பொதிகை மலை ஆதிவாசிக் காணிக்காரன் வாழ்வியலைப் படம் பிடிக்க வந்த அக்கா முனைவர் சுபாஷினி களத்தில் நேரடியாக நின்று மக்களையே பேச வைத்து அவர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துள்ளார்கள். பெரும்பாலும் வீடியோக்காரர்கள் இங்கே வந்து எதாவது கேட்டுவிட்டுப் போய் ஓவர் பிட்டப்போட அதை திரிச்சி வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். அதை எங்க ஆளுங்க பார்க்கும் போது உணர்வார்கள் என்ன ஒரு உருட்டு என்று. ஆனால் இந்த அக்கா மக்களையே பேச வச்சி வீடியோ பன்னியிருக்காங்க. மக்களும் தங்கள் இயல்பு மாறாமல் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கூறியுள்ளனர். அதனால் இது ஒரு சிறப்பான பதிவுதான். இரண்டு விசயங்கள் கொஞ்சம் நெருடலா இருந்தது ஒன்று சதா ரகம் இன்னொன்று முற்றிலும் கண்டிக்கப்படவேண்டியது.
ஒன்று - வீடியோவின் இடையில் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் கிணற்றடியில் நின்று தேவையின்றி உருட்டியிருக்கிறார். எங்கள் ஊருக்கு அந்த கிணறுதான் ஒரே நீர் ஆதாரமாம். இதலாம் நம்புற மாதிரியா இருக்கு. எங்க ஊர் இருக்கிறதே நதிகரையில்தான். தாமிரபரணி என்றாவது வற்றி பார்த்திருக்கிங்க? ஊருக்குள்ளயே ஊற்று இருக்கு. மழைக்காலங்களுக்கு பிறகு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஓடக்கூடிய சிற்றோடைகள் இருக்கு. நாங்க ஏன் அந்த கிணற்றை தண்ணீருக்காக நம்பி இருக்க போகிறோம். அந்த கிணற்றை ஒரு தனிமனிதன் நூறு மீட்டர் ஆற்றுக்கு நடக்க சோம்பேறித்தனப்பட்டு வீட்டு பக்கத்திலேயே வெட்டியிருப்பார்னு நினைக்கிறேன். அக்கிணற்றை அவருடைய வீட்டார்தான் பக்கத்தில் இருப்பதால் பயன்படுத்துகிறார்கள். வேறு யாரும் அந்த பக்கமே போவதில்லை. நிலைமை இப்படியிருக்க ஊரே அதை நம்பிதான் இருக்குனு தேவை இல்லாமல் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. காணி மக்கள் நலனில் எப்போதும் அக்கறைக்கொண்டு செயல்படும் தாங்கள் இன்னும்கூட அவர்கள் வாழ்வியலை களநிலவரத்தைப் புரிந்துகொள்வது நலம் பயக்கும். நல்லா தெரிந்தால் சொல்லலாம் இல்லையா எழுத்தாளரான நீங்கள் அதை கதையாக புனையலாம். உருட்டுகளை இப்படி ஆவணப்படுத்தினால் உண்மை என்ன செய்யும்?
இரண்டு – சுபாஷினி அக்கா முனைவர் பட்டம் வாங்கின தங்களுக்கு தெரியாதா தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து, அதன் தோற்றுவாய் குறித்து, கால்டுவெல் அவ்ளோ சொல்லியப் பிறகும் மலையாள மொழிக்கு தாய்மொழி தமிழ்னு தெரியாதா என்ன. நல்லா தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் பேசுவது தமிழ் மொழிதான் இரண்டாயிரம் வருடங்களுக்கும் முற்பட்ட ஆதி தமிழ் வார்த்தைகள் பலவற்றை இன்னும் வழக்கத்தில் பயன்படுத்தி வருகிறோம். தங்களுக்கு புதிதாக இருக்கிறது என்பதால் அதை நீங்களாகவே மலையாளம் என வரையறுத்துக்கொள்ளக்கூடாது. ஆங்கிலேயர்கள் வந்து எங்களுக்கு பள்ளிகள் மூலம் கல்வி போதிக்கும் முன்பே எங்கள் மலையில் தமிழ் கற்பித்த ஆசான்கள் இருந்திருக்கிறார்கள். அதன் வழிதான் என் தாத்தாக்களும் தாத்தக்களுக்கு தாத்தாக்களும் தமிழ் படித்து வந்துள்ளனர். தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பொதிகைமலையில் வாழ்ந்த எங்க ஆளுங்கதான் என நிறுவுவதற்கான தரவுகள் அந்த நூல்களிலையே உள்ளது அது தெரியுமா உங்களுக்கு. இப்போதும் எங்கள் ஊர் மக்கள் சங்க இலக்கியச் சொற்களை இயல்பாக பேசித்திரிகிறார்கள். சங்க இலக்கியப் பாடல்களில் வரும் மரம் செடி கொடி பூ மாதிரியான பெயர் சொற்கள் மற்றும் பல பயன்பாட்டு சொற்களுக்கு உரை எழுதிய அறிஞர்களே தவறான விளக்கம் அளித்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் உங்களுக்கு கடினமான அந்தப் பகுதி எங்கள் வாழ்வியலோடு இருக்கிறது. எங்களது பாஷையை எங்களுக்குள் பேசிக்கொள்கிறோம் அது ஆதித் தமிழ். உங்களுடன் உங்களின் இன்றையத் தமிழில் பேசுகிறோம் அவ்வளவுதான். அந்த படிக்காத மக்கள்கிட்ட போய் அவங்க வாயாலேயே மலையளம்னு சொல்ல வச்சிங்க பார்த்திங்களா திறமைதான். இருந்தாலும் நீங்கள் கருதியதை நிறுவ எண்ணுவது தவறு. படித்தவர் நீங்கள் கொஞ்சம் ஆய்ந்து அந்த அளவு வேண்டாம் கொஞ்சம் யோசித்து சொல்லியிருக்கலாம்.
எங்களிடம் அந்த மலையாள வாடை எப்படி வந்ததென்று நான் சொல்கிறேன். இப்போது நாங்கள் வசிக்கும் பகுதி பண்டைய சேரநாட்டின் ஒரு பகுதிதான். அப்போது சேரநாட்டில் தமிழ்தான் பேசினார்கள். மலையாளம் தோன்றியதே அதன் பிறகுதான் இம்மலையை பாண்டியர்களும் ஆண்டிருக்கிறார்கள். சேர மன்னர் மார்த்தாண்டவர்மன் எங்கள் மக்களால் வளர்க்கப்பட்டவர். பொதிகைமலையின் அந்த புறமும் இந்த புறமும் எம் மக்கள் ஆதி தொட்டு இருந்திருக்கிறார்கள் இப்போதும் இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாநிலம் பிரிக்கையில் பொதிகைமலையின் அந்தப் பக்கம் கேரளாவுக்கு போய்விட்டது. ஆனால் அப்பகுதியில் எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள் நாங்கள் இப்போதும் அவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்கிறோம். அவர்களுடன் உறவில் இருக்க அந்த மலையாளவாடை எங்களுக்கு தேவையாக இருந்திருக்கலாம். அவர்கள் கேரளாவுக்கு தள்ளப்பட்டதால்தான் மலையாளிகள் மற்றபடி அவர்களும் தமிழின் ஆதி குடிகள்தான். மலையாள மொழியில் இருப்பது பலவும் ஆதி தமிழ் வார்த்தைகளும் சில வட மொழிவார்த்தைகளும்தான் என்பது தங்களுக்கு தெரியாதா என்ன. என்னால் இபோதே தங்களுக்கு தெரியாத எங்கள் வழக்கில் இப்போதும் உள்ள நூறு வார்த்தைகளை வரிசைப்படுத்தமுடியும். அதன் அர்த்தத்தை நீங்கள் தமிழ் அகராதியிலோ சங்க இலக்கிய உரையிலோதான் தேட வேண்டும்.
அப்புறம் தாவரவியல் ஆய்வாளர்கள் சித்தமருத்துவ ஆய்வாளர்கள் சிலர் பழைய குறிப்புகளில் உள்ள மூலிகை மற்றும் தாவரத்தை எம்மக்களின் உதவியோடு இந்த மலையில் வந்து கண்டறிந்து சென்றுள்ளனர். குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99வகை பூக்களில் சரியாக 80 சத்வீதத்திற்கு மேல் ஆய்வாளர்களுக்கு அடையாளம் காட்டியது இதே பொதிகைமலை ஆதிவாசிகள்தான். எங்கள் பெயரைதான் சேர்க்கவில்லை அவர்கள் ஆராய்சி முடித்து முனைவர் பட்டம் வாங்கிக்கொண்டார்கள். எங்களை மலையாளி என்று அடையாளப்படுத்தி எங்கள் வரலாற்றை நீங்கள் பின்னுக்கு இழுத்திருக்கிறிர்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆவணப்படுத்துகிறேன் என்கிற பெயரில் ஒரு ஆதி தமிழ் இனத்தை அசிங்கப்படுத்திவிட்டிர்களே மேடம்.
நாங்கள் தமிழ்தான் பேசுகிறோம் தமிழ்தான் படிக்கிறோம் எங்களை மலையாளி என்று தவறாக அடையாளப்படுத்த வேண்டாம். யூடியுப் பல ஆயிரம் பேர் பார்க்கிற சமூக ஊடகம். சோ மேடம் முடிந்தால் அந்த மலையாளியாக எங்களை அடையாளப்படுத்தும் பகுதியை கட் செய்து பதிவேற்றுங்கள்.
- மகேஷ் பொன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக