14 ஜனவரி 2021

இன்றையத் தேநீர்


தேநீரில் என்ன இருக்கிறது
டீகாசன் கூடுதலாய் இருக்கிறது
டீகாசன் குறைவாய் இருக்கிறது
இனிப்பாய் இருக்கிறது
இனிப்பில்லாமல் இருக்கிறது
சூடாக இருக்கிறது
சூடின்றி இருக்கிறது
கருஞ்சிவப்பாய் இருக்கிறது
இளஞ்சிவப்பாய் இருக்கிறது
குடிக்கிற மாதிரி இருக்கிறது
கொட்டுகிற மாதிரியும் இருக்கிறது
இருக்கிறது இன்னும்
அதில்
வனம் மனிதனைக் கொன்ற வரலாறு இருக்கிறது
பாரம்பரிய பயிர்விப்பிற்கு வந்த நோய் இருக்கிறது
வேளாண் பொய்த்த இனக்குழுவின் மூடத்தனம் இருக்கிறது
வறுமையின் இருண்ட பக்கம் இருக்கிறது
தலைமுறைகளின் அடிமை வாழ்வு இருக்கிறது
முதலாளித்துவத்தின் சுரண்டல் இருக்கிறது
துரைமாரின் ஏளனச் சிரிப்பு இருக்கிறது
அதிகாரத்தின் சவுக்கடி இருக்கிறது
தொடர் மழையின் நசநசப்பு இருக்கிறது
குளிரில் உறையும் கொடும் இரவுகள் இருக்கிறது
அட்டைகள் உறிஞ்சிய இரத்தம் இருக்கிறது
தொழிற்சாலையின் காது கிழிக்கும் இரைச்சல் இருக்கிறது
கொதிகலனின் சதை வேகும் வெக்கை இருக்கிறது
யானை கூட்டங்கள் செய்த துவம்சம் இருக்கிறது
கரடி சிறுத்தை புலியின் பிராண்டல் இருக்கிறது
தேனீ கடந்தை தேள் கொட்டிய வீக்கம் இருக்கிறது
அரணைக்கும் பாம்புக்கும் பலியான உயிர் இருக்கிறது
ஒரு வர்க்கத்தின் முடக்கப்பட்ட போர் குணம் இருக்கிறது
சீண்டப்பட்ட சிறுமிகளின் ஓலம் இருக்கிறது
பெண்ணியம் இழந்த கற்பு இருக்கிறது
அடிப்படை உரிமைகளின் புறக்கணிப்பு இருக்கிறது
ஒடுக்கப்பட்ட போராட்டத்தின் மரணம் இருக்கிறது
இயலாமையின் செருப்படி இருக்கிறது
கவாத்து வெட்டப்படும் இளையோரின் வளர்ச்சி இருக்கிறது

ஒரு கோப்பைத் தேநீர்
எப்போதும் போல் குடித்து
எப்போதும் போல் மூத்திரம் பெய்வதல்ல
அது
காலை குளிரின் தீக்கனப்பு
அலுவல் அழுத்தத்தின் புத்துணர்ச்சி
பேசாத மெளனத்தின் வார்த்தைகள்
வந்தாரின் உபசரிப்பு
நட்பின் அளாவுதல்
காதலரின் சந்திப்பு
புது வாழ்க்கையின் சம்மந்தம்
ஏழையின் பசிக் கொல்லி
வயோதிகத்தின் உணவு
சிலருக்கு விடமுடியாப் போதை
அது மானுடத்தில் கலந்த கலாச்சாரம்
அது அகிடைமட்ட பொருளாதாரம்

பரிதவிப்பின் நுரை பொங்கும்
எனது இன்றையத் தேநீர்
குடிக்கும் நிலையில் இல்லை
எல்லா மழைக்காலமும்
தேநீரில்
கொஞ்சம் மிளகை அள்ளி போட்டிருக்கிறது
இந்த மழைக்காலம்
தேநீரில்
கொஞ்சம் மண்ணை அள்ளி கொட்டிவிட்டது


- மகேஷ் பொன்


கருத்துகள் இல்லை: