22 டிசம்பர் 2022

போ! உன் எல்லாக் காதலும் ஆசிர்வதிக்கப்பட்டன

இரத்தத்தில் வரையப்பட்ட கடிதத்தை
புத்தகப்பையில் சுமந்து வந்தபோது
காதலால் சிவந்த உன் கன்னத்தை
மேலும் சிவக்கச் செய்தேனே
அந்த வன்மத்தை மன்னித்துவிட்டாய்தானே
 
ஐம்பொன்
கொள்ளைப் போகும் என்றார்கள்
பைங்கிளி
திசைமாறிப் பறக்கும் என்றார்கள்
 
ஒரு மழைநாளில்
இல்லத்தில் இடிவிழும் என்றிருந்தேன்
தூர வீதிகளில்
குலவேரைத் தேடக்கூடும் என்றிருந்தேன்
 
எறியப்பட்ட கற்களெல்லாம்
தூவானமாய் பொழியட்டும்…
உன் கவிதைகளில் ஒன்றை
என் அக்காவுக்கு படித்துக்காட்டு
உன் அப்பாவுக்கு விளக்கிச்சொல்
 
எப்போது வளர்ந்தாய்?
இப்போது
உன் ஒற்றைக் காதலை அல்ல
பத்து காதலாக இருந்தாலும்
நானே ஆசிர்வதிக்கிறேன்…
 
போ!
உன் காதலால் இந்த மலையை
எங்கெங்கும் பூக்கச் செய்!
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: