மதுவை கூடுதலாய் குடித்தவன்
நலம் வாழ்கவென வாழ்த்தியவன்
துன்பம் தொலைந்ததென விட்டுவிடுகிறார்கள்
அந்த கருப்பு சுடிதார் போட்டவள்
இதயத்தின் படபடப்பு வெளியில் கேட்கிறது
மூன்றாம் நாள் பசி மறந்தேவிட்டது
தேடலில் தொண்டைக் கவ்வுகிறது
யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை
கண்ணீர் காலியான பின்னும் அழுகை வருகிறது
ஆனாலும் முன்னவர்களுக்கு வந்தது போல்
சட்டென்று போகட்டுமென தூக்கி எறிய
பாவம் எனக்கில்லை நெஞ்சுரம்
திடீரென்று கையை உதறிவிட்டுப் போக
உனக்கு இருந்திருக்கிறது அது…
எப்போதுமே சுரத்திடைதான் நிகழ்கிறது
முள்ளின் மீது நடந்து இரத்தம் சிந்துவாய்
சீக்கிரம் வீடு திரும்பிவிடு
என்னிலிருந்து தொடங்கும் உன் பாதையில்
பூக்களைதான் தூவிக்கொண்டிருக்கிறேன்…
றெக்கை முளக்காத இளங்குருவி
கூட்டிலிருந்து கீழே விழுந்தால்
வலியின் வலியும் யாருக்கென
உனக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லைதான்
தாயின் கதகதப்பு அற்றுவிட்டதே
குளிர் ஜீரம் வரவில்லையா உனக்கு
தெரு நாய்களிடம் பயமில்லையா உனக்கு…
நான் பேணி வளர்த்த அன்பில்
ஒரு நொடியில் கரியைப் பூசினாய்
ஆனாலும் நீ இல்லாத வீடு வீடில்லை
என் பேரன்பே நீ நீ வந்துவிடு…
நாற்கவிராசநம்பி விட்டுவிட்டார்
உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்
பதினொன்று கொன்றொழித்தலும் உண்டு…
- மகேஷ் பொன்