20 ஏப்ரல் 2020
சிவனோட புள்ளிங்கோ
எங்க காஸ்டீயுமுக்கு
டிசைனர் யாரும் இல்லிங்க
எங்க மாடலிங்கு
கலரிங்கு கம்பி மயிருங்க
அடாவடி அள்ளுவோம்
கானா பாடி கொல்லுவோம்
நைனாயே கலாய்க்க சொல்லுவோம்
பைக்குலதான் சுத்துவோம்
போலீஸ கண்டா கத்துவோம்
அடிதடினு வந்தாக்க மொத்துவோம்
நட்பு மட்டும் இல்லியினா
நாங்க எல்லாம் செத்ருவோம்
மூனு வக கம்பா பொண்ணுங்க
பால் சோறு ஒன்னுங்கோ
நெய் சோறு ரெண்டுங்கோ
மண் சோறு மூனுங்கோ
மூனு வக அழகு பொண்ணுங்க
முற்கால ரசன ஒன்னுங்கோ
தற்கால ரசன ரெண்டுங்கோ
பிற்கால ரசன மூனுங்கோ
மைனா வாட்சே உட்தா! அச்சா...
நயன் தேடி அலையிரவங்க
நாங்க இல்லிங்கோ
புள்ளிங்கோனா
தொல்லைங்கோனா சொல்ரிங்க
தம்மு கிசா இல்லனாலும்
நாங்க சிவனோட புள்ளிங்கோ
எங்க நெஞ்சத்துல
மஞ்சா கொஞ்சம் ஓவரு
இங்கேயே ஸ்டண்டு பண்ணி
காட்டட்டுமா பவரு
நாங்க செம்பு இல்லாதத் தங்கம்
புள்ளிங்கோ! சாதியில்லாத
சங்கம்
19 ஏப்ரல் 2020
மேய்ப்பரை பலியிடும் ஆடுகள்
இரட்சிப்பின் மட்டன்
பிரியானி
ஏழைகளுக்கு பரிமாரப்படுகிறது
இரத்தமும் சதையுமாய்
காரம் கொஞ்சம்
தூக்கலாய்
தட்டில் அவரே இருக்கிறார்
கர்த்தர் நல்லவர்
என்பதை
பந்தியில் வந்து
ருசித்துப்பாருங்கள்….
பரிமாறுபவன் கொழுத்து
வீங்குகிறான்
உண்பவன் முன்பினும் மெலிகிறான்
ஊழியக்காரனுக்கு;
கார், பங்களா
ஜெருசலேம் சுற்றுலா
வங்கி இருப்பு
சுகபோக வாழ்க்கை
எல்லாம் தந்தீர்
ஸ்தோத்திரம் ஆண்டவரே!
வக்கற்றவனுக்கு;
இருப்பதையும் சுரண்டிவிட்டு
வெறும் இரட்சிப்பு
மட்டும்தானா!!
- மகேஷ் பொன்
இது வில்லன்களின் காலம்
’இந்த தெய்வீகக்
காதலை
யார் வந்து பிரித்துவிட
முடியும்?’
என்ற எங்கள் இறுமாப்பை
கொல்லன் கை இரும்பென
வடிவம் திரித்துவிட்டாயே!
நல்ல வளர்ந்துவிட்ட
செடியை
வேரோடு பிடுங்கி
வெந்நீரில் முக்கி
பாறையில் காயப்போட்டாயே!
உடைப்பட்ட காந்தமென
துருவங்கள் மாறினோம்
எப்போதும் ஒட்டவே
முடியாதா?
மாமா நீ குணச்சித்திரன்
எப்படி வில்லன்
ஆனாய்…
என்னவன் நாயகன்
இப்படி காமெடியன்
ஆனானே…
இனி நீ என் நண்பன்
அல்லன்
சாதா உறவினன் மட்டும்தான்…
எனக்கு செம கோபம்
வருகிறது
உன் அக்கா வாழ்க்கை
சூனியமாக!
உன் வாழ்க்கை விளங்காமல்
போக!!
- திவ்யா ஈசன்
18 ஏப்ரல் 2020
எச்சரிக்கை! இது நீல எச்சரிக்கை!!
நான் ஒரு பூஞ்செடி
பூக்கும்முன் பிடுங்கி
வந்தீர்…
என் நிலம் வேறு
ஒரு தொட்டியில்
நட்டீர்…
வளராமல் கரண்டு
நின்றேன்
தினமும் நீர் ஊற்றினீர்…
நிறைய பூக்க வேண்டுமே
உரமென எதையோ இட்டீர்…
இல்லில் நிழலிலேயே
இருக்கிறேன்
முதலில் வெளியில்
மாற்றுங்கள்
என் மீது வெயில்
படட்டும்!
வாரத்திற்கு எழு
நாட்கள்…
மாதத்திற்கு முப்பது
நாட்கள்…
ஆண்டாண்டாய் நானொரு
செக்குமாடு.
இன்றிலிருந்து
மூன்றாம் நாள்
பொங்கல் வடையென
அடுப்படித்திட்டம்
இருக்கிறது…
மூத்தவளை டாக்டராக்கும்
சமன்செய் திட்டமும்
இருக்கிறது…
இருப்பினும்
விடிதலும் அடைதலும்
சலிப்பூட்டுகிறது.
ஞாயிற்றுகிழமையின்
காலை காபி;
உனக்கு பரவசமூட்டுகிறது!
எனக்கு பரபரப்பூட்டுகிறது!!
உனது நண்பர்கள்
இன்னமும்
உள்ளூரில்தான்
இருக்கிறார்கள்…
எனது நண்பர்கள்தான்
அமெரிக்க ஐக்கிய
நாடுகளுக்கு
ஒரே இரவில் குடிபெயர்ந்துவிட்டனர்.
பக்கத்து ஊர் எனக்கு
மட்டும் ஏன்
தூரத்து மாவட்டத்தில்
இருக்கிறது?
உன்னுடனான ஒரு
பயணத்தை
எப்போது உறுதிசெய்வாய்!
செய்யும் தொழிலே
முதல் மனைவி…
கனவில்கூட கோப்புகள்
காண்பாய்…
கணினி முன்னே அமிழ்ந்துவிடுகிறாய்…
உடைந்த கண்ணாடிச்
சில்லுகளில்
உன் முகம் பலவாகத் தெரிகிறது…
அதில் நான் கண்ட
இரண்டாவது முகம்
அலுவலக முகம்…
மூன்றாவது, நான்காவது
சொல்வதற்கில்லை!
நீ பிரபலம் ஆகும்
கனவில்
புத்தகங்களோடு
படுத்துக்கொள்கிறாய்…
நான் விட்டத்தை
வெறிக்கிறேன்;
பரணில் கட்டிவைத்திருப்பவை
எல்லாம்
எனது லட்சிய மூட்டைகள்தான்…
எம்.எஸ்சி., பி.எட்.,
பட்டமெல்லாம்
குழந்தைக்கு அ, ஆ கற்பிக்கத்தானா?
விளக்கேற்ற வந்தவள்
நான்-
ஒளி இழந்து நிற்கிறேன்
பார்!
நேரமில்லைதான்
உனக்கு-
இரவுமில்லையா எனக்கு?
எச்சரிக்கிறேன்!
இது நீல எச்சரிக்கை!!
யாவையும் பொறுத்துக்கொள்கிறேன்
யோணியின் நசநசப்புதான்
எரிச்சலூட்டுகிறது…
அறையில் ஒளிரும்
இந்த ஆண்ட்ராய்டை
லாக் செய்துவிட்டு
எனை அன்லாக் செய்.
இந்திய பண்ரொட்டியை
மேற்கத்திய கட்டன்டீயில்
பிட்டு பிட்டு
சாப்பிடுவதில்
எனக்கு உடன்பாடில்லை.
ஒன்று நீயே வா!
அன்று என் போக்கிடம்
தடம் மாறக்கூடும்!!
காய்ந்த சருகுகள்தான்
சீக்கிரம் பற்றிக்கொள்ளும்
அது காத்திருப்பதும்
சிறு தீப்பொறிக்காகத்தான்…
எரியவா? எரிந்து
கரியவா?
எச்சரிக்கிறேன்!
இது நீல எச்சரிக்கை!!
- மகேஷ் பொன்
14 ஏப்ரல் 2020
உயிருடன்தான் இருக்கிறேன்
அவன் யாரினும்
நல்லவன்தான்
குற்றம் செய்வது
குறித்து
நினைத்துக்கூடப்
பார்த்திருக்கமாட்டான்
ஆனாலும் செய்துவிட்டான்
கொலையினும் கொடுரக்
குற்றம் அது
ஒரு கோவில் கொடைவிழாவில்
பால்யம் மாறாத சிறுமியிடம்
நோட்டமிட்டு நோட்டமிட்டு
வழிப்பறித்தான்
ஒருவள் சேர்த்து
வைத்திருந்த
அக்காவின் எண்ணற்ற
பரிசுகள்
அம்மாவின் விலைமதிப்பற்ற
நகைகள்
அப்பாவின் கடைசி
சொத்து
அன்பான அவைகளைக்
கொள்ளையடித்தான்
மோகக் கண்களை முள்ளெடுத்து
குத்தினான்
வாலிப்பான கண்ணத்தில்
திராவகத்தை வீசினான்
கோவைப்பழ உதட்டின்
சிவப்பை சுரண்டினான்
நீண்ட கார்கூந்தலை
ஒட்ட கத்தரித்தான்
எடுப்பான கொங்கையின்
திமிரை சிதைத்தான்
மெல்லுடல் எங்கும்
நகத்தால் பிராண்டினான்
வாழைப் பழத்தில்
ஊசி ஏற்றுவது போல்
இதுவரை எழு கொலைகள்
செய்திருக்கிறான்
இக்கொலையை மிக
வலிமிக்கதாய் செய்தான்
இதோ இதோ என நம்பவைத்து
கழுத்தறுத்து
சின்ன பெண்ணின்
நலன் கருதி செய்த
கருணைக் கொலைமுயற்சிதான்
அது
யாரும் சாகவில்லையே என்கிறான்
நம்பும்படியாகவா
இருக்கிறது இது
குற்றங்கள் அதிகரிக்கவே
சிறைப்பட்டான்
எப்போதும் ஆளோடு
இருந்தாலும்
அரவமில்லா தனிமை
அது
கொலையுண்டவள் கனவில்
வந்ததற்காக
அவன் மார்பில்
உதை விழுகிறது
அது ஒரு இருட்டறை என்பதால்
இடம் மாறிய அடியில் செவுல் சிவக்கிறது
எவர்கிரின் பாடல்களை
முனுமுனுத்ததால்
அவன் முன்பல் உடைக்கப்பட்டது
தான் திருந்திவிட்டதாக
சொல்லிய போது
கட்டிவைத்து வதை
செய்யப்பட்டிருக்கிறான்
பாதாள கிணற்றிலிருந்து
எழுப்பும் சத்தம்
வெளியில் யாருக்குக்
கேட்கும்
தண்ணீரில் மீன்
வடிக்கும் கண்ணீர்
கரையில் யாருக்குத்
தெரியும்
மணி அடித்தால்
சோறு மட்டும்தான்
மற்றப்படி சிறை
வாழ்க்கை அவனை
ஒவ்வொருநாளும்
ஊமை குத்தாக குத்துகிறது
பாவம் விட்டு விடுங்கள்
அவனை
என் காதலைதான்
கொலை செய்தான்
கொலையுண்ட நான்
உயிருடன்தான் இருக்கிறேன்
- மகேஷ் பொன்
08 ஏப்ரல் 2020
அன்புள்ள சசிம்மா
எனக்கென ஒரு தாய் இருக்கையில்
நீ எனக்கு முன் ஏன் பிறந்தாஆய்?
என் கைப்பிடித்து உலகம் பழக்கியவள்
நீ
என் பால்யத்தின் முதல் நண்பன்
நீ
நீ இல்லாத ஒருநாள்
வெறும் நாள்தான் எனக்கு…
என்றும் ஒன்றாய்தான்
ஒரு குடம் தண்ணி யெடுத்து
ஒரு பூ பூத்தது…
மல்லி பூவே மல்லி பூவே
மெல்ல வந்து முள்ளிப் போனது.
ஒன்றாய்தான் பள்ளிக்கூடம் போனோம்.
ஒன்றாய்தான் ஊர் சுற்றினோம்.
ஒன்றாய்தான் வீடு திரும்பினோம்.
ஒன்றாய்தானே வளர்ந்தோம்
நீ மட்டும் எப்படி இப்படி
நீ விட்டுக்கொடுத்ததை எல்லாம்
அளவிட்டால்
நான் விடாமல்கொடுக்க வேண்டுமே
உனக்கு…
ஒப்புவமை இல்லா பேரன்பே
நின் போல் நீதான் இருக்கிறாய்…
ஏன் இத்தனைத் தியாகம்
முள்ளென குத்தியப் போதேல்லாம்
ரோஜாக்களை பரிசளித்தவள் நீ…
நான்தானே உன்னை அழவைப்பேன்
ஒரு மணநாளில் அனைத்திற்குமாய்
என்னை அழவைத்து போனாய்.
எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு
யார் வீட்டிற்கோ போனாய்.
என் நெஞ்சம் நிறைந்து கிடக்கும்
உன் தாவணி வாசத்தை ஏன் விட்டுப்போனாய்…
ஆண்டுகள் எத்தனை ஆயிற்று
உன் மடியில் தலைசாய்த்துக் கிடக்கிறேன்
உன் கை வலிக்கவே வலிக்காதா
இன்னமும் கோதிக்கொண்டே இருக்கிறாய்…
யாருக்கு இல்லை என்றாலும்
எனக்கெனும் போது
உன் அஞ்சரை பெட்டியில்
துட்டு குட்டி போடுகிறது…
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
அக்கா உடையான் பசிக்கு அஞ்சான்
பின்னிரவில் சாப்பிட வருவான் என
எடுத்து வைத்த அன்னம் ஊசிவிடும்
கொடுத்து வைத்த அன்பு ஊசிவிடுமா!
நான் தாய் வற்றில் பிறந்தேனா
உன் வயிற்றில் பிறந்தேனா
உனக்கிரண்டு பிள்ளைகள் வந்தபின்னும்
நான்தானா முதல் பிள்ளை…
அம்மா அப்பா இல்லாதவன்தான் அனாதையா
அக்கா இல்லாதவனும் ஒருவகை அனாதைதான்…
- மகேஷ் பொன்
நாய்; ஒரு கொலை மிருகம்
ஒரு தீரா ஏக்கம் இருக்கிறது
அளவில் சிறியதுதான் என்றாலும்
அதிலிருந்து வெளியேற வேண்டும்
அரசே தடைசெய்துவிட்ட அதற்குள்
இச்சமூக இடைவெளி உள்ளிழுக்கிறது
இந்த தனிமை லயிக்க வேண்டுமே…
”குடி குடியை கெடுக்கும்” என்றோரு
வாசகம் ஞாபகம் வரவே
ச்சீ போ என அந்த நாய்யை விரட்டினால்
அது ஒரு சுற்று போய்விட்டு
மீள வந்து என் கால்களையே சுற்றுகிறது…
கண்ணாடி டம்ளரில் பழச்சாறு தந்து
மனைவி அவ்வப்போது உற்சாகமூட்டுகிறாள்
நாய் பார்த்துக்கொண்டு வாலாட்டுகிறது…
இடுப்பில் எதையோ திணித்தப்படி
அந்த சந்தைக் கடப்பவன் யாரோ
நாய் பெரும் குரலெடுத்து குரைக்கிறது…
கட்டி வீசிய கேரிபேக்கில் கவுச்சி
வீச்ச
நாய் புட்டிநீக்கி எலும்பைக் கடிக்கிறது…
”தேடுங்கள் கண்டடைவீ ர்” என்பது
எத்தனை அனுபவமான வார்த்தை
அதோ டீ பாய்லரில் சொட்டுகிறதே
திராட்சை ரசமேதான் அது
நாய் இப்பொது நாவூரி நக்குகிறது…
முன்புறம் ஒரு விலை இருந்தது
ஐந்து, பத்து அதிகமாக
பின்புறம் ஒரே விலை இருக்கிறது
ஆள்பார்த்து நான்கு மடங்காக
கணக்கு பார்க்க என்ன இருக்கிறது
நாய் நன்றி உணர்ச்சியில் திளைக்கிறது…
சமூக அக்கறைக்கொண்ட ஒருவன்
அநியாயத்துக்கு எதிராக வாள் வீசுகிறான்
அவனுக்கு எப்படி புரியவைப்பது
இங்கு நுகர்வு கட்டாயமில்லையே
நல்ல அமிர்தமும் விற்கப்படுகிறது
நல்ல விடமும் விற்கப்படுகிறது
இந்த குதிரை மூத்திரத்தை
யாரும் யார் வாயிலும் ஊட்டவில்லையே
நாய் தெருநாய்யை எல்லாம் கூட்டிவருகிறது…
அண்டை மாநிலத்திலும் தடைக்காலம்தான்
பின்வாசல் இல்லைப் போலும்
ஏக்கம் தீராத சில கவரிமான்கள்
கழுத்தில் கடிப்பட்ட காயத்துடன்
தண்டவாளத்தில் செத்துக்கிடக்கிறது
பின்வாசல் இல்லைப் போலும்
ஏக்கம் தீராத சில கவரிமான்கள்
கழுத்தில் கடிப்பட்ட காயத்துடன்
தண்டவாளத்தில் செத்துக்கிடக்கிறது
இந்த நாய்தான் வேட்டையாடியிருக்கக் கூடும்...
நாய் ஒரு மிருகம் என
யாருக்குத்தான் தெரியாது!
யாருக்குத்தான் தெரியாது!
- மகேஷ் பொன்
05 ஏப்ரல் 2020
ஆற்றாமை கிளத்தல்
எல்லேறு சோம்பி மேலேறும் காலம்
அல் நீங்கி நீங்கித் தளரும்
புல்லேறு துளி எரிபுகை சூழ
மெல்லப் புலரும் பின்காலைப் பொழுது
வல்வாடை கதிர்ஊட வெளியாகித் தணியும்
வல்வாடை கதிர்ஊட வெளியாகித் தணியும்
கல்வரை சூல் மலை அடுக்கம்
அதல்வாழும் கயம் உடை அருவிப்புறம்
அதல்வாழும் கயம் உடை அருவிப்புறம்
அதவம் தீம்கனி வண்தத்தை கொய்யும்
இதழ்விரீஇ முல்லை படர்தோரணம் ஒளிரும்
தேதண்ணி உகும் தேயிலைக் காடும்
கூதளியும் தாழப்பரந்து பூத்துணங்கும் ஊர
மல்லி கடிமலர் பற்றி நுகர்நாசியென
பல்நுனிநா கொணர்ந்தேன் முதல்முத்தத்தை
கொல்லைக் கொரோனா வந்தவா யாயினும்
இல்காவல் தாண்டி புறக்கடை வாடா
எல்லைமீறி யெடுடா கொஞ்சம் - என்
மெல்லுதடு மூடிய மெய்படு அவத்தையை!!!
எல்லைமீறி யெடுடா கொஞ்சம் - என்
மெல்லுதடு மூடிய மெய்படு அவத்தையை!!!
- மகேஷ் பொன்
04 ஏப்ரல் 2020
லட்சிய லட்டு
லட்டு இனிப்பானதுதான் - ஆனாலும்
எல்லோருக்கும் ஒரேவிதமாக இனிப்பதில்லை
வடிவ வண்ணங்கள் கூட வேறுபடலாம்
ஒருவனுக்கு சுடச்சுட லட்டு வாய்த்துவிடுகிறது
மற்றவனுக்கு தட்டுநிறைய லட்டு
வசப்படுகிறது
பலர் லட்டு கனவில் லட்டை புணர்ந்து
லட்டு வடிவில்
லட்டு குட்டி
பெறுகிறார்கள்
சிறப்பு விருந்தொன்றில்
தலைக்கொரு லட்டு பரிமாறப்படுகிறது
சர்க்கரை வியாதிகாரன் இலையில்
லட்டு மட்டுமே வைக்கப்படுகிறது
ஓர் ஏழைச் சிறுவனுக்கு
லட்டு என்றால் கொள்ளைப் பிரியம்
லாலா கடையின் கண்ணாடி பேழைக்குள்
ஈ ஒன்று மாட்டிகொண்டதைப் பார்த்து
நாவூரித் ததும்ப - அந்த
லட்டை கண்களால் மொய்த்துக்கொள்கிறான்
அனுதினமும் நூற்றியெட்டு முறை
லட்டு, லட்டு, லட்டென்றெழுதி
நோட்டை காலி செய்தவனுக்கு
பக்தியில் பரவசமான மாமி ஒருத்தி
பத்து லட்டுகளைப் பரிசளித்தாள்
இனையத்தில் பதிவு செய்து
தேவசானத்து லட்டை வரவழைத்தவன்
மொட்டையிலிருந்து தப்பித்துக்கொள்கிறான்
சாமர்த்தியமான சிலருக்கு
லட்டு செய்வதற்குரிய
மூலப்பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது
தலைமுறை தலைமுறையாக
லட்டுக்கு ஆசிர்வதிக்கப்பட்டவனைப்
பார்த்து
பொறாமைக் கொள்பவன்
ஒரே ஒரு லட்டோடு
தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறான்
ச்சீ ச்சீ என்பவன் வாயில்கூட
மாமனார் வீட்டு லட்டு இனிக்கத்தான்
செய்கிறது
கூழாங்கல்லை லட்டென கருதி
கடித்து பல்லுடைத்தவனை நோக்கி
மகத்தான லட்சியங்கள் பல்லிளிக்கிறது
மரத்தில் காய்ப்பதாய் நம்பி
லட்டு செடி வளர்ப்பவர்கள்
எப்பொது பரிப்பார்களோ லட்டுப்பழம்
லட்டுடனே பிறந்து
லட்டுடனே வளர்ந்து
லட்டுடனே சாவது
லட்டு போன்ற வாழ்க்கைதான் என்றாலும்
அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கையில் ஒருமுறையேனும்
லட்டு திண்ணும் நோக்கம் கொண்டவனுக்கு
கடைசி நேரத்தில் பூந்திதான்
கிடைக்கிறது
பூந்தியில்தானே லட்டு செய்கிறார்கள்
என்றாலும் திருப்திபடாமல்
லட்டேதான் வேண்டும் என்பவனை
லட்டே சுவைத்திராத
இன்னொரு லட்டு விரும்பி எப்படி
தேற்றுவான்
ஆக லட்டு இல்லாவிட்டால்
ஒரு புட்டு இருக்கிறது என்பான்
ஐந்து அப்பங்களையும் இரண்டு
மீன்களையும்
பல்லாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தாய்
கையாலாகாதவனிடம் மலை போல் குவிந்துள்ள
அந்த லட்டை எடுத்து
இந்நாள்வரை லட்டே புசித்திராத
பிரஜைகளுக்கு
போசித்தருளும் கர்த்தாவே!
பன்னிரெண்டு லட்டுகள் மிச்சம்தான்
வரும்
- மகேஷ் பொன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










