அவன்
பொழிந்திட்டால் போதும்
யாவும்
நனைந்திடக் கூடும்
அது
ஒரு வசந்த கால பனிமழை…
அது
ஒரு பன்னீர் மரத்தின் பூப்பொழிவு…
”தானம்
தம்த தானம்
தம்த
தானம் தம்த தானம்
பந்தம்
ராக பந்தம்
உந்தன்
சந்தம் தந்த சொந்தம்”
வளையோசை
கலகலவென-
கால்
நூற்றாண்டை கடந்தும்
காதில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
படைக்கலாம்
படிக்க வைக்க முடியுமா?
பாடலாம்
கேட்க வைக்க முடியுமா?
இசைக்கொரு
பல்கலைக்கழகம் அவன்-
பட்டித்தொட்டியெல்லாம்
ரசிக்கவைத்தான்.
அதிலொன்று
உலக கீதம் ஆகட்டுமே!
அதை
கேட்டு பாறை தூளாகட்டுமே!!
இந்த
சங்கீத ஜாதி முல்லை
இன்னும்
இன்னும் மணம் பரப்பட்டுமே!!!
அவன்
மேதமை ஆரோகணம்…
அவன்
திமிர் அவரோகணம்…
அழுகையின்
கண்ணீர்
துடைத்தவன்.
வருத்தத்தை
விரட்டி
அடித்தவன்.
பயத்தை
கட்டுப்படுத்தியவன்.
கோபத்தை
குளிர்
ஊட்டியவன்.
மகிழ்ச்சியை
இரட்டிப்பு
ஆக்கியவன்.
அதிகாலைத்
தேனீரில்
ரிதம்
சேர்த்தவன்.
நகரப்
பேருந்தின் நெரிசலில்
தொட்டில்
கட்டியவன்.
முள்ளானப்
பாதையில்.
பூக்கள்
தூவியவன்
உழைப்பின்
பாரம்
குறைத்தவன்.
மாலை
நேர வானத்தை
சிவக்க
செய்தவன்.
விழாவீட்டின்
பந்தலை
பரிவினில்
அலங்கரித்தவன்.
இரவின்
மடியில்
உறங்க
வைத்தவன்.
நீண்ட
பயணங்களை
இனிதாக்கியவன்.
கவிதையில்
சந்தம்
புகுத்தியவன்.
இந்த
காதலை
செமயா
வளப்படுத்தியவன்.
அன்பு
அனாதையானால்
அணைத்துக்
கொண்டவன்.
என்
தனிமையை
மேலும்
லயிக்க செய்தவன்.
தாலாட்டு
முதல்
ஒப்பாரி
முடிய
ஓங்கி
ஒலிக்கும்
ரீங்காரம்
அவன்…
பாட்டில்தான்
ஒளடவம், ஷாடவம்
இசைக்
காட்டில் அவனே சம்பூர்ணம்…
நாட்டார்,
கருநாடக, மேற்கத்திய, ஜாஸ்ராக்கில்
பாடப்படவில்லை
அது;
வானின்
துபு துபு
காற்றின்
சிலு சிலு
தீயின்
சர சர
நதியின்
சல சல
புவியின்
ஹம் – என
ஐம்பூத
ஓசை அது.
இராகம்,
தாளம், பல்லவி ஆலபனையில்
சமைக்கப்படவில்லை
அது;
திருநெல்வேலி
அல்வா
மதுரை
ஜிகர்தண்டா
திண்டுக்கல்
பிரியாணி
உதகை
முள்ளங்கி ஜாஸ்
நாகர்கோயில்
நேந்திரம் சிப்ஸ்
கோவில்பட்டி
எள்ளுருண்டை - என
அறுசுவை
படையல் அது.
கல்யாணி,
கீரவாணி, தோடி, பைரவியில்
கோர்க்கப்படவில்லை
அது;
வைரம்
வைடூரியம்
முத்து
மரகதம்
மாணிக்கம்
பவளம்
புட்பராகம்
கோமேதகம்
நீலம்
– எனும்
நவரத்தின
மாலை அது.
ச
ரி க ம ப த நி ஸ்தாயியில்
சுருதி
சேர்க்கவில்லை அது;
அ
ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ – எனும்
உணர்ச்சியின்
ஸ்வரங்கள் அது.
அவன்
இசைத்தால்;
பந்துவராளியில்
தாண்டவம் அமைதி கொள்ளும்
நீலாம்பரியில்
எல்லாம் நிரந்தரத்துயில் கொள்ளும்
தேவகாந்தாரியில்
நெஞ்சுரம் கூடிக் கொள்ளும்
த்விஜாவந்தியில்
நோய் நீங்கிக் கொள்ளும்
பூபாளம்
கேட்டவனை நிலை கொள்ளும்
ஹிந்தோளம்
கேட்டவனை சிலை கொள்ளும்
அவனிசையில்லா
ஒரு நாள்
எப்போதுமில்லை
நமக்கு…
காற்றுள்ள
காலம் வரையில்
இறப்புமில்லை
அவனுக்கு…
ஒரு
வள்ளுவன்
ஒரு
இயேசு
ஒரு
ஆர்யபட்டா
ஒரு
டாவின்சி
ஒரு
ராசராசன்
ஒரு
டார்வின்
ஒரு
நியுட்டன்
ஒரு
ஸ்மித்
ஒரு
எடிசன்
ஒரு
மார்க்ஸ்
ஒரு
அம்பேத்கர்
ஒரு
காஸ்ட்ரோ
ஒரு
சூரியன் ஒரு சந்திரன்
ஒரு
ராஜா! ஒரே ஒரு ராஜாதான்!!
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக