30 நவம்பர் 2023

சிறு வேண்டுதல்

தொடையில் பிராண்டல்களுடன்
இரத்தம் சொட்ட சொட்ட வந்த
புள்ளிமான்ஒன்று
எங்கள் புறக்கடை விளையில்
மூன்று நாட்களுக்கு மேல்
தஞ்சம் அடைந்துள்ளது
நானும் என் நாயும்
அது பத்திரமாக இருக்கிறதா என்று
இன்றும் பார்த்துவந்தோம்

மாடம் ஏறி கோழி திருடும்
ஒரு வறிய சிறுத்தை
எங்கள் வீடண்டியே உலவும்
அதன் பம்மிய  வருகையை
அதனை விரட்டியடிக்கும் லாவகத்தை
என் நாய் நன்கு அறியும்

”அந்த சிறுத்தையின் கண்களில்
இந்த மான் படாதபடி
நம்மை நம்பி வந்த விருந்தினரை
காத்துக்கொள்! காத்துக்கொள்!!” என்று
என் நாயின் காதில் சொன்னேன்

எனது பரிதவிப்பு
என் நாய்க்கு புரிந்திருக்க வேண்டும்
அதனால்தான்
அந்த மானைப் பார்த்து குரைப்பதில்லை
அடிக்கடி போய் போய்
அதன் இருப்பை உறுதிசெய்து வருகிறது

ஆனாலும் எனது நாய்
நல்லதொரு வேட்டை நாய்
அது முன்பு மானையும் வேட்டையாடியிருக்கிறது

என் நாய்
துரத்தத் தொடங்கும் போது
அந்த மான்
வேலி தாண்டி பாய்ந்தோடும் அளவுக்கு
அதன் கால்கள் பலப்பட வேண்டும்…

-  திவ்யா ஈசன்


கருத்துகள் இல்லை: