07 டிசம்பர் 2023

இப்போது இதுதான் என் சாதி

இனம் என்ன

சாதி என்ன

என விண்ணப்பத்தில் கேட்கிறார்கள்

கல்வியிலும்

வேலைவாய்ப்பிலும்

அரசின் இட ஒதுக்கீட்டைத் தருவதற்கு

 

உன்னிடம் எனக்கு

எந்த விண்ணப்பமும் இல்லை

பிறகு ஏன்

உன் சாதி என்னஎன கேட்கிறாய்

நீயும் ஏதேனும்

இட ஒதுக்கீடு தரப்போகிறாயா?

 

எங்கள் மலை ஊரில்

எனது அப்பா காலம் வரை

சாதிகள் இல்லாமல்தான் இருந்தது

இந்த தலைமுறையில்தான்

மெல்ல கீழே இறங்கி

பள்ளிக்கூடம் போனோம்

அலுவலகம் போனோம்

அங்கேதான் சாதி இல்லை என்று

எங்களைப் புறக்கணித்தார்கள்

 

பின் ஊர்கூடி

மாவட்ட ஆட்சியரிடம்

எங்களுக்கும் சாதி வேண்டும்என

மனு கொடுத்தோம்

பதில் ஏதும் இல்லை

அதன் பின்

எங்களுக்கும் சாதி வேண்டும்!

எங்களுக்கும் சாதி வேண்டும்!!’

என போராடத் தொடங்கினோம்

99ஆவது பட்டினிப்போராட்டத்தில்

கருணைக் காட்டிய அரசு

சிறப்பு குழு ஒன்றை அனுப்பி

எங்களை எந்த சாதியில் சேர்க்கலாம் என

தீர ஆய்வு செய்து

ஒரு சாதியில் சாதிச்சான்றிதழ் தந்தது

 

அதைத்தானே கேட்கிறாய்

கட்டாயம் எனில் சொல்கிறேன்

இனம் : பழங்குடியினர்

சாதி : காணிக்காரன்

ஆனால்

எனக்கு உன் இட ஒதுக்கீடு வேண்டாம்

 

-                     - திவ்யா ஈசன்

 


கருத்துகள் இல்லை: