07 டிசம்பர் 2023

சில வருடங்களுக்கு பிறகு

 நீ அக் கணம் ஏதேச்சையாகதான்

கடந்து போனாய்

நான் இருபது வருடங்களைக்

கடந்து வந்தேன்

இருவரும் சந்தித்துக்கொண்டோம்

காலம் கடந்துப் பேசிக்கொண்டோம்

 

2002-

உன் விழியிலிருந்து

ஒரு நொடியில்

ஒரு கோடி தோட்டாக்கள் புறப்பட்டு

ஒருமுக வெறியோடு

என் ஒரே இதயத்தை வீழ்த்தின

 

2022

உன் அதே விழியில்

இப்போதும்

 தோட்டாக்கள் இருந்தால்

இன்னொரு முறை

என் இதயத்தை வீழ்த்தக்கூடும்

 

உன் ஞாபகமாய்

உன் ஞாபகம் மட்டும்தான்

என்னிடம் இருந்தது

அது நூலாம்படைப் படிந்து

ஒரு ஓரமாய் இருந்தது

அதைதான் தூசித்தட்டினாய்

இப்போது பார்

அது மிளிரத் தொடங்கிவிட்டது

 

இனி

என் மனைவி மக்களை

அடிக்கடி நினைத்துக்கொள்ள வேண்டும்

 

-                    - மகேஷ் பொன்


 

 

கருத்துகள் இல்லை: