நீ
மரபைப் பேணும் கூட்டத்தில்
வளர்ந்தவள்
அவன்
மரபை உடைக்கும் கூட்டத்தில்
நீ
நிலம் சார் தற்சார்பில்
வாழ்பவள்
அவன்
நிலம் சாரா அயற்சார்பில்
நமது மொழி
அவர்களுடையது போல் இல்லை
நமது தெய்வம்
அவர்களுடையது போல் இல்லை
நமது நம்பிக்கை
அவர்களுடையது போல் இல்லை
நமது பண்பாடு
அவர்களுடையது போல் இல்லை
நமது உடை முறை
நமது உணவு முறை
நமது உறவு முறை
அவர்களிலிருந்து மாறுபட்டது இல்லையா
கொக்கரை நாதமும்
பறை நாதமும்
எப்படி பொருந்தும் என்கிறாய்?
நம் அம்மையை விட
அல்லது என்னை விட
அவன்
ஒரு கைப்பிடி அளவு
கூடுதலாக அன்பு செய்வானெனில்
நீ போ! போய் பொருந்திக்கொள்
இன்னமும்
இன உணர்விலிருந்து விடுபடாத
என்னால் முடியவே முடியாது அது
ஒருவேளை முடிந்தால்
பின்னாளில் வந்து பொருந்திக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக