பால்யத்தில் யான் வாழ்ந்த
ஓலைவீட்டைச் சுற்றி
இரண்டு வேம்பும்
இரண்டு மாவும்
ஒரு நெல்லியும்
ஒரு பனையும் இருந்தன…
நல்ல விஸ்தாரமான
கான்கீரிட் வீட்டை கட்டிவிட்டு
பால்கனியில் நிற்கிறேன்
எனது நினைவுகளிலிருந்து
முதலில் நிழல் விலகியது
பின்பு பூக்கள் உதிர்ந்தன
பிறகு மெல்ல மெல்ல
சிட்டுகள் பறந்தன
கிளிகள் பறந்தன
மைனாக்கள் பறந்தன
குயில்கள் பறந்தன
வவ்வாள்கள் இலங்கைக்கு பறந்தன
இறுதியில்
தூக்கனாங்குருவிகளின் வீடுகள் இடிந்தன
தொட்டில் கட்டிய
மரம் ஒன்று
கட்டிலாகிவிட்டது
வத்தலுப்புத் தூளில் சுவைகூட்டிய
மரம் ஒன்று
கதவாகிவிட்டது
என் அம்மாவின் அம்மா
வடலியிலிருந்தே வருடிகொடுத்து வளர்த்த
மரம் ஒன்று மட்டும்
நினைவுகளில் தேங்கிநிற்கிறது
அதற்கு என் அம்மாவின் வயது
அதற்கு என் அம்மாவின் சாயல்
அதனுடன் பேசியிருக்கிறேன்
அதனுடன் விளையாடியிருக்கிறேன்
அது எங்கள் பழைய வீட்டில்
கூரை வேய்தது
பெருக்கி அள்ளியது
பாய் விரித்தது
காஃபி போட்டது
பாயாசம் கிண்டியது
பெட்டிசீர் செய்தது
திருநாள் படையலிட்டது
ஒரு பருந்தின் புகழிடமாய் இருந்தது
அது முற்றத்தில் நின்றபோதும்
பழம் நழுவி நள்ளிரவில்தான் விழுந்தது
ஆச்சியையே மறந்துவிட்டு
”பேச்சி இல்லம்” கட்டிய
எங்கள் தலையில் விழவில்லை
இப்போதும்
நுங்கின் கண்களை
நோண்டுபவர்களைக் கண்டால்
என் இடக்கண்ணில்
பதநீர்தான் பொங்குகிறது
மரங்களின் நினைவுகள் அற்ற
ஒரு நாளில்
வேப்பங்கொட்டையை
காகம் எச்சமிடுகிறது
நெல்லிக்கொட்டையை
அண்னி தப்பவிடுகிறது
பனங்கொட்டையை
பன்னி சப்பிப்போகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக