08 ஏப்ரல் 2020

நாய்; ஒரு கொலை மிருகம்


ஒரு தீரா ஏக்கம் இருக்கிறது
அளவில் சிறியதுதான் என்றாலும்
அதிலிருந்து வெளியேற வேண்டும்
அரசே தடைசெய்துவிட்ட அதற்குள்
இச்சமூக இடைவெளி உள்ளிழுக்கிறது
இந்த தனிமை லயிக்க வேண்டுமே…
”குடி குடியை கெடுக்கும்” என்றோரு
வாசகம் ஞாபகம் வரவே
ச்சீ போ என அந்த நாய்யை விரட்டினால்
அது ஒரு சுற்று போய்விட்டு
மீள வந்து என் கால்களையே சுற்றுகிறது…
கண்ணாடி டம்ளரில் பழச்சாறு தந்து
மனைவி அவ்வப்போது உற்சாகமூட்டுகிறாள்
நாய் பார்த்துக்கொண்டு வாலாட்டுகிறது…
இடுப்பில் எதையோ திணித்தப்படி
அந்த சந்தைக் கடப்பவன் யாரோ
நாய் பெரும் குரலெடுத்து குரைக்கிறது…
கட்டி வீசிய கேரிபேக்கில் கவுச்சி வீச்ச
நாய் புட்டிநீக்கி எலும்பைக் கடிக்கிறது…
”தேடுங்கள் கண்டடைவீ ர்” என்பது
எத்தனை அனுபவமான வார்த்தை
அதோ டீ பாய்லரில் சொட்டுகிறதே
திராட்சை ரசமேதான் அது
நாய் இப்பொது நாவூரி நக்குகிறது…
முன்புறம் ஒரு விலை இருந்தது
ஐந்து, பத்து அதிகமாக
பின்புறம் ஒரே விலை இருக்கிறது
ஆள்பார்த்து நான்கு மடங்காக
கணக்கு பார்க்க என்ன இருக்கிறது
நாய் நன்றி உணர்ச்சியில் திளைக்கிறது…
சமூக அக்கறைக்கொண்ட ஒருவன்
அநியாயத்துக்கு எதிராக வாள் வீசுகிறான்
அவனுக்கு எப்படி புரியவைப்பது  
இங்கு நுகர்வு கட்டாயமில்லையே
நல்ல அமிர்தமும் விற்கப்படுகிறது
நல்ல விடமும் விற்கப்படுகிறது
இந்த குதிரை மூத்திரத்தை
யாரும் யார் வாயிலும் ஊட்டவில்லையே
நாய் தெருநாய்யை எல்லாம் கூட்டிவருகிறது…
அண்டை மாநிலத்திலும் தடைக்காலம்தான்
பின்வாசல் இல்லைப் போலும்
ஏக்கம் தீராத சில கவரிமான்கள்
கழுத்தில் கடிப்பட்ட காயத்துடன் 
தண்டவாளத்தில் செத்துக்கிடக்கிறது
இந்த நாய்தான் வேட்டையாடியிருக்கக் கூடும்...
நாய் ஒரு மிருகம் என
யாருக்குத்தான் தெரியாது!
 
- மகேஷ் பொன்


கருத்துகள் இல்லை: