06 டிசம்பர் 2023

பலாப்பழக் காலம்

 இப்போது நான்

என் ஊரில் இல்லை

 

இது பலாப்பழக் காலம்

முற்றத்தில் நிற்கும் தேன் வருக்கை

கமழத் தொடங்கியிருக்கும்

 

பகலில்

கடுவனும் மந்தியும்

பெற்றத்தோடு வந்து

கடித்து குதறி தின்றுவிட்டு

சவனியை

மூடெல்லாம் சிதறியிருக்கும்

 

இரவில்

கரடியும் பழமணியும்

தனித்தனியே வந்து

தடம் தெரியாமல் தின்றுவிட்டு

நகக் கீறலை

மரமெல்லாம் விட்டுபோயிருக்கும்

 

பூவைகள் கூட்டமாக வந்து -

சத்தியத்திற்கு கட்டுப்பட்டு 

சிறு காம்பில் தொங்கும்  பெரும் பழத்தின்

முற்றிய வெடிப்பின் இடுக்கில்

ஒவ்வொரு கொத்து கொத்திவிட்டு

திடுக்கிட்டு திடுக்கிட்டு பறப்பதை

கடந்த பலாப்பழக் காலத்தில்

நான் கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன்

 

இந்த நகரச் சாலை ஓரத்தில் ஒருவன்

பலாப்பழங்களைக்

கடை விரித்திருந்தான்

பலாப்பழம்பலாப்பழம்என

கூவிக் கொண்டிருந்தான்

அவன்

பிளந்து காட்டிய பலாவில் ஊடுருவி

என் மலை ஊருக்கே போய்விட்டேன்

நான் எதுவுமே வாங்கவில்லை

சீக்கிரமாக கடந்து போய்விட்டேன்

அப்படியே நாலே எட்டில்

பலாப்பழக் காலத்தையே கடந்து போய்விட்டேன்

 

ஆனாலும் இன்று

அந்த முற்றத்தில் நிற்கும்

தேன் வருக்கையின் பால் கறை

என் கைகளில் ஒட்டியது

நான்

அதன் மஞ்சள் வண்ணத்தைப் பார்த்தேன்

அதன் இழுமெனும் மணத்தை நுகர்ந்தேன்

அதன் தீம் சுளையை சுவைத்தேன்

 

-                    -  திவ்யா ஈசன்


 

கருத்துகள் இல்லை: