திரைப்படப் பாடல்களில் தமிழ் இலக்கியம்

 முன்னுரை :

சங்க இலக்கியங்களைத் தழுவி அல்லது அதே வரிகளை அப்படியே பயன்படுத்தி சில தமிழ்த் திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கு சங்க இலக்கியங்களிலிருந்து கவிஞர்கள் எப்படி பாடலை படி எடுத்தார்கள் என்று சொல்ல வரவில்லை. மாறாக, சங்க இலக்கியங்கள் எனும் பலாப்பழத்தினை உரித்து சுளையினை மட்டும் எவ்வாறு இலகுவாகச் சுவைக்கத் தந்துள்ளார்கள் என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

பாடல்-1 : நறுமுகையே… நறுமுகையே…

”இருவர்” படத்தில் இடம்பெறும் ’நறுமுகையே… நறுமுகையே…’ என்ற பாடலின் இடைப்பட்ட வரிகள் இப்படி வருகிறது;

                                யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…

                                யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…

                                ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…

                                செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…1

மேற்படி பாடல் வரிகளில் இடைஇடையே உயிரூட்டும் வரிகளாய் இருப்பது கீழ்க்கண்ட பாடலின் வரிகளே.  இது குறுந்தொகையில் 40ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது. இசையோடு கேட்க்கும் போது மனதுக்கு அத்தனை இதமாகி பாடல் இன்னொரு படி உயர்ந்து நிற்கிறது.

”யாயும் ஞாயும், யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும், எம்முறைக் கேளிர்?
யானும் நீயும், எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”2

- செம்புலப்பெயனீரார்

 

பாடல்-2 : தீண்டாய்… மெய் தீண்டாய்…

என் சுவாசக் காற்றே” படத்தில் வரும் ’தீண்டாய்...  மெய் தீண்டாய்…’  என்ற பாடலின் தொடக்க வரிகளே ”கன்றும் உண்ணாது கலத்தினும் படாது” என்ற குறுந்தொகையின் 27ஆவது பாடல் வரிகள் அப்படியே பசலையேறிய பெண்ணின் ஏக்கக் குறலில் கீழ்க்கண்டவாறு முதல் பத்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பாடலை உண்மையில் யாத்தவரும் பாடியவர் வெள்ளிவீதியார் எனும் பெண்பால் புலவரே.

”கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே”3

 

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே”4

 

பாடல்-3 : மடி மீது தலை வைத்து விடியும் வரை…

👉”அன்னை இல்லம்”  என்ற படத்தில் வரும் ஒரு காதல் பாடல் ”மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்…” என்ற பாடல். தொடர்ந்து அதன் இடையே

”வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 
காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே” 5

என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இது கீழ்க்கண்ட கலிங்கத்துப்பரணி 61ஆவது பாடலின் சாரமாகும்.

 “வாயின் சிவப்பை விழிவாங்க

மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ”6

-                    செயங்கொண்டார்

 

பாடல்-4 : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…

👉               ”பட்டணத்தில் பூதம்”  என்ற படத்தில் மேடைப் பாடலாக வரும் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...” எனத் தொடங்கும் பாடலில் பின்வறுமாறு சில வரிகள் வருகின்றன.

”மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்…
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்…
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்…
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்…

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ…
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ…
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ…
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ…

காலம் மாறினால் காதலும் மாறுமோ…”7   

அதாவது குறிப்பிட்ட காலம் வரை மலைக்கும், கடலுக்கும், யாழுக்கும் முறையே சொந்தமானவை சந்தனம், முத்து, இசை ஆகியன. பின்னர் அவை பூசுபவர்க்கும், அணிபவர்க்கும், மீட்டுபவர்க்கும் அல்லவா சொந்தமாகின்றன? அதுபோல் ஆராய்ந்து பார்த்தால் பெண் குறிப்பிட்ட பருவம் வரைதான் பெற்றோருக்கு உரியவள்; அதன்பின் அவள் காதலுக்குரிய காதலனுக்குத்தான் உரியவள் என்பதைப் பக்குவமாகச் சொல்ல இக்கற்பனை பயன்படுகிறது. இதே கருத்து கலித்தொகை 9ஆவது பாடலில் கீழ்க்கண்டவாறு பாடப்பட்டுள்ளது.

”மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்; 

பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, 

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? 

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 

சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? 

தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, 

யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? 

சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!”8

- பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ

பாடல்-5 : இந்திரையோ இவள் சுந்தரியோ…

குற்றாலக் குறவஞ்சி நூலில் நாயகி வசந்தவல்லி பந்து விளையாடும் காட்சி கீழ்க்கண்டவாறு பாடப்பட்டுள்ளது.  

”இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ

மோகினியோ - மன

முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய

தோவெனவே - உயர்

சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி

வீதியிலே - மணிப்

பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற்

பந்துகொண் டாடினளே.”9

-                    திரிகூடராசப்பக் கவிராயர்

                நிலாவைச் சடையில் சூடியவரான குறும்பலா மரத்தின் கீழ் இருக்கும் சிவனின் சங்குகளால் நிறைந்த குற்றாலத்தின் வீதியில் வசந்தவல்லி தோழிகளுடன் பொன்பந்து வைத்து விளையாடுகிறாள்.

இவள் இந்திரனின் மனைவியான இந்திரையா? இல்லை, அழகான தெய்வப் பெண்ணா? ரம்பையா? மோகினியா? என்று பார்ப்பவர் மனம் குழம்பு வகையில் இருக்கிறது வசந்தவல்லியின் அழகு. பந்தை அடிக்க அவள் கையை வீசுகிறாள், மக்களுக்கு இன்னொரு குழப்பம் ஏற்படுகிறது! எது முதலில் செயல்பட்டது? அவள் மனமா? கண்களா? அல்லது கரமா?

 அவ்வளவு விரைவாக, பந்தை பிடிக்க மனமும் கண்ணும் கரமும்  ஒன்றுபட அவள் சிறப்பாக விளையாடினாள் என்பதே பாடலின் கருத்து.

அதனை “காதலன்” படத்தில் வேறுவிதமாக பயன்படுத்தியுள்ளனர். அதாவது, நாயகனும் நாயகியும் இனி காணவே மாட்டோம் என்று எண்ணிய நிலையில் மீண்டும் சந்திக்கின்றனர். அங்கே எது முந்தும்? அவர்களின் ஏற்கும் மனமா? நோக்கும் விழிகளா? அணைக்கும் கரங்களா? இதோ பாடல்;

”இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…
இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…

மனம் முந்தியதோ…
விழி முந்தியதோ…
கரம் முந்தியதோ எனவே…

உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்…
சங்கணி வீதியிலே…

மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி…
பொன் பந்து கொன்டாடினளே…

மனம் முந்தியதோ…
விழி முந்தியதோ…
கரம் முந்தியதோ எனவே…”10

 

பாடல்-6 : ஒரு பொன் மானை நான் காண…

”மைதிலி என்னை காதலி” என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு பொன் மானை நான் காண தக்கதிமித்தோம்’ எனும் பாடலில் வரும் கீழ்க்கண்ட வரிகள் கம்பராமாயணத்தில் சீதையின் கண்களை வர்ணிக்கும் காட்சியில் இருந்து உருவப்பட்டுள்ளது என்பதை உற்று நோக்கினால் உணரலாம்.

”தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி

தாமரை பூமீது விழுந்தனவோ

இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில்

படைத்திட்ட பாகம்தான் தான் உன் கண்களோ”11

 

முடிவுரை:

                தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சிறந்த வரிகள் மற்றும் கருத்துகள் அதிகளவில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ”திரைப்படப் பாடல்களில் தமிழ் இலக்கியம்” என்று ஒரு நூலே எழுதலாம் அந்த அளவிற்கு திரைப்படங்களில் தமிழ் இலக்கியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சினிமா பாடலாக வரும் போது ரசிக்கும் இளையதலைமுறையினர். அதே போல் ரசனைமிக்க பல பாடல்களை உடை தமிழ் இலக்கிய மூலத்தையும் ரசிக்கப்பழக வேண்டும்.

                                                                                                          - செ.நிவிதா

---------------***------------

சான்றெண் ஆதாரங்கள் :

1.        https://www.youtube.com/watch?v=91SEAiriKG0

2.        குறுந்தொகை – பாடல் எண் 40

3.       குறுந்தொகை – பாடல் எண் 27

4.      https://www.youtube.com/watch?v=VUIONxqlxyc

5.      https://www.youtube.com/watch?v=Rk65kinqQ8o

6.      கலிங்கத்துபரணி - பாடல் எண் 61

7.      https://www.youtube.com/watch?v=piXFWshNjRg

8.     கலித்தொகை – பாடல் எண் 9

9.     குற்றாலக்குறவஞ்சி- பாடல்

10    https://www.youtube.com/watch?v=bzQBAkXiunE

11   https://www.youtube.com/watch?v=WHUOy6Ldufg

கருத்துகள் இல்லை: