22 டிசம்பர் 2022

அடிமை சாசனம் 1 x 2

அடிமை - 1
விதிக்கப்பட்ட அடிமைகள்
தெருவுக்குத்தெரு இருக்கிறார்கள்
அடிமை - 2
வயப்பட்ட அடிமைகள்
கோ-லிப் பாரடைஸில் இருக்கிறார்கள் 
 
நான் நான்
மூன்றாம் தெரு முதல் வீட்டில் இருக்கிறேன்
எழ வேண்டும்
ஓட வேண்டும்
உழைக்க வேண்டும்
கொஞ்சம் வாசிக்க வேண்டும்
பின்னிரவு தூங்க வேண்டும்
மறுபடியும் எழ வேண்டும்
இன்னும்
திண்ண வேண்டும்
பேல வேண்டும்
அதே இழவுதான்
ஒவ்வாமையுடன் சண்டையிட வேண்டும்
செக்குமாடு போல் மிக்க அடிமை நான்…
 
வெறும் 28 கிலோமீட்டர் வாழ்க்கை
சிறு தேசம் இதை ஆக்கிரமித்துக்கொண்டு
ஒரு பேரழகி
இரு விழி உருட்டி
பெரும் படை திரட்டி
மறுபடியும் அடிமையை அடிமைச்செய்கிறாள்
ஆனாலும் வெறுப்பு கொள்ளாமல்
மேலும் விருப்பு கொள்கிறது அடிமைமனம்
 
இன்னும் நான்
அவள் பெயருக்கு அடிமையானேன்
அவள் பார்வைக்கு அடிமையானேன்
அவள் பேச்சுக்கு அடிமையானேன்
அவள் அழகிற்கு அடிமையானேன்
அவள் அன்புக்கு அடிமையானேன்
அவள் அங்கமைப்பிற்கு அடிமையானேன்
அவள் திமிருக்கு அடிமையானேன்
அவள் கையசைவிற்கு அடிமையானேன்
 
வல்லரசின் இளவரசிகள் எப்போதுமே
எல்லா அடிமைகளையும் போருக்கு அனுப்பிவிட்டு
நல்ல அடிமையொருவனை அந்தபுரத்திற்கு அழைத்து
செல்லமாய் முத்தமிடுவார்கள் என்பதும்
கள்ளத்தனமாய்ப் புணர்வார்கள் என்பதும்
சொல்லப்படாத வரலாற்று உண்மையெனில்
இந்த அடிமையின் இளவரசனை
அந்த இளவரசி வயிற்றில் சுமப்பதும் உண்மையாகலாம்
 
இந்த குடும்ப அடிமைக்கு
உருப்படியாக செய்ய நிறைய இருக்கிறது
ஆகவே
இப்போது நான்
அப்பேரரசிக்கு எதிராக
விடம் தடவிய வாள் உயர்த்தலாம்
 
ஆனாலும்
இந்த நைஸிற்காகதான்
மாமுனிகளின் நடத்தைகள் பிறழ்ந்தன
மாமன்னர்களின் மணிமுடிகள் சரிந்தன
சாதாரண அடிமை என்ன செய்வான்
ஆகவே
இப்போது நான்
அப்பேரழகிக்கு எதிராக
விரகம் தடவிய கோல் உயர்த்தினேன்
 
பரஸ்பர அடிமைத்தனம் இதுவென தெரிக
மீபுனித காதல் மனம் இதுவென புரிக
விதிக்கப்பட்ட அடிமைகள்
வயப்பட்ட அடிமைகள் ஆக
நம் பண்பாட்டில் தடையுள்ளது
ஆயினும்
அடிமை - 1ல் நான் இருக்கிறேன்
அடிமை - 2ல் நான் இருக்கிறேன்
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: