நான் ஒரு பூஞ்செடி
பூக்கும்முன் பிடுங்கி
வந்தீர்…
என் நிலம் வேறு
ஒரு தொட்டியில்
நட்டீர்…
வளராமல் கரண்டு
நின்றேன்
தினமும் நீர் ஊற்றினீர்…
நிறைய பூக்க வேண்டுமே
உரமென எதையோ இட்டீர்…
இல்லில் நிழலிலேயே
இருக்கிறேன்
முதலில் வெளியில்
மாற்றுங்கள்
என் மீது வெயில்
படட்டும்!
வாரத்திற்கு எழு
நாட்கள்…
மாதத்திற்கு முப்பது
நாட்கள்…
ஆண்டாண்டாய் நானொரு
செக்குமாடு.
இன்றிலிருந்து
மூன்றாம் நாள்
பொங்கல் வடையென
அடுப்படித்திட்டம்
இருக்கிறது…
மூத்தவளை டாக்டராக்கும்
சமன்செய் திட்டமும்
இருக்கிறது…
இருப்பினும்
விடிதலும் அடைதலும்
சலிப்பூட்டுகிறது.
ஞாயிற்றுகிழமையின்
காலை காபி;
உனக்கு பரவசமூட்டுகிறது!
எனக்கு பரபரப்பூட்டுகிறது!!
உனது நண்பர்கள்
இன்னமும்
உள்ளூரில்தான்
இருக்கிறார்கள்…
எனது நண்பர்கள்தான்
அமெரிக்க ஐக்கிய
நாடுகளுக்கு
ஒரே இரவில் குடிபெயர்ந்துவிட்டனர்.
பக்கத்து ஊர் எனக்கு
மட்டும் ஏன்
தூரத்து மாவட்டத்தில்
இருக்கிறது?
உன்னுடனான ஒரு
பயணத்தை
எப்போது உறுதிசெய்வாய்!
செய்யும் தொழிலே
முதல் மனைவி…
கனவில்கூட கோப்புகள்
காண்பாய்…
கணினி முன்னே அமிழ்ந்துவிடுகிறாய்…
உடைந்த கண்ணாடிச்
சில்லுகளில்
உன் முகம் பலவாகத் தெரிகிறது…
அதில் நான் கண்ட
இரண்டாவது முகம்
அலுவலக முகம்…
மூன்றாவது, நான்காவது
சொல்வதற்கில்லை!
நீ பிரபலம் ஆகும்
கனவில்
புத்தகங்களோடு
படுத்துக்கொள்கிறாய்…
நான் விட்டத்தை
வெறிக்கிறேன்;
பரணில் கட்டிவைத்திருப்பவை
எல்லாம்
எனது லட்சிய மூட்டைகள்தான்…
எம்.எஸ்சி., பி.எட்.,
பட்டமெல்லாம்
குழந்தைக்கு அ, ஆ கற்பிக்கத்தானா?
விளக்கேற்ற வந்தவள்
நான்-
ஒளி இழந்து நிற்கிறேன்
பார்!
நேரமில்லைதான்
உனக்கு-
இரவுமில்லையா எனக்கு?
எச்சரிக்கிறேன்!
இது நீல எச்சரிக்கை!!
யாவையும் பொறுத்துக்கொள்கிறேன்
யோணியின் நசநசப்புதான்
எரிச்சலூட்டுகிறது…
அறையில் ஒளிரும்
இந்த ஆண்ட்ராய்டை
லாக் செய்துவிட்டு
எனை அன்லாக் செய்.
இந்திய பண்ரொட்டியை
மேற்கத்திய கட்டன்டீயில்
பிட்டு பிட்டு
சாப்பிடுவதில்
எனக்கு உடன்பாடில்லை.
ஒன்று நீயே வா!
அன்று என் போக்கிடம்
தடம் மாறக்கூடும்!!
காய்ந்த சருகுகள்தான்
சீக்கிரம் பற்றிக்கொள்ளும்
அது காத்திருப்பதும்
சிறு தீப்பொறிக்காகத்தான்…
எரியவா? எரிந்து
கரியவா?
எச்சரிக்கிறேன்!
இது நீல எச்சரிக்கை!!
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக