குறைந்துவிடும்
பின்னர் அது
நீ எழுதிய கவிதை போல்
உரிப்பொருள் இல்லாமல் போய்விடின்
அதை நாய்களுக்குதான் போட நேரிடும்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக