14 ஜனவரி 2021

எனக்குள் ஒரு சேகுவேரா இருந்தார்


எனக்குள் ஒரு சேகுவேரா இருந்தார்
அவர்;

அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்தை
கியுப கம்யூனிசம் வெற்றிக்கொண்டதை
சொல்லி சிலாகித்துக்கொண்டிருப்பார்…

மார்க்சியம் குறித்து
ரஷ்ய புரட்சி குறித்து
மாவோ குறித்து
போகுமிடமெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்…

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக
முதல் ஆளாய் கையை உயர்த்துவார்…

ஏகாதிப்பத்தியத்தின் பொறிக்கித்தனத்தை
சமரசமின்றி தோலுரிப்பார்…

தனியார்மய தாராளமய உலகமய சுரண்டல்
சமவாய்ப்பு, சமவேலை, சமஉரிமை, சமபங்கு
உழைப்புக்கேற்ற ஊதியம்
தற்சார்பு பொருளாதாரம் - குறித்தெல்லாம்
மூச்சுவிடாமல் பாடம் எடுப்பார்…

முதலாளித்துவம், வர்க்கப்போராட்டம்
பொருள்முதல்வாதம், நாத்திகம்
கூட்டுப்பண்ணை, இயற்கைவிவசாயம்
என ஞானசோழிகளை உருட்டிக்கொண்டிருப்பார்…

ஜனநாயகத்தின் பேரில் ஒடுக்கப்படும் போதெல்லாம்
கடும் எதிர்வினையாற்றியிருக்கிறார்…

அதிகாரத்தின் சாட்டைக்கு எதிராக
கூர்வாளை வீசியிருக்கிறார்…

துண்டு பிரசுரம் வினியோகித்ததற்காக
குண்டர்களால் தேடப்பட்டிருக்கிறார்…

அரசுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்காக
காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டிருக்கிறார்…

”புரட்சி ஓங்குக” என்று முழங்கியதோடல்லாமல்
அதை நெஞ்சத்தில் பச்சை குத்தியிருக்கிறார்…

அவர் தன் பதின்வயதில்
சோசியலிசக் கோட்டையை கட்டுவதற்காக
செங்கல், மணல், சிமெணட், ஜல்லி எல்லாம்
சேகரித்துக்கொண்டிருந்த போது
அவர் அப்பா
”ஆண்டியெல்லாம் கூடி மடம் கட்டிய கதைதான்” என்பார்
அப்போதெல்லாம்
”இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர”
என புரட்சியின் வேகத்தை மேலும் முடுக்குவார்…

எனக்குள் ஒரு சேகுவேரா இருந்தார்
அவர்;
எப்படியோ தனது 32ஆம் வயதில்
லெளகீக வாழ்க்கைக்குள் வந்துவிட்டார்…
அநியாயத்தைக் கண்டால் பொங்கத் தெரிந்த அவருக்கு
சரியாக சோறு பொங்கத் தெரியவில்லை
இப்போது அவர் கையிலிருப்பது
கூர்வாள் இல்லை தோசைப்பிரட்டி
ஒரு தோசையை மாத்திப்போடத் தெரியவில்லை
இவர்தான் சமுதாயத்தை மாத்தி கிழிக்கப்போகிறார்
விதண்டாவாதம் பேசுவதை நிறுத்திவிட்டு
பிள்ளைக்கு பேம்பர்ஸ் வாங்கிவர அதட்டப்படுகிறார்…
வீட்டுக்கு வாடகை கட்ட துப்பில்லை
மூத்தவனுக்கு டியூசன் பீஸ் கட்ட துட்டில்லை
இவர்தான் ஜனநாயகத்தை இடித்துவிட்டு
சோசியலிசத்தை கட்டப்போகிறார்…
அடிக்கடி தலையில் குட்டு வாங்கும் அவர்
இப்போது கோமாவில் இருக்கிறார் போலும்
அவரது புரட்சிப் பயணத்தில்
தற்சமயம் அவருக்கு ஞாபகத்தில் இருப்பது
”தோழர்” என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான்…
 
 
- மகேஷ் பொன் 



கருத்துகள் இல்லை: