வேட்டுவம் நூறிலிருந்து வேட்டுவம் ஆயிரத்திற்கு

நூற்பெயர்    :     வேட்டுவம் நூறு

ஆசிரியர்       :     மெளனன் யாத்ரிகா

வகை               :     கவிதை 

பதிப்பகம்     :      லாடம் வெளியீடு

 

            தற்கால இலக்கியப் பரப்பில் பசுமை இலக்கியத்தின் துளிர்களைக் காண்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த வகையில் மெளனன் யாத்ரிகாவின் வேட்டுவக் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. காட்டின் இயல்பு, அதன் வெவ்வேறு பரிமாணங்கள், அதிலுள்ள பல்வகை உறைவிடங்கள், வேட்டைச் சார்ந்த வாழ்க்கை, வேட்டை நாய்கள் என இக்கவிதைகள் கவனம் கொள்ளும் பகுதிகள் முக்கியமானவை. உண்மையில் இந்த வேட்டுவக் கவிதைகள் காட்டைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள புறவுலகைப் பற்றியும் ஓர் உணர்வுபூர்வமான புரிதலை நமக்கு ஏற்படுத்துகின்றன.

- சு. தியடோர் பாஸ்கரன்

 


 

    மெளனன் யாத்ரிகாவின் ”வேட்டுவம் நூறு” கவிதை நூல் என்மிது அக்கறைக்கொண்ட முகநூல் நண்பர் ஒருவர் மூலம் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது. படிப்பு / வேலைப்பளு காரணமாக அதைப் படிக்க நேரம் அமையவில்லை. தற்போது அந்நூலுக்கு எழுச்சித் தமிழர் விருது கிடைத்திருப்பதை அறிந்ததும் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். முதலில் அவருக்கு மனம்நிறை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
    பங்காளிக்கு சொல்லப்பட்ட வேட்டைத் தந்திரங்கள் பலவும் சிறப்பு. தொல் வேட்டை சமூகத்தின் காடறிவு அவருக்கு கைவந்திருக்கிறது. இப்போது உள்ள வனச்சட்டங்களால் தடை செய்யப்பட்ட ஒன்று வேட்டை. எனவே அவர் வேட்டைக்கு சென்றாரா என கேட்க முடியாது. அவர் நூறு கவிதைகளில் எடுத்துக்காட்டிய வேட்டை அவர்  வாழ்ந்த நிலம் சார்ந்தது. ஒரு சமூகத்தின் அனுபவத்திலிருந்து வேட்டை தந்திரங்களை பதிவு செய்துள்ளார் என எடுத்துக்கொள்வோம். அவர் உடும்பு, மீன், பன்றி என ஒரு சில விலங்குகள் வேட்டை குறித்தும் அதற்கு பயன்படுத்திய கவன், ஈட்டி, வில், பொறி போன்ற ஒரு சில வேட்டைக் கருவிகள் குறித்தும் எப்போதும் வேட்டைக்கு உடன் இருக்கும் வேட்டை நாய்கள் குறித்தும் மோப்பம் பிடித்தல், நாற்றத்தின் மூலம் விலங்கின் போக்கறிதல் குறித்தும் வேட்டையின் போது நடந்த சில உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் குறித்தும் கள அனுபவத்தை அப்படியே சித்தரித்துள்ளார். இதை  கதையாகவோ கட்டுரையாகவோ செய்வது எளிது. ஆனால் கவிதையாக செய்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது
 
    அவர் வாழும் அரியலூர் மாவட்டத்தில் மலை, காடு எல்லாம் இருக்கா என எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் வேட்டைக் குறித்த வாழ்வியலை ஊர்நாட்டவரான உங்களுக்கு சிறப்பாகவும் மலைநாட்டவரான எங்களுக்கு சுமாராகவும் வரைந்து காட்டியுள்ளார். ஆனால் அந்த வாழ்வியல் சம்பவங்களும் உணர்வுகளும் ’இவர் நம்ம ஆளா இருப்பாரோ’ என எனக்கே சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் தான் பழங்குடியினர் இல்லை என்பதை  நூலின் முன்னுரையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். வேட்டை சமூகத்தில் இருந்து இன்னமும் முற்றிலும் விடுபடாத ஒரு பிரஜை நான். எங்களிடம் வேட்டை குறித்த தரவுகளும் பழம் நிகழ்வுகளும் காடுவாழ்வு அனுபவங்களும் நிறைய இருக்கிறது. இப்போது உள்ள சட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு அதை வெளிப்படையாக பேச முடியாது. அதனால் இதைப் பேசலாமா? அதைப் பேசலாமா? பேசக்கூடாதா? என குழப்பத்தில் இருந்தேன். இந்த நூலைப் படித்தப்பிறகு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. 
 
    எங்கள் நிலத்தில் கடுவா, சிங்கவால் குரங்கு, செந்நாய் தவிர்த்து பலநூறு விதமான விலங்குகள் வேட்டையாடப்பட்டிருக்கிறது. கவனிக்க.. எங்கள் முன்னோர்களால் வேட்டையாடப்பட்டிருக்கிறது.  சொன்னால் நம்ப மாட்டீர்கள் கீழே சமவெளியிலிருந்து வந்து எங்களைச் சுரண்டிப்பார்த்த மனிதர்களையும் வேட்டையாடியிருக்கிறார்கள். யானை, கடமான், சிறுத்தை, கரடி, மிளா, வரையாடு, கேளாடு, மான், பன்றி, முள்ளன், கூரன், கடுவன், குரங்கு, காட்டெருமை, அலுங்கு, முயல், உடும்பு, வெருவு, அண்ணி, ஆமை, கோழி என பட்டியல் ரொம்ப நீளம். சில பாம்புகளையும் பிடித்து தின்னிருக்கிறார்கள். மேற்படி கவிதை நூலில் வேட்டை நாய் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு அது குறைவு எந்த விலங்கை எப்படி பிடிக்க வேண்டும்? எப்போது பிடிக்க வேண்டும்? எந்த வகை பொறி அல்லது தந்திரத்தில் பிடிக்க வேண்டும்? அதை எப்படி உரிக்க வேண்டும்? எப்படி சமைக்க வேண்டும்? எப்படி பங்கிட வேண்டும்? எப்படி பதப்படுத்த வேண்டும்? என பலநூறு வித்தைகளை கையாண்டிருக்கிறார்கள். அதற்கான காடு சார்ந்த அறிவை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களால் ஒரு மந்தி கூட்டத்தில் யார் தாய்? யார் மகன், மகள்? இன்னும் யார் யாருக்கு மாமா? என்றெல்லாம் பிரித்தறியும் அறிதிறனோடு வாழ்ந்திருக்கிறார்கள். மீன் பிடிக்க, தேன் எடுக்க, பாம்பு பிடிக்க என்று அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் எல்லாம் அவர்கள் எந்தளவுக்கு இயற்கையை அதன் இயல்புகளோடு புரிந்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 
     
    வேட்டை ஒரு போதும் அவர்களுக்கு சிரமம் இல்லை. அது ஒரு கொண்டாட்டம். 
 
“ பூமிக்குள் தானியங்கள் உறங்கும் காட்டில்
கால்களை ஊன்ற முடியாமல் ஓடும்
அந்தச் சிறு முயலை விரட்ட வேண்டாம்
களைப்புற்ற உயிரின் கண்களை எதிர்கொள்ள இயலாது
இதயத்தால் பார்க்கத் தொடங்கிவிடுவோம்
அதை விட்டு விடுங்கள்
தாழம்புதருக்கு அருகில் அதற்கொரு குழி உள்ளது
அங்கு அதற்கென ஒரு இணை உள்ளது
ஏலே பங்காளி
விலங்குகள் மட்டுமே வேட்டையின் குறியன்று
கள்ளிப்பழங்களும் காட்டில் உணவுதான்.”
 
- இது வெறும் கவிதையல்ல வேட்டை சமூக வாழ்வின் ஒரு உன்னதம். இந்த உன்னதம் என் வாழ்வியலோடு என்னைத் தைத்தது. இத்தகைய நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். எங்கள் மலையில் வேட்டைக்குப் போன இடத்தில் தாயை இழந்த அண்ணியை எடுத்து வந்து வளர்த்திருக்கிறார்கள். அடிப்பட்ட சிறுத்தைக் குட்டியையும் கூட்டத்திலிருந்து தப்பிய கடமா கன்றையும் வளர்த்து காட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். செந்நாய் கூட்டத்திடமிருந்து மானை காப்பாறியிருக்கிறார்கள். இங்கே இத்தகைய நிகழ்வுகள் இன்னும் ஏராளம். சிறந்த வேட்டைக்காரனை ஊர் மதித்திருக்கிறது பெண்கள் விரும்பியிருக்கிறார்கள். இந்நூலில் பங்காளிக்கு சொல்லப்பட்ட வேட்டை வாழ்வு நம்மையும் விரும்பச் செய்யும்.
 
    இந்த நூலைப் படித்துமுடித்தப்போது வேட்டுவம் நூறு இல்ல வேட்டுவம் ஆயிரம் என்னால் எழுதமுடியும் என உந்துதலைப் பெற்றுள்ளேன். அதை சட்டதிட்டங்களுக்கும் வனத்துறைக்கும் இடைஞ்சல் இல்லாமல் எப்படி பதிவு செய்வது என்பதுதான் பிரச்சனை. எல்லாவற்றையும் எதோ ஒரு வடிவில் கவிதையாகவோ, கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது நாவலாகவோ நிச்சயம் விரிவாக பதிவு செய்ய நினைத்திருக்கிறேன். இதற்காக மௌனன் யாத்ரீகாவுக்கு நன்றியும் அவர் படைப்புத் திறனுக்கு வாழ்த்துகளும் சொல்லிக்கொள்கிறேன். 
  
ஏலே பங்காளி
உணவுச் சங்கிலியை இந்தக் காடு
இறுக்கிக் கட்டி வைத்திருக்கிறது
அதை அவிழ்க்கும் நுட்பத்தைத் தேடு

    இந்நூலில் இடம் பெற்றிருப்பவை நிச்சயம் வெறும் கவிதைகள் மட்டுமல்ல. அது ஒரு இனக்குழுவின் வரைவியல். படித்துப் பாருங்கள்....
 

                                                                                                                                    - மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை: