அவன் யாரினும்
நல்லவன்தான்
குற்றம் செய்வது
குறித்து
நினைத்துக்கூடப்
பார்த்திருக்கமாட்டான்
ஆனாலும் செய்துவிட்டான்
கொலையினும் கொடுரக்
குற்றம் அது
ஒரு கோவில் கொடைவிழாவில்
பால்யம் மாறாத சிறுமியிடம்
நோட்டமிட்டு நோட்டமிட்டு
வழிப்பறித்தான்
ஒருவள் சேர்த்து
வைத்திருந்த
அக்காவின் எண்ணற்ற
பரிசுகள்
அம்மாவின் விலைமதிப்பற்ற
நகைகள்
அப்பாவின் கடைசி
சொத்து
அன்பான அவைகளைக்
கொள்ளையடித்தான்
மோகக் கண்களை முள்ளெடுத்து
குத்தினான்
வாலிப்பான கண்ணத்தில்
திராவகத்தை வீசினான்
கோவைப்பழ உதட்டின்
சிவப்பை சுரண்டினான்
நீண்ட கார்கூந்தலை
ஒட்ட கத்தரித்தான்
எடுப்பான கொங்கையின்
திமிரை சிதைத்தான்
மெல்லுடல் எங்கும்
நகத்தால் பிராண்டினான்
வாழைப் பழத்தில்
ஊசி ஏற்றுவது போல்
இதுவரை எழு கொலைகள்
செய்திருக்கிறான்
இக்கொலையை மிக
வலிமிக்கதாய் செய்தான்
இதோ இதோ என நம்பவைத்து
கழுத்தறுத்து
சின்ன பெண்ணின்
நலன் கருதி செய்த
கருணைக் கொலைமுயற்சிதான்
அது
யாரும் சாகவில்லையே என்கிறான்
நம்பும்படியாகவா
இருக்கிறது இது
குற்றங்கள் அதிகரிக்கவே
சிறைப்பட்டான்
எப்போதும் ஆளோடு
இருந்தாலும்
அரவமில்லா தனிமை
அது
கொலையுண்டவள் கனவில்
வந்ததற்காக
அவன் மார்பில்
உதை விழுகிறது
அது ஒரு இருட்டறை என்பதால்
இடம் மாறிய அடியில் செவுல் சிவக்கிறது
எவர்கிரின் பாடல்களை
முனுமுனுத்ததால்
அவன் முன்பல் உடைக்கப்பட்டது
தான் திருந்திவிட்டதாக
சொல்லிய போது
கட்டிவைத்து வதை
செய்யப்பட்டிருக்கிறான்
பாதாள கிணற்றிலிருந்து
எழுப்பும் சத்தம்
வெளியில் யாருக்குக்
கேட்கும்
தண்ணீரில் மீன்
வடிக்கும் கண்ணீர்
கரையில் யாருக்குத்
தெரியும்
மணி அடித்தால்
சோறு மட்டும்தான்
மற்றப்படி சிறை
வாழ்க்கை அவனை
ஒவ்வொருநாளும்
ஊமை குத்தாக குத்துகிறது
பாவம் விட்டு விடுங்கள்
அவனை
என் காதலைதான்
கொலை செய்தான்
கொலையுண்ட நான்
உயிருடன்தான் இருக்கிறேன்
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக