கடிதம்1- கவிஞர் மனுஷ்யபுத்திரன்

 

தலைக்குமேல் வேலை கிடக்கிறது

சட்டென

உன் மேல் மனம் லயித்து

உட்கார்ந்துவிட்டேன்…

இந்த நூற்றாண்டு முழுக்க

இப்படியே இருந்துவிடுகிறேன்…

மீதி வேலையை

அடுத்த நூற்றாண்டில்

பார்த்துக்கொள்கிறேன் …

-     மனுஷ்ய புத்திரன்

-      

இந்த கவிதையை உள்வாங்கிக்கொள்ளவும் இந்த உணர்வை மனவோட்டத்தில் அனுபவித்து இன்புறவும் உரையோ அகராதியோ தேவைபடாது அல்லவா?

  

மனுஷ்ய புத்திரன் கவிதைகள் இதுவரை இயங்கி வந்த கவிதை தளத்தில் இருந்து இன்னொரு தளத்தில் பயணிப்பது. அதன் வடிவமும் சொல்முறைமையும் நவின கவிதையை அடுத்தக் கட்டத்திற்கு இழுத்து வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. புதுக்கவிதையின் தொடக்க காலச் சொற் சிலம்பங்களை நிறுத்திக்கொண்டு கவிதை நவினம், பின்நவினம் என்று முன்னுக்கு வந்த போது கவிஞர்கள் பூடகமாக சொல்கிறேன் பேர்வளி என்று எதையாவது எழுதுவது அல்லது எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத வகையில் இருண்மையாக எழுதுவதையே கடந்த கால் நூற்றாண்டாக செய்து வந்துள்ளனர். அதனால் நவின கவிதையின் முக்கிய அழகியலே படிப்பவனுக்கு விளங்காமல் இருப்பது எனும் அளவுக்கு போய்விட்டது. அப்படி செய்வதன் மூலம் தங்கள் மேட்டிமை தனத்தை காட்டி தங்களைப் பெரும் கவிஞர்களாக காட்டிக்கொள்ள முனைந்துள்ளனர். அவை இலக்கிய வாசகர்களைத் தாண்டி சாதாரணர்களை வாசிக்கவோ வாசித்து ரசிக்கவோ தூண்டுவனவாக இல்லை. அதற்கு  ஒரு முற்று புள்ளியை வைத்து மனித உணர்வுகளின் அன்றாடங்களில் இருந்து பாடுபொருளை எடுத்து அதை எளிய படிமம், உருவகம், குறியீடு, மற்றும் சிறந்த உவமைகள் மூலம் ஒரு சாதாரண வாசகன் படித்தவுடன் அதன் சாராம்சத்தை உணர்ந்து கொள்ளும்படியும் ரசித்து இன்புறத்தக்க வகையிலும் அதை தன் வாழ்வோடு  ஒப்பிட்டு சிலாகிக்கும் வகையிலும் கவிதையின் இயங்கு தளத்தை வேறு பாதைக்கு திருப்பி அதை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்ற வகையில் முதன்மையான கவிஞர் மனுஷ்ய புத்திரன் தான் என்பது என் துணிபு.

 

இப்படி கவிதையை எல்லோரும் ரசிக்கும்படி எழுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு பக்கம் கொண்டாடப்படுவது போல் இன்னொரு பக்கம் மனுஷ்ய புத்திரன் எழுதுவதெல்லாம் கவிதைகளா என தூற்றப்படுவதையும் காண முடிகிறது. அதிகப்படியான கவிதைகளை தாங்கள் எழுதுவதால் ஒன்றிரண்டு கவிதைகளில் எந்த ஒரு அழகியலும் இல்லாமல் கூட போயிருக்கும் அதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒட்டு மொத்தமாக தங்கள் கவிதைகளைப் புறம் தள்ளுவது அல்லது தங்கள் மீது வன்மத்தைக் கக்குவது கவிதையின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வரும் முட்டுக்கட்டைகளே என்பேன். மரபு கவிதை புதுக்கவிதையாக பரிணமித்தப் போது  புதிதாக முயற்சித்தவர்கள் இத்தகையத் தடைகளைத் தாண்டிதான் கவிதையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். தற்போது தங்களது கவிதைகள் கைக்கொண்டுள்ள வடிவமும்  தொனியும் உணர்ச்சியும் எளிமையும் காலத்தின் தேவை  கருதி நிகழ்ந்தவையே. அதனால்தான் வளரும் இளம் கவிஞர்கள் பலரும் தங்கள் பாணியை பின்பற்றி பின் வருகிறார்கள். மேலும் தற்போதுள்ள தலைமுறையினரிடம் தீவிர வாசிப்பு பழக்கம் என்பது இல்லாமலே போய் விட்டது. அவர்கள் போகிற போக்கில் படிப்பதற்கு கவிதை தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது. அந்த முயற்சியை தாங்கள் வெற்றிக்கரமாக நிகழ்த்தியிருக்கிறீர்கள்.

 

என்னளவில் நானும் ஒரு கவிஞராகும் ஆசை கொண்டிருக்கிறேன் ஆனால் ஒரு வாசகனாக கூட நெருங்க முடியாத கவிஞர்களை பின்பற்றி நான் எப்படி என்னை கவிஞனாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் தாங்கள் எனக்குள் இருந்த அந்த மனத்தடையை உடைத்திருக்கிறீர்கள். தங்கள் கவிதைகளுக்கு வாசகனாக லயித்திருக்கும் அதே வேளையில் ஒரு வளரும் கவிஞராக தங்களை நெருங்கவும் போலச் செய்யவும் வாய்ப்புகளை அமைத்து தந்திருக்கிறது உங்கள் கவிதை உலகம். முன்பு கவிஞர்கள் எல்லாம் பெரிய புலிகளாக இருந்தார்கள் அவர்களை நெருங்குவதில்  சிக்கல் இருந்தது அச்சம் இருந்தது.  அதிலிருந்து தாங்கள் உருமாறி ஒரு பூனையைப் போல் இருக்கிறீர்கள்.  இந்நிகழ்வை  உங்களை நோக்கி ஒரு கவிதையாகவே எழுதியிருக்கிறேன். அது

 

நான் வரிப்புலி வளர்ப்பவள்

----------------------------------------------

 

வரிப்புலியின் உறுமலுக்கு

இந்த வனம்

ஒரு முறை அதிர்ந்து அடங்கும்

 

அதன்

இரத்தமேறிய கண்களுக்கும்

பாயும் வேகத்திற்கும்

செந்நாய் கூட்டமும் ஒடுங்கும்

 

அதன்

கூரிய பற்களுக்கும்

பிராண்டும் உகிர்களுக்கும்

பெரும்களிரும் நடுங்கும்

 

அதன்

ராஜியம் மிகப் பெரியது

ஏழேழு மலைகளை உள்ளடக்கியது

 

நான் வழித் தப்பிய ஒரு நாள்

வனம் எங்கும் அலைந்து திரிந்து

வேட்டை நெடி வீசும்

அதன் குகை வாயிலில் போய் நின்றேன்

என்னிடம்

கவிதை எனும் நிராயுதத்தைத் தவிர

வேறெந்த ஆயுதங்களும் இல்லை

 

அது முறைத்துப் பார்த்தபோது

மரபுக்கவிதை சொன்னேன்

அது மெல்லமாய் உறுமியபோது

புதுக்கவிதை சொன்னேன்

அது சத்தமாய் உறுமியபோது

ஒரு பின்நவீனக்கவிதையை உரக்கக் கத்தினேன்

 

இன்னும் எனக்கு

ஹைக்கூ

செண்ட்ரியூ

லிமரிக்

கஜல்

______ கவிதைகள் கூடத் தெரியும் என்றேன்

பின்பு அது

கவிதையாக உறுமிக்கொண்டிருந்தது

அது வரிவரியாய் கவிதையை உறும உறும

அதன் மேலிருந்த அச்சம் தரும் வரிகள்

ஒவ்வொன்றாய் அழிந்துகொண்டிருந்தது

 

அப்போது நான்

சங்கக்கவிதை ஒன்றை சொன்னேன்

அந்த வரிப்புலி

முற்றிலும் வரியில்லாத புலியாக மாறிப்போனது

 

அன்றைய அந்தி பொழுதில்

அது ஒரு பூனையாக உருமாறி

மியாவ் மொழியில்

கவிதையைச் சொல்லத் தொடங்கியதும்

அதை என்னுடன் அழைத்து வந்துவிட்டேன்

இப்போது நான்

வீட்டிலேயே வரிப்புலி வளர்க்கிறேன்….

 

தாங்கள் இதற்கு ”ஒரு நொண்டி புலியை நெருங்குவதற்கு பயம் எதற்கு” என்ற பொருண்மையில் பதில் கவிதை ஒன்று எழுதியதாக ஞாபகம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் உண்மையில் இளம் தலைமுறையினர் கவிதை வாசகனாகவும் வளரும் கவிஞனாகவும் ஆக்கிக்கொள்ள தங்களின் இந்த கவிதாப்போக்கு தேவையாய் இருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

 

இனி கேள்விக்கு வருகிறேன். பதில் சொல்லிவிட்டு கேள்வி கேட்பது போல் தோன்றும். இருந்தாலும் அது என் அனுமானம் என்பதால் நிங்கள் தனிப்பட்ட முறையில் என்ன கருத்தில் உள்ளீர்கள் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதுதான் கேள்வி; இதுவரை இருந்த கவிதையின் போக்கிலிருந்து தங்கள் கவிதையின் போக்கு மாறி இருக்கிறதா? என்ன என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது? அடுத்தத் தலைமுறை கவிஞர்கள் பின்பற்றும் படியாக இந்த மாற்றம் நிலைக்கக் கூடியதா? நவின கவிதைக்கு இந்த மாற்றம் ஆரோக்கியமானதா?

 

தாங்கள் கவிஞராக மட்டும் இல்லாமல் பதிப்பாளராகவும் இருப்பதால் கூடுதலாக இன்னொரு கேள்வியும் உள்ளது. அது; இன்றைய சூழ்நிலையில் வாசகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ கவிஞர்கள் நிறைய இருக்கிறார்கள். கவிதை என்ற பெயரில் எதை எழுதினாலும் அதை பிரசுரிக்க அச்சு இதழ்கள், மின் இதழ்கள் இன்னும் ஒன்றும் இல்லை என்றால் சமூக வலைதளத்தில் பதிவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புத்தகமாக வெளியிடவும் செய்கிறார்கள். அதில் நூற்றுக்கு ஐம்பது தேறினால் வாங்கிய பணத்துக்கு பாதகம் இல்லை. ஒன்று அல்லது இரண்டு கவிதைகள் தேறும் அல்லது ஒன்றுமே தேறாமல் போகும் சூழ்நிலையில் பதிப்பகத்தாரை எண்ணி கடுப்பேறுகிறது. இதற்கு முக்கிய காரணம் கவிதைகளின் மீது மதிப்பீடுகளோ எதிர் விமர்சனங்களோ வற்றி போய்விட்ட இலக்கியச் சுழல்தான் என எண்ணுகிறேன். கவிதைகளை பிரசுரிக்க அல்லது நூல் ஆக பதிப்பிக்க தாங்கள் வைத்திருக்கும் வரையரைகள் அளவீடுகள் என்ன? அடுத்த தலைமுறை புதிய கவிஞர்களுக்கு தாங்கள் அறிவுறுத்த விரும்புவது என்ன?

 

                                                                                                              அன்புடன்

                                                                                                           திவ்யா ஈசன்

 

 

         

கருத்துகள் இல்லை: