மருமகளுக்கு சிறுதீனி வாங்காமல்
அக்கா வீடு சென்றேன்
அந்த சிறுவன் கையிலிருந்த குழந்தை
யாரோ முள்ளிவிட்ட வீரியத்தில் அழுதபோது
ஏமாறுதலின் சுவை
ஒரு பிஸ்கட் பாக்கட்டும்
இரண்டு ஆப்பிள்களுமாக இருந்தது
வாடிக்கையான ”அன்பு மெஸ்” என்றாலும்
உணவு இடவெளியில் தேநீர்தான் குடித்தேன்
அந்த காவியுடை ஆசாமி
சிக்னலில் சிவப்பு விளக்குக்காக காத்திருந்தபோது
ஏமாறுதலின் சுவை
சிகரெட் புகையாய் திகித்தது
கடைசி ஒரு ரூபாயையும் கணக்கிட்டு
சரியாக வீடு வந்து சேர்ந்தேன்
பேருந்துக்கு காசு இல்லாதவனின் வீடு
பேருந்துநிலையத்தின் பிளாட்பார்ம் எனும்போது
ஏமாறுதலின் சுவை
மதுவாகி போதை ஏற்றியது
ஏமாறுதலின் சுவை
ஒரு நாள்
வெண்ணிலா ஐஸ்கிரீமாய் உருகியது
இன்னொரு நாள்
சைடுடிஸ் ஆன தந்துரியாய் நொறுங்கியது
மற்றுமொரு நாள்
பைக்கின் சிற்றுண்டி நெடி வீசியது
ஒவ்வொரு நாளும்
புதிய சுத்தியல்கள் வந்திறங்கி
இந்த வளையாத ஆணியை
ஒவ்வொரு அடி அடித்துப்போக
அது மட்டன் பிரியாணியைப் பரிமாறுகிறது
இந்த வயதான பாட்டியின் மகனுக்கு
என்ன கஷ்டமோ
முகம் தெரியாத அவன் பெயரில்
நாலு இட்லியும் ஒரு வடையும் வாங்கினேன்
மீந்த சில்லரையையும் கொடுத்துவிட்டேன்
அதன் சுவை
என் மனைவி அவள் மாமியாருக்கு ஊற்றிய
பழையக்கஞ்சி போல் உவர்ப்பாய் இருந்தது
சம்பளம் வாங்கிய இரண்டாம் நாள்
இரந்து நின்றவன் யாசகன் இல்லை
அதானாலேயே ஒரு நூறு யாசித்தேன்
அதன் சுவை
உள்ளூர் கொடை விழாவின்
கடைசிப் பந்தி போல் கவனிப்பாய் இருந்தது
ஏதேனும் இருக்கும் போதில்லை
எதுவும் இல்லாதப் போதுதான்
ஏமாறுதலின் பசி கூடுதலாய் சாப்பிடுகிறது
பாத்திரமறிந்து இட்ட போதில்லை
திருவோடு ஈயத்தைப் பார்த்து இளிக்கும் போதுதான்
ஏமாறுதலின் சுவை கூடுதலாய் இனிக்கிறது
எனது வரிசை வரும்போது மட்டும்
பாத்திரம் தெரிவதே இல்லை
அதுவொரு குழந்தையைப் போல் இறைஞ்சுகிறது
நான் இன்னும் கொஞ்சம் ஏமாறுகிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக