22 டிசம்பர் 2022

வந்தால் உள்நோயாளியாகதான் வருவேன்

தேவதைகள்
வெள்ளாடையில் உலாவுவார்கள்
என்பதை
உன்னைப் பார்த்தவுடன்தான்
உர்ஜிதம் செய்தேன்...
 
ரம்பைகள்
சொர்கத்தில் இருப்பார்கள் என
நம்பிக்கொண்டிருந்தேன்
இன்றுதான் விளங்கியது
ஆரம்ப சுகாதார நிலையத்திலும்
பணியில் இருப்பார்கள் என்று...
 
சாலையில் கோரமாக விழுந்து
எழுந்து வந்துவிட்டேன்
இப்போது வந்த இடத்தில்
உன் கண்களில் விழுந்துகிடக்கிறேன்
விபத்துக்குள்ளாகி வந்தவனை
மீளவும் விபத்துக்குள்ளாக்கினால்
எப்படி எழுந்து நடப்பேன்?
 
இனி
கட்டுப்போட்டாலும் சரி
கட்டிப்போட்டாலும் சரி
எதாவது மருந்து கொடு
வலிக்காமல் ஊசி போடு
மயக்கம் தெளிந்ததும்
நானே போய்விடுகிறேன்
இருக்க இருக்க
இருதயத்துக்கு நல்லதல்ல
உயிருக்கும் உத்திரவாதமில்லை...
 
”இரண்டு நாள் கழித்து
மறக்காமல் வந்துவிடுங்கள்” என்கிறாய்
அப்போதாவது
உள்நோயாளியாக சேர்த்துக்கொள்வாயா?
 
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: