22 டிசம்பர் 2022

அன்பு ஒன்றுதான் அனாதை

எனக்கும் தாய் தந்தை இருக்கிறார்கள்
அண்ணன் இருக்கிறான்
தங்கை இருக்கிறாள்
நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்
ஊர் இருக்கிறது
உறவுகள் இருக்கிறது
என்றாவது பேசிக்கொள்கிறோம்
என்றாவது விசாரித்துக்கொள்கிறோம்
ஆயினும்
என்றென்றும்
அவர்கள் நினைவுகளில் நான் இருக்கிறேன்…
 
உன்னுடன்தான் பெரும் அக்கறையாயிருக்கிறேன்
உன்னுடன்தான் தினசரியை சிலாகிக்கிறேன்
உன்னுடன்தான் நெடுந்தூரம் பயணிக்கிறேன்
உன்னுடன்தான் உணவைப் பகிர்ந்துண்கிறேன்
உன்னுடன்தான் பரஸ்பர உரிமைக்கொள்கிறேன்
உன்னுடன்தான் இலட்சியக் கனவுக்காண்கிறேன்
உன்னுடன்தான் வாழ்கிறேன்
 
நீயாகவே குறுஞ்செய்தி அனுப்பும் வரை
நீயாகவே அழைத்து பேசும் வரை
நீயாகவே வந்து சந்திக்கும் வரை
நீயாகவே நலம் விசாரிக்கும் வரை
என்னால் காத்திருக்க முடியாது
ஆகையால்
நானாகவே சொந்தம் கொண்டிருக்கிறேன்
எனக்கு உன்னை அத்தனை பிடித்திருக்கிறது…
 
இன்று
குறுஞ்செய்தி அனுப்ப இயலவில்லை
தொலைப் பேச இயலவில்லை
நேரில் சந்திக்க இயலவில்லை
நலம் விசாரிக்க இயலவில்லை
ஆனாலும்
எப்போதும் போல்
என் நினைவுகளில் நீ இருந்தாய்…
 
எனக்கு காய்ச்சல் அடித்திருக்கலாம்
எனக்கு வேலைப்பழு அதிகரித்திருக்கலாம்
எனக்கு பிடித்தமானவள் ஓடிப்போயிருக்கலாம்
எனக்கு கோர விபத்து நேர்ந்திருக்கலாம்
ஆகையால்
உன்னை தொடர்புகொள்ள இயலவில்லை
 
பின்னிரவு வரை
யாருடனெல்லாமோ அளவலாவியிருந்தாய்
எனக்கு என்ன ஆனதென
நீ கேட்க வேண்டியதில்லை
உனக்கு என்ன ஆனதென
நான் கேட்பேனே
பின்பு நீயாகவே
வீடடைந்திருப்பாய் என நம்பிக்கொண்டேன்
அதை சொல்வதற்கு கூட
உன் நினைவுகளில் நான் இல்லை என்பது
துரதிர்ஷ்டமான உண்மை
 
ஆனால்
நீ எப்பொதும் போல் தொடர்புகொள்ளலாம்
உன் தேவை வந்தவுடன்
அல்லது
உன் நெட் பேலன்ஸ் முடிந்தவுடன்
 

 

கருத்துகள் இல்லை: