நகுலனின் சுசீலா: நகுலனின் சரஸ்வதி




    எழுத்து, வானம்பாடி, மணிக்கொடி கால கவிஞர்கள் தேவையில்லாமல் சொற்சிலம்பம் செய்துகொண்டிருப்பார்கள் விரியும் காட்சியோ உணர்ச்சியோ குறைவுதான். வெற்று சொற்களைப்போட்டு கொசபுசா எனக் குழப்பிக் கொண்டிருப்பார்கள். அது கவிதை தன்னை நவீனத்துவத்துக்குள் புகுத்திக்கொண்ட காலம் என்பதால் அத்தகைய சொல் விளையாட்டுகள் பொருள் இல்லாமல் போனாலும்கூட கவிதையின் மரபான வடிவத்திலிருந்து மீறி நின்றதால் அக்காலக்கட்டத்தில் ரசிக்கப்பட்டிருக்கலாம். எழுபது என்பதுகளில் வந்த கவிதைகள் அறுபது சதவீதத்துக்கு மேல் குப்பைகள்தான் என்று எனக்கு அக்கவிதைகளை அறிமுகம் செய்தவன் பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டு நகுலன், பிரமிள் போன்றவர்களின் கவிதை தொகுப்புகளை வாசிக்கத் தந்துவிட்டுப் போனான்.

    நானும் அதையெல்லாம் உன்றி முழுமையாக படிக்கவில்லை அவ்வப்போது ஒன்றிரண்டைப் படித்ததோடு சரி. ஒரு சனி ஞாயிறில் நகுலனின் கவிதைகளை உள்வாங்கி படிக்கத்தொடங்கினேன். நன்றாகதான் எழுதியிருக்கிறார். சில கவிதைகளைத் திறந்து கொள்ள மேலும் அவரின் சுசீலாவை யாரென கண்டறிய எனக்கு அவரின் வாழ்வியல் குறித்த தகவல் தேவைப்பட்டது. கேட்டு தெரிந்துக்கொண்டேன் அதன் மூலம் அவரின் தனிமை மற்றும் பித்துநிலையில் எழுதப்பட்ட பல கவிதைகள் திறந்துகொண்டன. அவரது “மரம்: மழை: காற்று” கவிதையா நாட்குறிப்பானு எனக்கே ஐயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த கவிதை அவர் வாழ்ந்த காலம், சூழல் மற்றும் அவரின் கவிதா மனவெளியைப் புரிந்துகொள்ள உதவின. அதன் உதவியோடு அவரது பல கவிதைகளையும் ரசிக்க முடிந்தது. இன்னும் பிடிபடாமல் இருண்மையில் இருக்கும் சில கவிதைகள் புரியாமல் போவதற்கு அவர் அனுபவித்த அந்த வாழ்வியல் அனுபவத்தை நான் இன்னும் என் அனுபவத்தில் உணரவில்லை என்பதுதான் காரணமாக இருக்க முடியும். மனுசன் திருமணமே செய்துகொள்ளாமல் அந்த அறையில் தனிமையில் வாழ்ந்து என்ன மாதிரியான அனுபவங்களைப் பெற்றாரோ. அந்த வகையில் பல கவிதைகள் கனவு நிலையிலும் எழுதப்பட்டுள்ளன. எளிமையான சொற்களால் காட்சிகளாக விரிகிற பலக் கவிதைகளைப் பார்க்க முடிகிறது. புதுக்கவிதை வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஆள் நகுலன் என்பதற்கு சான்றாக பல தரமிக்க கவிதைகளைத் தந்துள்ளார். 
 
’இல்லாமல் இருப்பது’ என்று ஒரு கவிதை
”இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்”
 
    அவர் தனிமையில் இருந்தார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்
”என் அறையில்
நான்
என்னுடன் இருந்தேன்”
என்கிறார்.
     
    அவரது பல கவிதைகளில் ”சுசீலா” என்ற பாத்திரம் திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது. நானும் அது அவரது கற்பனையான காதலியாக இருக்கும் அல்லது எதாவது செட்டப்பாக இருக்கும் என்ற கண்ணோட்டத்திலேயே அந்த கவிதைகளைப் புரிந்துகொண்டேன். ஆனால் அது உண்மையில்லை என்பதை அத்தகையக் கவிதைகளில் இருண்மைப்படும் வரிகளில் இருந்து விளங்கிக்கொள்ள முடிந்தது. சரினு அந்த கவிதைகளைப் படிக்க சொன்ன அறிவாளிக்கு போன் பன்னி கேட்டேன். அவன் சுஜாதாவின் வசந்த் பாத்திரம் பற்றி அரை மணி நேரம் பேசிவிட்டு சுசீலா குறித்து பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. “ சுசீலா ஒரு கற்பனை நாயகி அத்தனைதான் அது கவிதையில் இடம் பெறும் வார்ப்பை பொறுத்து காதலியாகவோ நல்ல துணையாகவோ அல்லது வேறு எதுவாக பொருந்துகிறதோ அதுவாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்” என்றான் மேலும் சுசீலை கிருஷ்ணருக்கு குசேலரிடம் அவல் கொடுத்தனுப்பிய புராண கதையையும் சொன்னான். இத்தொன்மத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தப் போதும் பிடிபடவில்லை நகுலன் கிருஷ்ணரா குசேலரா என குழப்பமே மிஞ்சியது.
 
    எனக்கு ஒரு வாரமாகவே சுசிலா என்ற பெயரும் ஓரிரு கவிதையும் மண்டைக்குள்ளையே குழம்பிக்கொண்டிருந்தது. அதில் "நான்-2" என ஒரு கவிதை.
"நேற்றுப்
பிற்பகல்
4:30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீலவெள்ளை
வளையங்கள்
மிதந்தன."
இதில்
”உன் கண்காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்”
என்கிற வரைக்கும் சுசிலா ஒரு நாயகியாக ஓகேதான். மேலும் அவள் கருப்பு சிவப்பு வெள்ளை நிற ஆடையில் வந்ததைப்பார்த்தால் அதிமுக கட்சி மீட்டிங்கிற்கு போய்விட்டு அப்படியே வந்திருப்பாள் போலும். அந்த நிறங்களின் பின் இருப்பதை ஒரு இரத்தமும் சதையுமான அல்லது துக்கம், கம்யூனிஸம், சமாதானம் என ஏதோ ஒன்றாக வாசகமனம் குறியீடாக புரிந்துகொள்ளலாம். பிழை ஒன்றுமில்லை. ஆனால் இந்த கவிதையின் சாரம் அந்த கடைசி நான்கு வரிகளில்தான் இருக்கமுடியும். அதைதான் திரும்ப திரும்ப யோசித்துக்கொண்டிருந்தேன். 
"என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன."
இந்த வரிகளில் கவிதையைச் சிக்கல் எடுக்க வேண்டும். வளையங்கள் மிதப்பதை ஒரு கனவுநிலை அல்லது பித்துநிலை என எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் அந்த வளையங்கள் ஏன் நீல வெள்ளை வளையங்களாக இருக்க வேண்டும் . ஏன் அது அவள் ஆடையின் நிறத்தை உள்வாங்கிக்கொண்டு கருப்பு சிவப்பு வெள்ளை வளையங்களாக தோன்றவில்லை? இந்த கேள்விக்கான விடைக் கிடைத்தப்போது அந்த கவிதைக்கான பொருளும் கிடைத்தது. சுசிலா யார் எனவும் கண்டுகொள்ள முடிந்தது. 
 
    இதற்காக ஒரே நேரத்தில் பத்து அசைன்மண்ட் எழுதக் கொடுத்த கற்பகசுபா மேம்க்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான்கு நாட்களாக மைப்பேனா மற்றும் ஏ4 தாள் சகிதமாக எழுதிக்கொண்டே இருந்தேன். யுரேகா யுரேகா போல் ராத்தூக்கத்தில் எனக்கு உண்மையில் நீல வெள்ளை வளையங்கள் தோன்றின. கழுதையோ ரம்மியோ விளையாடிவிட்டு தூங்கிய நாட்களில் கருப்பு சிகப்பு கிளாவரும் ஹார்ட்டீனும் கனவுகளில் மங்கலாக வந்திருக்கின்றன. நானும் கனவுநிலையிலேயே உற்று கவனித்தேன். அது மையின் நீலமும் தாளின் வெள்ளையும் தான். அந்த சுசிலா வந்தால் போதும் நகுலன் பேனாவும் தாளும் எடுத்து எழுத்தத் தொடங்கிவிடுவான் என்பதுதான் விசயம். இப்போது போல் அன்று அவர் கணினி தட்டச்சிலோ அல்லது மொபைல் போனில் வாய்ஸ் தட்டச்சிலோ எழுதியிருக்க வாய்ப்பில்லை. தாளில் எழுதி எழுதி கிழித்து கிழித்துதான் கவிதை செய்திருப்பார். சோ அந்த பித்துப்பிடித்த மனுசனுக்கும் நீல வெள்ளை வளையங்கள் தோன்றியிருக்கும். அப்படிதான் அவர் கவிதை எழுத தாயாராகிவிட்ட தனது மனநிலையை “நீல வெள்ளை வளையங்கள் மிதந்தன” என உருவகப்படுத்திக் காட்டியுள்ளார். நகுலனின் கீழ்க்கண்ட கவிதை “ நீல வெள்ளை வளையங்கள்” எது என்பதற்கு மேலும் வலு சேர்ப்பவை. அது
"கலை
...
மைக் கறை
படியத்துடிக்கும்
வெள்ளைக் காகிதம்
வேண்ட
வரும்."
 
    சுசிலா வந்தால் நகுலனுக்கு கவிதை வரும் சரி. சுசிலா யார் அவளுக்கு உருவம் இருக்கா இல்லையா? நகுலன் மீது அக்கறைக்கொண்ட ஒரு பெண்ணா அவள்? அவரே சுசிலா யார் என்பதற்கும் விடையாக சில கவிதைகள் எழுதியுள்ளார். அவை
"சுசீலா
.....
சுசீலா
சுசீலாவின் பெயரில்லை;
சுசீலாவின் சிறப்பு (ச்)
சுசீலாவிடமில்லை
என்றாலும் என்ன
அவளிடம் இல்லாத
ஒவ்வொன்றும்
எனக்குக் கிட்டாத
ஓராயிரம்
கிட்டும் கிட்டும்
என்று
பல்லாண்டு பாடும்.
சற்றே தொலைவில்
என் முன் என் பின்
அருகில் வேறொருவன்
பக்கத்தில்
என் அறையில் சிதறிக்
கிடக்கும் புத்தகங்கள்
எழுதிக் குவித்த
நோட்புக்குகள்
சுவர்த் தட்டில்
சர்ப்பக் குடையின்
கிழ்ச் சுடலை ஆண்டி
கட்டிலின் கீழ்
காலிக் குப்பிகள்
அதோ வருகிறாள்
சுசீலா
வெளி வாசல் வழி
வருகிறார்
சாக்ஷாத் சச்சிதானந்தம்பிள்ளை
என் நாடி மீது
இவ்வுருண்டு செல்லும் வினாடிகள்
இன்னும் எவ்வளவு
நாட்கள்
பேசாமல் இரு
இது பிரம்ம முகூர்த்தம்
எப்பொழுதும்
அவள் நினைவு
தான் அவள்
யார்
என்று கேட்காதீர்கள்
சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்."
இந்த கவிதையில் சுசிலாவின் உருவம் குறித்து அவர் சொல்வதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவளுக்கு உருவமே இல்லை என்பதைதான். இன்னும் ஒரு கவிதையில் சுசிலா எப்படிப்பட்டவள் என்பதை சுசிலாவிடமே சொல்கிறார்."
"சுசீலா
____
அது ஒரு ஆள் உயரப் பறவை
அதைப் பார்க்கையில்
சுசீலா
நீ சென்று மறைவதைப்
போல்
ஒரு பிரமை."
இதன்படி பார்த்தால் சுசிலா நிலையானவள் இல்லை அவள் வந்து வந்து மறையக்கூடியவள். இதிலிருந்தே சுசிலா ஒரு கற்பனை பாத்திரம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அந்த பாத்திரம் வெளியில் இல்லை நகுலனுக்குள்தான் இருந்திருக்கிறது. அவரது கவிதா மனதைத்தான் அவர் சுசிலா என குறிப்பிட்டு வந்துள்ளார். அதை இன்னும் பல கவிதைகள் உறுதிப்படுத்தவும் செய்கின்றன. நகுலன் சாதாரன பிரஜையாக இருக்கும் போது எழுதுவதில்லை. அது ஒரு சாதாரண மனநிலை அவ்வளவுதான். ஆனால் அவனிடம் சுசிலா வந்துவிட்டால் அதாவது மேற்சொன்ன கவிதாமனம் வந்துவிட்டால் எழுதத் தொடங்கிவிடுவான். அதன்படி சுசிலா என்பது ஒரு கவிமனம் அவ்வளவுதான். நகுலனுக்கு கவிதைகளை அருளும் சரஸ்வதி தான் சுசிலா. 
 
இன்னொரு ”நான்” எனும் கவிதை
"நான்-1
___
வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்? "
இந்த கவிதையில் கதவைத் தட்டுவது அருவமான அந்த கவிதாமனம்தான் கதவுத் திறந்ததும் அவர் சுசிலாவாக மாறியோ அல்லது சுசிலாவுடன் சேர்ந்தோ கவிதை எழுதத்தொடங்கிவிடுவார். நகுலனைப் பொறுத்தவரை.
”என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்”
என்று சொன்னாலும்
"என் அறையில்
நான்
சுசிலாவுடன் இருந்தேன்” 
என்று சொன்னாலும் தனிமையில் இருந்ததாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். ஒரே வித்தியாசம் என்னவென்றால் ”சுசிலாவுடன் இருந்தேன்” என்று சொன்னால் ”சாதாரன பிரஜையாக இல்லாமல் கவிமனம் ஓப்பனாகி ஒரு எழுத்தாளனாக இருந்தேன்” என புரிந்துகொள்ள வேண்டும். அந்த எழுத்தாளன் ஏன் என கேள்வி கேட்கும் போது நகுலன் எழுத்தத் தொடங்கிவிடுகிறான். 
அதை
"இதைப்
படிக்கையில்
ஒரு வினாடி
ஒரு சூழ் நிலையில்
என் எதிர் இருந்த
சுசீலாவின்
ஏன் என்ற பார்வை
இன்றும்
என் பிரக்ஞையின்
பளீரென
மின்னலிடுகிறது.
ஏன் ?"
என பதிவு செய்துள்ளார்.
 
    மேலும் அவர் சுசிலாவின் கர்ப்பம் நல்ல கவிதையைப் பெற்றெடுக்காத போது முதல் பேற்றில் கர்ப்பம் கலைந்ததாக மனம் போனப்போக்கில் அருவமான சுசிலாவை வைத்தே கற்பனை செய்துள்ளார். திரும்ப சுசிலா கர்பம் தரித்து நல்ல கவிதைகளைப் பெற்று இருக்கலாம். அது
"அலைகள்
____
நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது."
 
இன்னொரு கவிதை இப்படி விரிகிறது
"சென்ற இடத்தில்
தெரியாமல்
"ராயல்டி"
என்று
கேட்டு விட்டேன்
அவருக்குப்
பிரமாதமாகக்
கோபம் வந்துவிட்டது
"போட்டது
கை நஷ்டம்
ராயல்டி வேறு"
என்று
உரக்கக் கத்தினார்
நான் பேசாமல்
திரும்பி விட்டேன்
அறையில்
சுசீலா
உட்கார்ந்திருந்தாள்
நடந்ததைச்
சொன்னேன்
"உனக்கு உன் வழியில்
எழுதத்தான் தெரியும்"
"பின்
"வாசகர்கள்
எதை வாசிக்கிறார்களோ
அதை
அவர் விற்கிறார்
அவர்கள் வாசிப்பது போல்
இவர் விற்பது போல்
நீ எழுத வேண்டும்"
நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச் சாகத்தான்
தெரியும்
நீ என்ன சொல்வாய்
என்று எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
இப்படிச்
செத்துக் கொண்டிருக்க வேண்டும்
என்பதுதான்
என் விருப்பமும்
என்றாள்
பிறகு
அவள்
ஜோல்னாப் பையைத்
திறந்து
இந்தா
வாங்கிக் கொள்
உனக்கு
என்றுதான்
கொண்டு வந்திருக்கிறேன்
என்று
ஒரு குப்பி கான்யாக்கும்
ஒரு பாக்கெட்
'ஸலம் ஸீகரெட்டும்
கொடுத்துவிட்டு
அடுத்த சனிக்கிழமை
மறுபடியும் வருகிறேன்
என்று
சொல்லிச்சென்றாள்
எனக்குள்
அவர் கோபம் அவருக்கு
சுசீலா
இருக்கின்ற வரையில்
எதுவும் சரியாகிவிடும்
என்று
என்னை நானே
சமாளித்துக் கொண்டேன்"
நகுலனுக்கு எப்போதும் ராயல்டி கிடைப்பதற்கு சுசிலா உறுதுணையாக இருந்திருக்கிறாள். அவர் எண்ணப்படி சுசிலா என்பவள் அவருக்கு கவிதை அருளும் சரஸ்வதிதான். அதனால் சுசிலா இருக்கும்வரை அவருக்கு ராயல்டி உறுதிதான். சுசிலா என்பது அவரது கவிதாமனம்தான் என்பதை மேலும் பல கவிதைகளைக் காட்டி விளக்கமுடியும். இதே போதும் என்று கருதுகிறேன். அவரது சுசிலா சனி ஞாயிறு முழுவதும் தன்னுடன் விரும்பி இருந்ததாக எழுதியுள்ளார். நமக்கு இருக்கும் வேலைப்பளுவில் எனக்கே சனி ஞாயிறு லீவில்தான் கவிதை எழுதும் மனநிலை வருகிறது. அதுதான் நகுலனுக்கும் நிகழ்ந்திருக்கிறது. அப்படிதான் நகுலனின் சுசிலா சனி ஞாயிறுகளில் உக்கிரமாக இருந்திருக்கிறாள். இறுதியாக கீழ்க்கண்ட ”கையெழுத்து” என்ற ஒரு கவிதை, அதில் தான் எழுதியக் கவிதைகளை சிலாகித்து 'இதை இந்த கைகளா எழுதியது என ஐவிரல்களையும் உற்று நோக்கி இந்த கைபரப்பில் எவையெல்லாம் ஆட்சி செலுத்துகின்றன தொழு நோய் பிடித்தது போல் இருக்கும் தனது கையா இதை எழுதியது இல்லை இல்லை அது சுசிலாவின் கைகள்' என்கிறார். அந்த அருவமான கையைதான் அவர் கபிலரின் கையோடு ஒப்புமைப்படுத்துகிறார். 
"கையெழுத்து
______
சுசீலாவின் கைவிரல்கள்
பார்த்த பரவசம்
அறையில் மீண்ட பிறகும்
அதன் பாதிப்பு;
ஐந்து விரல்களையும் இணைத்து
விரித்த வெற்றிலை போன்ற
என் கை கண்டு வெறிக்கின்றேன்.
ஒரு கணம்
கபிலரின் கை நினைவு;
மறுகணம்
‘எவ்வளவு பாபகிருத்தியங்கள்,
துஷ்பிரயோகங்கள்,
மனமறிந்த பொய்கள் ‘
இவ்வளவும் ஒரு கைப்பரப்பில்
அரசு செலுத்துகின்றன.
என்ற நினைவில் மனம் புரட்டுகிறது.
அப்படி எழுதத் தெரியாதவனுமில்லை.
பாஸ்டர்நாக் கவிதை ஞாபகம் வந்தது.
‘உனக்கு உரியவை அனைத்தையும் கொடுப்பது
இது தான் படைப்பு. ‘
அப்படி இல்லாமல்,
காது செவிடாகக் கூக்குரலிட்டு ஆக்கிரமிப்பது
அது இல்லை.
எவ்வளவு கேவலம்
எழுதுவதற்கு ஒன்றும் இல்லாமல் எழுதிக் குவிப்பது,
அதன் பொருட்டு அனைவரும் பாராட்டுவது என்பது. ‘
அகஸ்மாத்தாகத் திரும்பிப் பார்த்தபொழுது தான் என் நாய்
(எனக்கும் ஒரு நாய் இருக்கிறது) அதன் வாலைத்
துரிதமாக ஆட்டியது.
எனக்கு என்னிடமிருந்து எப்படித் தப்புவது என்று
தெரியவில்லை.
அடுத்தகணம் ஒரு பிரமை.
என் கையில் தொழு நோய் பிடித்துவிட்டது போல்.
இந்தக் கையை வைத்துக் கொண்டு நான்
எவ்வாறு சுசீலாவை அணுக முடியும் ?"
 
    ஆக நகுலனின் சுசிலா நகுலனுக்குள் இருந்த ஒரு கவிதாமனம்தான். அவனுக்கு கவிதைகளை அவள்தான் அருளியிருக்கிறாள். அவள் அருவமானவள்தான். ஆனால் ஏன் அந்த அருவத்திற்கு சுசிலா என்று பெயரிட்டார் என அவரிடம்தான் கேட்க வேண்டும். சுசிலாவுக்கு பதில் திவ்யா என்றோ அல்லது சோபியா, ஐஸ்வர்யா என்றோ எந்த பெயரிட்டாலும் அவளின் குணாதிசயம் நகுலனைப் பொருத்தவரை இவ்வாறுதான் இருந்திருக்கும். ஒருவேளை சுசிலா என்பவள் நகுலனை பால்யத்தில் முதல் கவிதையை எழுதத் தூண்டியவளாக இருக்கக்கூடும். அதனால்தான் அந்த பெயரைப் பிடித்துக்கொண்டு அத்தனை காலமாய் நின்றிருக்கிறார் போலும்.

- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை: