22 டிசம்பர் 2022

அவரவர் இழப்புகளின் வலி

நடுத்தர வயதுப் பெண் பிரிவாற்றி
எத்தனைக் காலம் ஆற்றியிருப்பாள்
மகனின் மணம் பற்றி
இன்னும் யோசிக்கவே இல்லை
மூத்த மருமகனுக்கு கொடுத்துதவ
மாமியாரால் எப்போதும் முடியாது
 
மரச்சீனி தோட்டத்து வேலை
பாதியில் கிடக்கிறது
மலைப்பிரதேசத்து இவ்வூரில்
இனி பஞ்சர் பார்க்க ஆளில்லை
 
அண்டை வீட்டுக்காரனுக்கு
இரவல் பீடி தடைப்பட்டுவிட்டது
பகலில் பலாப்பழம் கொய்யவும்
இரவில் இளநீர் திருடவும்
இடையூறு களையப்பட்டுவிட்டது
ஒரு கதை சொல்லி
தன் கதைகளை நிறுத்திக்கொண்டான்
 
நூறு கைமாத்து கொடுத்தவன்
நூறுமுறை சொல்லிவிட்டான்
ஆயிரத்தில் கடன் வாங்கியவர்கள்
திருப்பிக் கொடுத்தால் உண்டு
அவன் முன்வாயில் வெளியேறியதும்
வறுமை பின்வாயிலில் உட்புகும் 

நிரம்பாத பக்கங்கள் நிரம்ப இருக்க
எழுதிக்கொண்டிருக்கும் போதே
ஒரு துளி பாம்பின் விஷம்
முற்றுப்புள்ளி வைத்துவிட்டது….
 
- மகேஷ் பொன்
 

 

கருத்துகள் இல்லை: