மலைச்சரிவில் நிலம் இருக்கிறது
மரச்சீனியும் சேம்பும் விளைகிறது
மரமேறிய மிளகுக்கொடி பற்றிவிட்டது
அண்டிமா காய்க்கத் தொடங்கிவிட்டது
மா பலா வழை பூர்த்தி
சர்க்கரைநார்த்தை யாவும்
தானே கனிந்து தானே உதிரும்
தினை முதிர்ந்து கதிர் சரியும்
மலையூரன் அவன்
காயலில் இறங்கி மீன் பிடிப்பான்
வரையாட்டை வேட்டையாடுவான்
தனித்தே பெருந்தேன் அகழ்வான்
நாய் உண்டு
பரண் உண்டு
வீடு உண்டு
நதி உண்டு
வனம் உண்டு
உலையில் கொதிக்க வேண்டியதெல்லாம்
அவன் விளையில் உண்டு
மேன்மேலும் படிக்க வேண்டும்
அரசு வேலைக்குப் போக வேண்டும்
சுகபோகமாய் வாழ வேண்டும்
பணம் சம்பாதிக்க வேண்டும்
என்ற அற்ப ஆசைகளுக்கு முன்
அவன் என்னை விரும்புகிறான்
நானும் இயற்கைக்குத் திரும்புகிறேன்
அவன் மண்வெட்டியின் முன்
தற்சார்பு தேங்கி நிற்கிறது
அவன் கட்டுடலின் முன்
என் அழகு ஏங்கி நிற்கிறது
மின்சாரம் உள்ளதும்
வாகனம் உள்ளதும்
சூப்பர் மார்க்கட் உள்ளதும்
ஸ்மார்ட் போன் உள்ளதுமான
இந்த ஊரை விட்டுவிடுகிறோம்
நாங்கள்
மரங்களுக்கு இடையில்
விவசாயம் செய்வோம்
மரங்களைச் சுற்றி சுற்றி
காதல் செய்வோம்
மருதமரத்துக் கிளிகள் பார்க்க
வனாந்தரத்தில் புணர்ந்துகொள்வோம்
குறிஞ்சியின் ஆதிகுடிகள் மிச்சம் இருக்கும்
இம்மலைச்சிறுகுடி இங்கேயே இருக்கட்டும்
நவநாகரிகம் பழக்காமல்
எங்களை இங்கேயே விட்டுவிடுங்கள்
- திவ்யா ஈசன்
07 டிசம்பர் 2023
எங்களை இங்கேயே விட்டுவிடுங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக