எனக்கென ஒரு தாய் இருக்கையில்
நீ எனக்கு முன் ஏன் பிறந்தாஆய்?
என் கைப்பிடித்து உலகம் பழக்கியவள்
நீ
என் பால்யத்தின் முதல் நண்பன்
நீ
நீ இல்லாத ஒருநாள்
வெறும் நாள்தான் எனக்கு…
என்றும் ஒன்றாய்தான்
ஒரு குடம் தண்ணி யெடுத்து
ஒரு பூ பூத்தது…
மல்லி பூவே மல்லி பூவே
மெல்ல வந்து முள்ளிப் போனது.
ஒன்றாய்தான் பள்ளிக்கூடம் போனோம்.
ஒன்றாய்தான் ஊர் சுற்றினோம்.
ஒன்றாய்தான் வீடு திரும்பினோம்.
ஒன்றாய்தானே வளர்ந்தோம்
நீ மட்டும் எப்படி இப்படி
நீ விட்டுக்கொடுத்ததை எல்லாம்
அளவிட்டால்
நான் விடாமல்கொடுக்க வேண்டுமே
உனக்கு…
ஒப்புவமை இல்லா பேரன்பே
நின் போல் நீதான் இருக்கிறாய்…
ஏன் இத்தனைத் தியாகம்
முள்ளென குத்தியப் போதேல்லாம்
ரோஜாக்களை பரிசளித்தவள் நீ…
நான்தானே உன்னை அழவைப்பேன்
ஒரு மணநாளில் அனைத்திற்குமாய்
என்னை அழவைத்து போனாய்.
எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு
யார் வீட்டிற்கோ போனாய்.
என் நெஞ்சம் நிறைந்து கிடக்கும்
உன் தாவணி வாசத்தை ஏன் விட்டுப்போனாய்…
ஆண்டுகள் எத்தனை ஆயிற்று
உன் மடியில் தலைசாய்த்துக் கிடக்கிறேன்
உன் கை வலிக்கவே வலிக்காதா
இன்னமும் கோதிக்கொண்டே இருக்கிறாய்…
யாருக்கு இல்லை என்றாலும்
எனக்கெனும் போது
உன் அஞ்சரை பெட்டியில்
துட்டு குட்டி போடுகிறது…
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
அக்கா உடையான் பசிக்கு அஞ்சான்
பின்னிரவில் சாப்பிட வருவான் என
எடுத்து வைத்த அன்னம் ஊசிவிடும்
கொடுத்து வைத்த அன்பு ஊசிவிடுமா!
நான் தாய் வற்றில் பிறந்தேனா
உன் வயிற்றில் பிறந்தேனா
உனக்கிரண்டு பிள்ளைகள் வந்தபின்னும்
நான்தானா முதல் பிள்ளை…
அம்மா அப்பா இல்லாதவன்தான் அனாதையா
அக்கா இல்லாதவனும் ஒருவகை அனாதைதான்…
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக