அன்பை சிலுவையென எண்ணி
யாருக்காகவும் சுமக்காதவன்
நீட்டிநிமிர்ந்து படுத்துக்கொள்பவன்
அவன் காதலி
கட்டாயக் கல்யாணம் முடிக்கையில்
பந்தியில் பிரியாணி சாப்பிட்டவன்
அவன் தாய்
கண்ணீர்விட்டு கதறியதை
சலனமற்று வேடிக்கை பார்த்தவன்
அவன் நண்பன்
விபத்தில் ஊனமான போது
செய்தியென கேட்டு நகர்ந்தவன்
அவன் தாத்தா
கண்ணாடி பெட்டியில் இருக்கையில்
இரண்டாம் காட்சி சினிமா பார்த்தவன்
இன்பம் துன்பம் இரண்டிலும்
சமனிலைக் கொண்ட அவன்
கடவுளைக் கல்லெனவும்
பக்தனை கோமாளியெனவும்
நெடுங்காலமாய் சொல்லித் திரிகிறான்
பெரும் காற்று வந்தது
கொடும் மழை வந்தது
ஆழிப் பேரலை வந்தது
கொல்லைக் கொரோனா வந்தது
அவன் கூடுதலாய் ஐஸ் போட்டு
இரண்டு ஆரஞ்சு ஜுஸ் குடித்தான்
பத்து வருடங்களுக்கு பிறகு
திவ்யா ஈசன், நிவ்யா ஈசன்
எனும் இரட்டையர்கள்
அன்று பிறந்து அன்றே இறந்துவிட்டார்கள்
அன்று பிறந்து அன்றே இறப்பவர்கள்
என்ன வலியை ஏற்படுத்திவிட முடியும்
அவர்கள் தாய் அழவே இல்லை
எனவே அவன் அழத் தொடங்கினான்
பரபரப்பான சாலை என்றும் பாராமல்
பெரும் குரலெடுத்து ஓலமிட்டான்






















