அழகால் பெயர்ப்பெற்றவள்


     என்னவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. முகவரி தருகிறேன்- நேரில் வந்து பார்த்துவிட்டுப் போங்கள். அவளை ஒருமுறைப் பார்த்துவிட்டால், இப்பிறவியின் பயனை நீங்கள் இப்போதே அடைந்து விடுவீர்கள். அவளின் முகவரி; அழகி இல்லம், அழகுத்தெரு, அழகூர்,  (முகவரியில் வரும் அழகு குறித்த அடைகள் எல்லாம் அவளின் அழகால் பெயர் பெற்றவைதான் )  
    அழகூர் செல்ல விரும்புகிறவர்களுக்காக, அந்த ஊரைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது ஊர் தேடி அலைகையில் உங்களுக்கு உதவக்கூடும். ஊரின் நுழைவாயிலில் கன்னி தெய்வத்திற்கு கோயில் ஒன்று இருக்கிறது. அதில் என்னவள்தான் சாமி. அவளை தரிசிக்கவேண்டி இனம், மதம், சாதி, பால் கடந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் கூடிவிடுவதால், நகரின் முக்கியப் பகுதியில் இருந்து ஐந்தாறு சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவளை பார்த்துவிட்டு நான்கு வயது இளமையாகி திரும்புகிறவர்கள் நூறுபேர் என்றால், அவளைப் பார்க்காமல் சோகத்தில் திரும்புகிறவர்கள் தொள்ளாயிரம்பேர் இருப்பார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால் தரிசித்துவிடுவீர்கள்.
   அழகூர் பேருந்துநிலையத்தில் சாலையோரம் கொடிக்கம்பம் ஒன்று நிற்கிறது. அதில் சிவப்பு பூப்போட்ட வெளிர்நீல நிற கொடி ஒன்று பறக்கும். அது என்னவள் காற்றில் தவறவிட்ட துப்பட்டாதான். அத்துப்பட்டாவை அப்போதெ அவ்வூர் இளைஞர்கள் கைப்பற்றி, பெரியவர்களுடனும் சான்றோர்களுடனும் கலந்தாலோசித்து ஒருமனதாக அதை அவ்வூரின் சமுதாயக் கொடியாக அறிவித்திருக்கிறார்கள். கொடி விஷயத்தை சொல்லும் போதே அவ்வூரில் நடந்த இன்னொரு கொடுமையும் ஞாபகத்துக்கு வருகிறது. அதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்; இப்படிதான் ஒருமுறை அவள் கெண்டைகால் தெரிய பாவாடயைத் தூக்கி செருகி நொண்டி விளையண்டதைப் பார்த்த அவ்வூர்காரர்கள் பாண்டி விளையாட்டை தேசியவிளையாட்டாக அறிவிக்க வலியுருத்தி தொடர் உண்ணாவிரதம், கடையடைப்பு மற்றும் ரயில்மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுப்பட்டனர். அப்போது நடந்த போலிஸ் தடியடியில் பதினாறுபேர் பரிதாபமாக வீர மரணம் அடைந்தனர். அதில் பத்து வயது பள்ளிப் பாலகனும் ஒருவன்.
    பேருந்திலிருந்து இறங்கியதுமே அந்த முன்றுசந்திப்பு சாலையில் யாரும் குழம்பாதவண்ணம் வடக்கு நோக்கிய கைக்காட்டி அழகிதெருவைத் திசைக்காட்டும். அத்திசைப் போகும் பாதையின் இருபுறமும் பூமரங்கள் தேன் சொரியும். இது போன்று ஊரெங்கும் மரம், செடி, கொடிகளை வைத்துப் பராமரிக்கும் பணிகளை “அழகி பசுமைப் படை” இயக்கத்தைச் சார்ந்த நபர்கள் தன்னார்வத்துடன் செய்துவருகின்றனர். இதைப் போன்ற நற்காரியங்களை செய்ய “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற தேசிய கொள்கைதான் காரணம் என நினைத்துவிடாதீர்கள். எல்லாம் என்னவள் நடக்கையில் வெயில் படக்கூடாது என்பதற்காதான். இன்னும் சற்றுதூரம் நடந்தால் அன்றலர்ந்த மலர்கள் தூவப்பட்ட அழகித்தெருவைக் காணலாம். அந்த தெருவில் என்னவள் வீட்டைக் காண்பது மிக சுலபம்தான் ஆனால் அவளைக் காண்பது சுலபம் அல்ல.

   ஏனெனில் கல்லூரி அழகி போட்டி முதல் பிரபஞ்ச அழகி போட்டி வரை  கலந்துக்கொள்ள வேண்டி, அடிக்கடி எங்கேனும் பயணித்துவிடுவாள். ஆனால் இதுவரை அவள் ஒரு போட்டியில்கூட வெற்றி பெற்று அழகியாக வாகை சூடியதில்லை. ஏனெனில் அவளுக்கு அறிவு- அந்தளவுக்கு சுத்தமாக இல்லை.
 
 
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை: