22 டிசம்பர் 2022

ஓரமாய் நிற்பவர்கள்

நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம்;
ஒரு பேருந்துநிறுத்தத்தில்…
ஒரு கோவில் சன்னதியில்…
ஒரு பள்ளிக்கூட வாயிலில்…
ஏதோ ஒரு கடைகோடியில்…
 
நாங்கள்
நெடுங்காலமாய் நின்றுகொண்டிருக்கிறோம்
ஒரு ஓரமாய்! அங்கேயே!!
இப்போது கொஞ்சம் இருக்க வேண்டும்
உங்கள் சிம்மாசனத்தில் கூட இல்லை
எங்கள் இருக்கையில்தான்…
 
நறுமணம் கமழும் நீங்கள்
விலகி செல்கையிலும் சரி
விலக்கி வைக்கையிலும் சரி
மூடை நாற்றம்தான் குமட்டுகிறது…
 
சாதி ஊத்தை நாறும்
உங்கள் வாயை
பயோரியா கொண்டு
நீங்கள்தான் துலக்க வேண்டும்…
 
தீண்டாமை அழுக்கு ஏறும்
உங்கள் உடலை
ஹமாம் கொண்டு
நீங்கள்தான் குளிக்க வேண்டும்…
 
ஆணவத்தின் மேட்டிமை மின்னும்
உங்கள் ஆடையை கலைந்துவிட்டு
சமத்துவத்தை
நீங்கள்தான் உடுத்த வேண்டும்…
 
அறமின்றி அறிவொளி வீசும்
உங்கள் பட்டங்களை துறந்துவிட்டு
சமூக நீதியை
நீங்கள்தான் படிக்க வேண்டும்…
 
நாங்கள்
நெடுங்காலமாய் நின்றுகொண்டுதானிருக்கிறோம்
ஒரு ஓரமாய்! அங்கேயே!!
இப்போது கொஞ்சம் இருக்க வேண்டும்…
இருக்கையை உருவ எண்ணி
வெறுங்கையில் அயுதத்தைத் திணிக்காதீர்!
 
- மகேஷ் பொன்


 

கருத்துகள் இல்லை: