காதலிகளுக்கு
மதுவை கூடுதலாய் குடித்தவன்
தங்கைகளுக்கு
நலம் வாழ்கவென வாழ்த்தியவன்
மருமகளுக்கு
நல்ல மாமாவாக மாறியவன்
மனைவி ஓடிப்போகையில்
துன்பம் தொலைந்ததென விட்டுவிடுகிறார்கள்
மகள் வரிசை வந்தபோது
அவசரமாக பேருந்தில் ஏறும்
அந்த கருப்பு சுடிதார் போட்டவள்
அவளென்றே மூளை மங்குகிறது
பதட்டம் பற்றிக்கொள்கிறது
இதயத்தின் படபடப்பு வெளியில் கேட்கிறது
மூன்றாம் நாள் பசி மறந்தேவிட்டது
தேடலில் தொண்டைக் கவ்வுகிறது
யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை
தூக்கம் தொலைந்து போனது
கண்ணீர் காலியான பின்னும் அழுகை வருகிறது
ஆனாலும் முன்னவர்களுக்கு வந்தது போல்
உன் மீது கோபமே வரவில்லை…
சட்டென்று போகட்டுமென தூக்கி எறிய
பாவம் எனக்கில்லை நெஞ்சுரம்
திடீரென்று கையை உதறிவிட்டுப் போக
உனக்கு இருந்திருக்கிறது அது…
உடன்போக்கு
எப்போதுமே சுரத்திடைதான் நிகழ்கிறது
நீ நீ
முள்ளின் மீது நடந்து இரத்தம் சிந்துவாய்
சீக்கிரம் வீடு திரும்பிவிடு
என்னிலிருந்து தொடங்கும் உன் பாதையில்
இன்னமும்
பூக்களைதான் தூவிக்கொண்டிருக்கிறேன்…
றெக்கை முளக்காத இளங்குருவி
பறக்க முயன்று
கூட்டிலிருந்து கீழே விழுந்தால்
அங்கலாயித்து பறப்பதும்
அரற்றி விம்முவதும்
வலியின் வலியும் யாருக்கென
உனக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லைதான்
தாயின் கதகதப்பு அற்றுவிட்டதே
குளிர் ஜீரம் வரவில்லையா உனக்கு
இதோ நேரம் இருட்டிவிட்டதே
தெரு நாய்களிடம் பயமில்லையா உனக்கு…
இத்தனை நாள் இத்தனை நாள்
நான் பேணி வளர்த்த அன்பில்
எங்ஙனம் எங்ஙனம்
ஒரு நொடியில் கரியைப் பூசினாய்
ஆனாலும் நீ இல்லாத வீடு வீடில்லை
என் பேரன்பே நீ நீ வந்துவிடு…
நாற்கவிராசநம்பி விட்டுவிட்டார்
உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்
ஒன்பது வீடுதிரும்புதல்!
பத்து இழுத்துவருதல்!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக