04 ஏப்ரல் 2020

லட்சிய லட்டு



லட்டு இனிப்பானதுதான் - ஆனாலும்
எல்லோருக்கும் ஒரேவிதமாக இனிப்பதில்லை
வடிவ வண்ணங்கள் கூட வேறுபடலாம்
ஒருவனுக்கு சுடச்சுட லட்டு வாய்த்துவிடுகிறது
மற்றவனுக்கு தட்டுநிறைய லட்டு வசப்படுகிறது
பலர் லட்டு கனவில் லட்டை புணர்ந்து
லட்டு வடிவில் லட்டு குட்டி பெறுகிறார்கள்

சிறப்பு விருந்தொன்றில்
தலைக்கொரு லட்டு பரிமாறப்படுகிறது
சர்க்கரை வியாதிகாரன் இலையில்
லட்டு மட்டுமே வைக்கப்படுகிறது

ஓர் ஏழைச் சிறுவனுக்கு
லட்டு என்றால் கொள்ளைப் பிரியம்
லாலா கடையின் கண்ணாடி பேழைக்குள்
ஈ ஒன்று மாட்டிகொண்டதைப் பார்த்து
நாவூரித் ததும்ப - அந்த
லட்டை கண்களால் மொய்த்துக்கொள்கிறான்

அனுதினமும் நூற்றியெட்டு முறை
லட்டு, லட்டு, லட்டென்றெழுதி
நோட்டை காலி செய்தவனுக்கு
பக்தியில் பரவசமான மாமி ஒருத்தி
பத்து லட்டுகளைப் பரிசளித்தாள்

இனையத்தில் பதிவு செய்து
தேவசானத்து லட்டை வரவழைத்தவன்
மொட்டையிலிருந்து தப்பித்துக்கொள்கிறான்

சாமர்த்தியமான சிலருக்கு
லட்டு செய்வதற்குரிய
மூலப்பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது

தலைமுறை தலைமுறையாக
லட்டுக்கு ஆசிர்வதிக்கப்பட்டவனைப் பார்த்து
பொறாமைக் கொள்பவன்
ஒரே ஒரு லட்டோடு
தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறான்

ச்சீ ச்சீ என்பவன் வாயில்கூட
மாமனார் வீட்டு லட்டு இனிக்கத்தான் செய்கிறது

கூழாங்கல்லை லட்டென கருதி
கடித்து பல்லுடைத்தவனை நோக்கி
மகத்தான லட்சியங்கள் பல்லிளிக்கிறது

மரத்தில் காய்ப்பதாய் நம்பி
லட்டு செடி வளர்ப்பவர்கள்
எப்பொது பரிப்பார்களோ லட்டுப்பழம்

லட்டுடனே பிறந்து
லட்டுடனே வளர்ந்து
லட்டுடனே சாவது
லட்டு போன்ற வாழ்க்கைதான் என்றாலும்
அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கையில் ஒருமுறையேனும்
லட்டு திண்ணும் நோக்கம் கொண்டவனுக்கு
கடைசி நேரத்தில் பூந்திதான் கிடைக்கிறது

பூந்தியில்தானே லட்டு செய்கிறார்கள்
என்றாலும் திருப்திபடாமல்
லட்டேதான் வேண்டும் என்பவனை
லட்டே சுவைத்திராத
இன்னொரு லட்டு விரும்பி எப்படி தேற்றுவான்
ஆக லட்டு இல்லாவிட்டால்
ஒரு புட்டு இருக்கிறது என்பான்

ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும்
பல்லாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தாய்
கையாலாகாதவனிடம் மலை போல் குவிந்துள்ள
அந்த லட்டை எடுத்து
இந்நாள்வரை லட்டே புசித்திராத பிரஜைகளுக்கு
போசித்தருளும் கர்த்தாவே!
பன்னிரெண்டு லட்டுகள் மிச்சம்தான் வரும்
 
- மகேஷ் பொன்


கருத்துகள் இல்லை: