நூற்பெயர் : மாலை மலரும் நோய்
ஆசிரியர் : இசை
வகை : உரை
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும்
சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக்
காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை.
பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப் பரவசமே
மேதைமையாக, நகையுணர்ச்சியாக, உபாசனையாக, விளையாட்டாக, திகைப்பாக,
குழந்தைமையாக நூலெங்கும் வெளிப்பட, கடைசிப் பக்கத்திற்குப் பின்பு, காதலின்
அத்தனை ஆட்டங்களையும் அறிந்த ஒரு கவிஞனாக, தோழனாக வள்ளுவன் எழுந்து
வருவதைப் பார்க்கிறோம். அறத்தையும் பொருளையும் சற்றே நெகிழ்த்திவிட்டு அவனை
அப்போது அறியவும் நெருங்கவும் முயல்வது நமக்கு அவசியமானதும்கூட. ஆசையின்
எளிய ஜீவன்கள்தானே நாமெல்லாம் இல்லையா?
- வே. நி. சூர்யா
திருக்குறள் பற்றியோ திருவள்ளுவர் பற்றியோ சிறுகுறிப்பு வரைந்தே பள்ளி படிப்பை முடித்துவிட்டோம். திருக்குறளை 1ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை தொடர்ந்து படித்து வந்துள்ளோம். திருக்குறள் இயல் பகுப்பு- அறம், பொருள், இனபம், அதன் பாடல் எண்ணிக்கைகள், திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள், திருவள்ளுவரின் வேறு பெயர்கள், அதற்கு உரை எழுதியவர்கள் என்று போட்டித் தேர்வுக்கான விடைகளாக மனதில் பதிந்துள்ளது. இப்போது யோசித்தால் கூட நூறு குறள்களுக்கு மேல் சொல்லிவிட முடியும் அத்தனைத் தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது. தமிழ் படித்த படிக்காத மக்களின் மனதிலும் கூட ஏதேனும் ஒரு குறள் இருக்கிறது. மேலும் அறம் சார்ந்த சில கருத்துகள் “முயற்சி திருவினையாக்கும்” "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனபனப் போன்று சொலவடைப் போல் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன.
”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்பதில் தொடங்கி- படித்த குறள், பிடித்த குறள், ரசித்த குறள் என்று வரிசை கட்டினால் கட்டுரையின் நோக்கம் பிதுங்கிவிடும். அதனால் என்னை உள்ளுர தைத்த ஒரு பத்து குறளை மட்டும் சொல்லிவிட்டு விசயத்துக்கு போகிறேன்.
”தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”.
”இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்”.
”அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை”
”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”
”சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.”
”வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.”
”பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.”
”தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”
”நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.”
இதைவிட ஒரு சிறந்த அறத்தை இவ்வுலகிற்கு யார் வந்து போத்தித்துவிடப் போகிறார்கள். இயேசு, புத்தன் கூட வள்ளுவனுக்கு பின்னால்தான் வர வேண்டும். நம் தமிழ்ச் சமூகம் இத்தனை பண்பட்டு இருப்பதற்கு காலம் காலமாக திருக்குறள் ஒரு உசாதுணையாக இருந்திருக்கிறது. அதன் இடத்தை யாராலும் வெல்ல முடியாது. அதன் அறத்தின் முன் அரசியலின் முன் நாமெல்லாம் சிறுபிள்ளைகள்தான். திருக்குறளை உலகப்பொதுமறை என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை அது அத்தனை சார்பற்றது தனித்து நிற்பது.
அதில் காமத்துப்பால் என்று ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை குறுந்தொகை முதலிய சங்க இலக்கியங்களை தூக்கிச் சுமந்த அளவுக்கு சுமக்காமல் விட்டது வியப்பளிக்கிறது. நான் இளங்கலை கல்லூரி முடிக்கும் வரை காமத்துப்பாலில் இருந்து ஒரு திருக்குறள் கூட பாடத்திட்டத்தில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் கல்லூரி முதலாம் ஆண்டிலேயே ”செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன்வே” அறிமுகம் அப்பாடல் அப்போது அத்தனைக் கிளுகிளுப்பாக இருந்தது. தமிழனின் அகப்பாடல்கள் மனதோடு பொருந்திக்கொண்டன. தேடி படிக்கத் தூண்டியது. அந்தப் பாடலுக்கு கொஞ்சமும் குறைவில்லாத காமத்துபால் காதல் பாடல்களை பள்ளி, கல்லூரியில் ஏன் அறிமுகம் செய்யவில்லை எனத் தெரியவில்லை. ஒரு வேலை திருவள்ளுவரின் புனித பிம்பம் உடைந்துவிடும் என விட்டுவிட்டார்களோ என்னவோ.
இது நாள்வரையில் காமத்து பாலில்இருந்து இரண்டே குறள்கள் மட்டும்தான் எனக்கு அறிமுகம் ஆகி இருக்கிறது. அதை எனக்கு விளக்கியவன். அத்தனை ரசித்து விளக்கினான். அதனாலே அக்குறள்கள் எனக்கு மனப்பாடம். இரண்டு குறள்களும் சேர்ந்து அதுவே ஒரு கவிதைப் போல் இருக்கும். அதன் காதல் ரசம் அலாதியானது கீழே தருகிறேன். பருகிப்பாருங்கள்.
”ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள”
”கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”
காமத்துப்பால் படிக்க முடியாமல் போனக் குறையை கவிஞர் இசை அவர்கள் ”மாலை மலரும் நோய்” மூலம் நிறைவு செய்திருக்கிறார். உரையுடன் கூடிய பல திருக்குறள் நூல்கள் வீட்டில் இருக்கிறது. ஆனாலும் இத்தனை நாளும் அதை எடுத்து படித்ததில்லை. எப்போதாவது எடுத்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கத்தைப் புரட்டிப் பார்த்தாலும் அதன் உரையாசிரியர்கள் சொல்லுக்கு சொல் விளக்கி நம்மை சலிப்படையவே செய்திருக்கிறார்கள். அதனால் அது முழுமையும் இது நாள் வரைப் படித்ததும் இல்லை.
இந்த ”மாலை மலரும் நோய்” தலைப்பிலேயே நம்மை ஈர்க்கிறது. அதன் அட்டைப்படத்தில் எழுத்தாணியுடன் திருவள்ளுவர் இல்லை. எனவே நூல் கண்ணில்பட்டால் யாருக்கும் ஒருமுறை எடுத்து புரட்டிப் பார்க்கத் தோன்றும். அப்படி புரட்டிப் பார்த்தப் போதுதான் அது திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரை என்றே தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்தப் போது அத்தனை சுவாரஸ்யமாய் உரை எழுதி இருந்தார்.
-குறள்,
-சீர் பிரிப்பு குழப்பும் குறளுக்கு எளிய சீர் பிரிப்பு,
-அதன் நேர் பொருள்,
-அதற்கு இன்றைய நடையில் எளிய விளக்கம்,
-சங்க இலக்கியம் மற்றும் நவின சூழலோடு அனேக குறள்களுக்கு ஒப்பீடு,
-கடைசியாக அக்குறளில் உள்ள கடினமான சொற்களுக்கு அருஞ்சொற்பொருள்
என்ற வரிசை முறையில் சிரத்தையோடு நல்லதொரு உரை செய்திருக்கிறார். மற்ற உரையாசிரியர்கள் செய்யாத ஒன்றையும் இசை செய்திருக்கிறார். அது அடுத்தடுத்த அதிகாரங்களுக்கிடையே உள்ளத்தொடர்பை அந்தந்த அதிகாரங்களின் தலைப்பிலேயே சொல்லியிருக்கிறார். ஆனால் திருவள்ளுவர் அந்த வரிசைகிரமத்தில்தான் யோசித்து இயல்களை அடுக்கினாரா எனத் தெரியாது. இசை சொல்வது கருதுகோளாக இருந்தாலும் ஏற்கும் விதமாகவே இயல்களின் வரிசை அடுத்தடுத்து வருகிறது. களவியல், கற்பியல் அதன் உள் இயல்கள் அதை மெய்ப்பிக்கும் விதமாகவே உள்ளது.
“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.”
ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் இடத்தில், அவள் அழகில் விழும் இடத்தில் காதல் தொடங்குகிறது. இசை சொல்வது போல் முதல் இயலும் இக்குறளில் இருந்தே தொடங்குகிறது. ஒரு அழகியப் பெண்ணை முதன்முதலாக பார்த்தவுடன் ”யப்பா… பொண்ணாடா இது” என்போமே அப்படி ஒரு குறள்தான் இது.
இந்த உரையாசிரியர் கவிஞர் என்பதுதான் கூடுதல் சிறப்பு. வள்ளுவனின் கவிதையில் அவர் அத்தனை லயித்திருக்கிறார். அந்த பொருள் சுவையை, காதல் சுவையை காம சுவையை நமக்கும் கடத்தியிருக்கிறார். அவர் சொல்வது போல் காமத்துப்பால் காமசூத்திரம் அல்ல அதில் புணர்வது எப்படி என சித்தரிக்கப்படவில்லை. அவரவர் காதல் வாழ்வும் கற்பு வாழ்வும் தான் உய்த்துணரும்படி உள்ளது. இன்னும் குறளில் எங்குமே ’அல்குல், என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பதும், முலை’ என்ற சொல் கீழ்க்கண்ட ஒரே ஒரு குறளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது.
”கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.”
இதிலிருந்தே அதன் விரசத் தன்மையை நாம் எடை போடலாம்.
இசை ஒரு கவிஞர் என்பதாலேயே திருக்குறளை வைத்துக்கொண்டு நம் உணர்வுகளோடு விளையாடி இருக்கிறார். நான் ஒரே நாளில்தான் படித்து முடித்தேன். அந்த 2000 வருடத்திற்கு முந்தைய தமிழனின் அகவெளியில் இருந்து வெளியே வர ஒரு வாரம் ஆகலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு குறளையும் உள்ளுர உணர பரிமேலழகரைவிட இசை நமக்கு உதவுகிறார்.
யார்டா அந்த அழகர்னு நானே குழம்பிவிட்டேன். பரிமேலழகரை அழகர் என இவர்தான் முதலில் சுருக்கியிருப்பார் போலும் வேறு எங்கும் அழகர் என படித்த மாதிரித் தெரியவில்லை. இசைக்கு அத்தனை சொல் சிக்கனம். இன்னும் இனியர், தத்தர், குடவர், வரதன், சாலமோன் என்றாலும் நாம் குழம்பாமல் புரிந்துகொள்ள இது ஒரு அடிப்படை என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஒற்று மிகும்இடம் மிகாஇடம் தமிழுக்கு எத்தனை முக்கியம் என்பதை மண்டையில் ஒரு போடு போட்டு சொல்லியிருக்கிறார். அதுவும் உண்மைதான் கீழ்க்கண்ட குறளில் வரும் ”காமக்கடும்புனல்” என்ற சொல்லை ”க்” இல்லாமல் படித்தால் நமக்கே அது புரியவரும் படித்துப் பாருங்கள்
”காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்”
காமப் பெரும் வெள்ளத்தில் நீந்தி கரையேராமால் இரா முழுவதும் இருப்பதன் அந்த காம மிகுதியின் சாரம் உண்மையில் அந்த ”க்” எனும் ஒற்றில்தானே இருக்கிறது. இதற்காகவேனும் இலக்கணப் பிழையில்லாமல் தமிழ் எழுதப் பயில வேண்டும்.
குறிப்பறிதலில் ஒரு குறள், கண்கள் பார்த்துக்கொள்வது காமதில் கிடைக்கும் பாதி இன்பத்தினும் மேலானது’ என்பதை கவிஞர் சொல்வது போல் நானும் ஸ்பெசல் கிளாஸ் சென்று அனுபவத்திருக்கிறேன்.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
புணர்ந்துதான் தீர்க்க வேண்டும் என்று இல்லை. புணர்ந்தால் தீர்ந்து போகும் காமம் பார்க்க பார்க்க தீராமல் பாதிக்கு மேல் சென்றுநின்று கொண்டேதான் இருக்கும். அப்படி ஒரு பார்வை என்னவென்று அதை அனுபவித்தவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.
காதற் சிறப்புரைத்தலில் ஒரு குறள், காதலியின் வாயில் ஊரிய எச்சில் எத்தனை சுவை மிக்கது என்பதை கூறுகிறது. அது
”பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”
இந்த தீஞ்சுவை நீரைப் பெறாமல் வெறும் செல்வத்தை மட்டும் பெற்று என்ன பயன் என்று ஒரு தலைவன் பொருள்வயின் பிரிவையே கைவிட்டு ஒரு லிப் கிஸ்க்காக வீட்டிலேயே இருந்துவிடும் செய்தியை குறுந்தொகையில் இருந்து ஒப்பிட்டு காட்டி இருப்பது உங்கள் முத்தம் எந்த அளவில் உள்ளது என்பதை உணரச்செய்யும். அப்படி ஒரு முத்தம் வாய்க்கப் பெறாத என் போன்றவர்கள் தேனையும் பாலையும் கலந்து குடித்துப் பார்க்கலாம்.
காதல் குறித்து ஊர் அலர் தூற்றினால் அது வள்ளுவர் காலத்தில் திருமணத்தில் போய் முடிந்திருக்கிறது. அது
”தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்”
ஆனால் அலரின் இன்றைய நிலைமை வேறு. நாலு பேரின் நாக்கு ஆணவப்படுகொலை வரை காதலை அழத்து செல்வதாக வருத்தப்படும் இசை ”காதலை வாழவிடுங்கடா” என்பது போல் இக்குறளுக்கு உரை அமைத்துள்ளார்.
கண்விதுப்பு அழிதலில் ஒரு குறள்,
“வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்”
இக்குறளுக்கு பழைய உரையாசிரியர்கள் எல்லாம் ”தலைவன்பிரிந்திருக்கும் காலத்தில் தலைவி அவரின் வரவு பார்த்து தூங்காமல் இருந்ததாகவும் வந்தபின் பிரிவு அஞ்சி தூங்காமல் இருந்ததாகவும் விளக்கம் தர, இசை உண்மையை சொல்லியிருக்கிறார் தலைவன் வந்த பின் தூங்காமைக்கு காரணம் ”ஓயாத புணர்வின்பம்” என்றுதானே கொள்ள முடியும்.
பொழுது கண்டிரங்களில் ஒரு குறள், மாலைப் பொழுது காதலருக்கு எத்தனை கொடிது என்றும் அது மாலையே அல்ல உயிர் உண்ணும் வேல் என்றும் பொருள் கொண்டுள்ளார். அக்குறள்
”மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.”
இதில் ”வேலை” என்பதை ’வேல்’ என பொருள் கொண்டது போல் ’வேளை’ எனவும் பொருள் கொண்டு மாலை வேளையை ”வாழி பொழுது” என வஞ்ச புகழ்ச்சியாக வாழ்த்துவதாகவும் பொருள் கொண்டுள்ளார். அதை நேரடியாகவே வேலை –தொழில் என்றே பொருள் கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து. ”மணந்தார் உயிருண்ணும் வேலை” என்பதிலிருந்து தலைவனும் தலைவியும் காதலர் அல்ல மணமானவர்கள் என்பது தெளிவு. எனவே அவர்கள் ஒருவர் உயிரை ஒருவர் உண்ணும் காமத்தொழிலை செய்வதற்கு மாலைப் பொழுது உண்மையில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்திருக்கலாம். அதனாலேயே ”நீ வாழி பொழுது” என மாலைப் பொழுதை வஞ்சபுகழ்ச்சியாக இல்லாமல் நேரடியாகவே வாழ்த்தி புகழ்ந்திருக்கலாம்.
குட்டி, புச்சுக்குட்டியோடு விடாமல் ப்புச்சுக்குட்டி என விளிக்கும் தற்போதைய பன்மாயக் கள்வன்கள் வள்ளுவர் காலத்தில் பெண்மையை உடைக்க என்ன என்ன அமுத மொழி பேசினார்களோ? கீழ்க்கண்ட இந்த குறளை அப்படியே நமது கற்பனைக்கு திறந்துவிட்டிருக்கிறார்.
”பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.”
உங்கள் காதலியரின் பெண்மையின் உறுதியினை எந்தப் படையைத் திரட்டிக் கொண்டுபோய் உடைத்தீர்கள் என உங்களுக்குத்தானே தெரியும்.
புலவி இயலில் ஒரு குறள்
”ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதல்அரிந் தற்று”
ஊடலின் தார்மீகம் உணராமல் விடுவது ஏற்கன்வே வாடிய ஒரு கொடியின் அடியை அருத்து அதன் பற்றுதலை அற்றுப்போக செய்வது. கொடி திரும்ப வளர்ந்து பற்ற நாளாகும் என்பதுதான் கருத்து என எண்ணுகிறேன். இங்கு கொடி வேரோடு பிடுங்கப்படவில்லை எனவே அடி அருத்தக் கொடி இசை சொல்வது போல் மீள வளராமல் போகாது. வளரும் வாய்ப்பிருக்கிறது.
”ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
ஊடலே கூடல் சிறக்கத்தானே? என இசை கேட்கிறார். அது அப்படிதான் இருக்கும் போல். நானே எங்கள் ஊரில் நிறையப் பார்த்திருக்கிறேன். காலையில் கடித்து துப்பி வேலைக்கு அனுப்பும் கணவனுக்காக மாலையில் சீவி சிங்காரித்து பூச்சூடி காத்திருக்கும் அக்காமார்களை. கணவனை கழுவி ஊத்தும் மனைவிகள் வருடத்துக்கு ஒன்றென இறக்குமதி செய்வது இப்படிதான் போலும். சிறு சண்டை இல்லாத வாழ்வு எங்ஙனம் இருக்குமோ. ஊடலுக்கு பின் கூடுவது, ”கிடைக்காமல் போகுமோ என ஐயப்பட்டது கிடைப்பது போல்” ஒரு உணர்வை தரும்தானே. அதுதான் ஊடலுக்கு பின் கூடுவதன் இன்பம் என்கிறார்.
அறநூல்கள் வரிசையில் இருக்கும் திருக்குறளை அகநூல் வரிசைக்கு இடம் பெயர்த்திருக்கிறார் இசை. மேலும் கபிலர், பரணர் போன்ற சங்க கவிகளுக்கு எந்த வகையிலும் திருவள்ளுவர் சலைத்தவர் அல்ல என்பதை ”மாலை மலரும் நோய்” மூலம் நிறுவி இருக்கிறார். அதற்காகவே இசையைப் பாராட்டலாம். புதிய வாசிப்பாளர்களுக்கு இந்த உரை வெளிச்சத்தை கண்டடையச் செய்யும்.
இந்த நூல் முழுமையையுமே இளங்கலைத் தமிழ் பாடத்திலும் மற்ற இளங்கலைப் பாட பிரிவிற்கு இரண்டு இயல்களையேனும் வைத்து கல்லூரி மாணவர்களுக்கு திருவள்ளுவரின் காமத்துப்பாலை அறிமுகம் செய்ய உயர்கல்வி துறைக்கு பரிந்துரைக்கலாம். பள்ளி வரையில் குறளில் இருந்து அறம், பொருள் படித்தது போதாதா என்ன. கொஞ்சம் காமமும் பழகட்டுமே. தமிழனின் இந்த அகவாழ்வு சித்திரங்கள் அவர்களின் மணவாழ்வுக்கு உதவும்தானே.
இசை அவர்கள் ஒரு சில சொற்களுக்கு பொருள் கொள்ள தடுமாறி இருக்கிறார். பழைய உரையாசிரியர்கள் கூட உதவவில்லை என நினைக்கிறேன். அப்படி மங்கலாக கடந்து போன சொற்கள் ஆய்மயில், சிறக்கணி, அசையியற்கு, கருக்காய்,- சிலத் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன் அது இசைக்கு சரியாக பொருள் கொள்ள ஒரு வேளை உதவலாம்.
எங்கள் ஊரில் குறுமா, ஆய்மா, முத்தை என்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அவை முறையே சிறுவர்களையும் பருவ வயதினரையும் முதியவர்களையும் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. மேலும் பறவைகள் கூட்டில் இருந்து முதன்முதலில் வெளியேறி தத்தி தத்தி பறப்பதை அது செறக்காணிக்கு என்று சொல்ல கேட்டிருக்கிறேன். அது ’சிறக்கணி’ என்ற சொல்லின் பேச்சு வழக்காக கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. ’அசையில் துணி காயப்போடு’ என இங்கு இயல்பாக பேசுகிறார்கள். ’அசை’ என்ற சொல் இழுத்துக் கட்டப்பட்ட கொடியை குறிக்க பயன்படுத்துகிறார்கள். அதுபோல தென்னை மரத்தின் பால் பொதிந்த இளம் காயை ’கருக்காய்’ என்கிறார்கள்.
காமம் ஒரு சைத்தான் அது தலைக்குமேல் ஏறியப் பிறகு காலை என்ன மாலை என்ன என இசை நம்மை நாள் முழுவதும் நோய்வாய்ப்பட வைத்திருக்கிறார். அங்ஙனம் நோய்வாய்ப்பட்டுதான் வள்ளுவரும்
”காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்”
என்கிறார்.
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக