தொடையில் பிராண்டல்களுடன்
இரத்தம் சொட்ட சொட்ட வந்த
புள்ளிமான்ஒன்று
எங்கள் புறக்கடை விளையில்
மூன்று நாட்களுக்கு மேல்
தஞ்சம் அடைந்துள்ளது
நானும் என் நாயும்
அது பத்திரமாக இருக்கிறதா என்று
இன்றும் பார்த்துவந்தோம்
மாடம் ஏறி கோழி திருடும்
ஒரு வறிய சிறுத்தை
எங்கள் வீடண்டியே உலவும்
அதன் பம்மிய வருகையை
அதனை விரட்டியடிக்கும் லாவகத்தை
என் நாய் நன்கு அறியும்
”அந்த சிறுத்தையின் கண்களில்
இந்த மான் படாதபடி
நம்மை நம்பி வந்த விருந்தினரை
காத்துக்கொள்! காத்துக்கொள்!!” என்று
என் நாயின் காதில் சொன்னேன்
எனது பரிதவிப்பு
என் நாய்க்கு புரிந்திருக்க வேண்டும்
அதனால்தான்
அந்த மானைப் பார்த்து குரைப்பதில்லை
அடிக்கடி போய் போய்
அதன் இருப்பை உறுதிசெய்து வருகிறது
ஆனாலும் எனது நாய்
நல்லதொரு வேட்டை நாய்
அது முன்பு மானையும் வேட்டையாடியிருக்கிறது
என் நாய்
துரத்தத் தொடங்கும் போது
அந்த மான்
வேலி தாண்டி பாய்ந்தோடும் அளவுக்கு
அதன் கால்கள் பலப்பட வேண்டும்…
- திவ்யா ஈசன்
30 நவம்பர் 2023
சிறு வேண்டுதல்
இறுகிளியின் கருணை
இந்த வாழ்க்கை
என்மீது மட்டும் ஏன்
சுமத்திக்கொண்டே இருக்கிறது?
பாரம் தாங்காமல்
அச்சாணி உடைந்துவிடும் அளவுக்கு
வண்டி தடுமாறி தடுமாறிதான்
நகர்ந்துக்கொண்டிருக்கிறது
இன்று நான்
ஒரு ஆசுவாசத்திற்காக
வீட்டின் புறக்கடையில் உள்ள
சிற்றோடையின் நடுவில் தனித்திருக்கும்
ஒரு பாறையில் ஏறி அமர்ந்தேன்
இங்கு ஆட்களே இல்லை
நீர் சலசலத்துப் போனது
கல்லங்காரி மீன்கள் அப்பியிருந்தன
வானம் வெளிச்சமாய் இருந்தது
எதிரே பெரும் மலை தெரிந்தது
காற்றில் மரங்கள் சடசடத்தது
வனத்தில் ஏதோ ரீங்காரம் கேட்டது
பக்கத்தில் பலா மணம் வீசியது
ஆனாலும்
கரடி வருவதுகுறித்து
பயமில்லாமல்தான் இருந்தேன்
ஒர் இறுகிளி பெற்றம்
கீச்சிட்டப்படியே
என்னைக் கடந்து போனது
சிட்டுக்குருவியினும் சிறிதாய் இருக்கும்
அந்த இறுகிளியில் ஒன்றுதான்
என் பாரத்தில் இருந்து
110கிலோ மூட்டையை த் தூக்கிப் போனது
நான் வீடு திரும்பியப் போது
அத்தனை லேசாக இருந்தேன்
- திவ்யா ஈசன்










