12 ஜூலை 2020

மெளனம் மட்டுமே மிச்சமிருக்கிறது

கண் பார்வையில்
போதையேற்றும்
மதுக் குவளை நீ...
மென் நகையில்
சிக்கவைக்கும்
குத்தீட்டி வலை நீ…
நான் தொட்டுப்பார்க்க
கூச்சப்படும்
சித்தினிச் சிலை நீ…
வெட்கத்தால்
ஆசையை அடக்கிவைத்த
ராங்கி  நீ…
செருக்கால்
தன்னையே கட்டிவைத்த
வலிதாங்கி நீ…
வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில்
ராஜாவுக்கு செக்கு வைத்த
ராணி நீ…
ஆறு வருடம் மெளனம் சாதித்ததில்
இருவருமே சாதனையாளர்கள்தான்

 

             - மகேஷ் பொன்


11 ஜூலை 2020

கலைந்து போன தாவணிக் கனவு

நீ மட்டும்தான் அழகியாய் இருந்தாய்
நண்பர்களிடம் சுவாரஸ்யம் மாறாமல்
வர்ணித்துக்கொண்டே இருப்பேன்
நீதான் நீயேதான் பேரழகி என்று
உன் காதோரம் பூனைமுடி இருந்தது
கலர்கலராய் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாய்
மல்லி மணக்க மணக்க கடந்து செல்வாய்
நீ பேசினால் மெட்டெடுத்து பாடுவது போலிருக்கும்
என்னைப் பார்த்தவுடன் அந்த கண்கள்
ஒரு பட்டாம்பூச்சியைப் போல் படப்படக்கும்
உன் வலக்கண்ணத்தின் வழவழப்புக்கு
ஒரே உவமை உன் இடக்கண்ணம்தான்
நீலப் பாவடையும் வெள்ளைச் சட்டையும்
தேவதையின் உடையென்றே எண்ணியிருந்தேன்
உன் பெயர் கிறுக்கப்படாத புத்தகங்கள்
ஒருபோதும் பாடத்திட்டமாக இருந்ததில்லை
சனி ஞாயிறு சிறப்புவகுப்புக்காக போராடுவேன்
என் கனவுலகில் நீயே வழிய வருவாய்
மனசுக்குள் இளையராஜா பாடிக்கொண்டே இருப்பார்
இன்றுதான் கடைசியாய் பார்க்கிறேன்
என்றறியாத பிரிவு உபச்சார நாளன்று
நீலம்- மஞ்சள் தாவணியில்
நீள் சடையில் மல்லிகைச் சூடி
மைப் பூசியக் கண்ணில்
மையல் தெறிக்க தெறிக்க
வெள்ளிக் கொலுசுகள் சினுங்க
பள்ளியை இந்திரலோகமாக்கி
நீ ரம்பை ஊர்வசி மேனகையாகி
அங்கும் இங்கும் உலவினாய்
பத்து முடித்து இருபது ஆண்டுகளாயிற்று
இன்னமும் அதே நீலம்- மஞ்சள் தாவணியில்
அப்படியேதான் என்னுள் உலவிக்கொண்டிருந்தாய்
ஏதேச்சையாக ஷாப்பிங் மால் வாசலில்
காளியம்மன் சாயலில் இருந்த
அந்த பெண்ணை பார்க்கும் வரை
 
- மகேஷ் பொன்

என் காதல் என் உரிமை

காதல் என்றவுடன்
நீதான் பூமரமாகி
என் மீது பொழிகிறாய்
நீதான் நறுமணமாகி
என் சுவாசம் நிறைக்கிறாய்
நீதான் வண்டாகி
என் கனிமனம் குடைகிறாய்
நீதான் பட்டாம்பூச்சிகளாகி
என்னை சுற்றிப் பறக்கிறாய்
நீதான் பூங்காவாகி
என்னில் அழகுற விரிகிறாய்
வான் என்றவுடன் முகிலும்
இரவு என்றவுடன் நிலவும்
பொங்கல் என்றவுடன் வடையும் கூட
ஞாபகத்தில் வரும்போது
உன்னை மட்டும் மறக்கச் சொல்கிறாயே
ஒன்று செய்
காதல் என்ற வார்த்தையை
உலக வழக்கிலிருந்து அழித்துவிட்டு வா
மறக்க மட்டுமல்ல
வெறுக்கவும் செய்கிறேன்
எண்ணெய் தீர்ந்தால் அணைந்துபோக
என் காதல் ஏற்றிவைத்த தீபம் அல்ல
உன்னை சுற்றியே பற்றி எரியும்
ஓர் அணையா சூரியன் அது
போடா டேய் உன் ஆற்றுதல் எல்லாம்
அதன் மீது ஊற்றும்
ஒரு வாளி தண்ணீர்தான்
 
- மகேஷ் பொன் 


பிரிதலும் அதன் நிமித்தமும்

நீ உடன்வராவிட்டால் வாழ்வேயில்லை
யென்றொரு காலம் இருந்தது
விட்டு வெகுதூரம் வந்துவிட்டேன்
ஆயினும் நான் இன்னமும் வாழவேயில்லை
பாலைவனப் பயணி ஒருவன்
நீர்க்குடுவையைத் தவறவிட்டுவிட்டு
எத்தனைத் தூரம் போய்விட முடியும்
சுற்றும் முற்றும் எங்கும் பசுமையேயில்லை
தொண்டை அடைத்துச் சொல்கிறேன்
உயிர் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது
ஒரு ஒட்டகத்திலோ ஹெலிகாப்டரிலோ
என் வாழ்விற்குள் வந்திறங்கி
என்னைக் கூட்டிப்போ என் பேரன்பே…
 
 - மகேஷ் பொன்

99வது முறை வாழ்வைத் தொடங்குதல்

என் திக்கற்ற அன்பை
பேருந்தேறி அலையவிடுகிறாய்
தொலைப்பேசாமல் பதறவிடுகிறாய்
என் வக்கற்ற கற்பை
கொஞ்சம் குலையவிடுகிறாய்
இதோ இதோவென கதறவிடுகிறாய்
நீ வழக்கம் போல் தொலைந்து
இம்முறை மாதங்கள் கடந்துவிடவே
நான் றெக்கை விரித்தப்போது
என் வானம் மேலும் விரிந்தது
வீட்டிலிருப்பது என் வாசம் மட்டும்தான்
வழிகள் நிறைய திறந்துகொண்டன
இதோ திரும்பிவிட்டாயே புதுப்பொலிவுடன்
ஆனாலும் எனது வழிகள் மட்டும்
அதே முட்டுச்சந்தில்தான் போய் முடிகின்றன
என்வாழ்வு உன் ஆடுகளமாய்ப் போனதால்
மீள மீள விளையாடுகிறாய்
ஒன்றாய் வாழ்வோமென்று கோல் போடுகிறாய்
இனி எங்கே வாழ்வது? ஒன்றாய் இருப்போம்!
 
- மகேஷ் பொன் 

ஒன் பை டூ தோழியே


ஒருகளித்து சாய்ந்துறங்கும்
ஒருதோளை உருவினான்
எந்த தோளில் சாய்ந்தால்
மனம் வெறுமைக் கொள்ளுமோ
அந்த தோளை உருவினான்
உன் காதலன் துரோகமிளைத்தால்
நான் மகிழ்ச்சிக்கொள்வேன்
 
- மகேஷ் பொன்


அவள் ஸ்கூட்டியின் பெயர் TN72BF5008


பிற்காலத்தில் பெயர் சொல்லும்படியாக
விரிவான கொள்கைநெறியுடன்
ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கலாம்…
முடியாமற் போனால்
ஓரிரு கவித்தொகுப்புகளைப் பிரசுரிக்கலாம்…
செத்தப்பிறகு கொல்லிப்போட,
கண்ணீர்விடக்கூட ஆளிருக்கும்…
பிறக்காமலிருக்க எனக்கொன்றுமில்லை.
என் மனைவி பங்கேற்கும் மணவீட்டில்
அதிகம் பேசும் உறவினர்களின் வாயடைக்க
ஒரு ஒட்டு பிளாஸ்த்திரி பிறக்க வேண்டும்…
அப்படியே அட்வைஸ்களின் நாவறுக்க
அவளுக்கொரு கூர்வாள் பிறக்க வேண்டும்…
அவள் நீலநிற ஸ்கூட்டியில் எழுத
ஒரு தமிழ்ப்பெயர் பிறக்க வேண்டும்…
என் அம்ம முகத்திலும்
அவ அப்பன் முகத்திலும்
ஒரு சொரிநாய் முத்திரம் பெய்யட்டும்
இப்போது அவர்களுக்கது தேவையாயிருக்கிறது 
 
- மகேஷ் பொன்



பரிதாபங்களில் ஒன்று



தளர்வு அளிக்கப்பட்டது;
தொழில் செய்யலாமென்று…
கட்டுப்பாடு இருக்கிறது;
முகக்கவசம் கையுறை தவிர்த்து
எல்லாம் கழைந்துவிட்டேன்
சமூக இடைவெளியுடன் புணர்…
 
- மகேஷ் பொன்

03 ஜூலை 2020

அலுவல்


நிறைவேற்றுவதற்கு
கொஞ்சம் நேர்மை போதும்…
எல்லாம் சரியாகதான் இருந்தது
அனுப்புநர்
பெறுநர்
பொருள்
வேண்டுதல்
நாள்
இடம்
இப்படிக்கு உறையூட்டுடன் – என…
கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
இப்படிக்கு உண்மையில்லையென்று!
 
- மகேஷ் பொன்



05 ஜூன் 2020

இன்றைய வானிலை


நீ
கதவைச் சாத்தியப்போது
மழை
பெரும் இடியுடன்
கொட்டித் தீர்த்தது... 

நீ
சன்னலைத் திறக்கிறாய்
காற்று
தாழ்வு மண்டலம் மறந்து
வீடு நோக்கி விரைகிறது... 

நீ
வெளியே வருகையில்
வெண்மல்லி
பன்னிரு நிறங்களில்
பூத்துக் குலுங்கும்... 


- மகேஷ் பொன்





மேலடவியிலிருந்து தனித்தொலிக்கும் குரல்


உன் கையில்தான் ரிமோட் இருக்கிறது
ஃபேவரைட் பட்டனை அழுத்தினாலும்
பிரசங்கம் மாறுவதில்லை
எதை நீ தின்ன வேண்டுமென
எதை நீ பேல வேண்டுமென
அது திரும்ப திரும்பச் சொல்ல
அதையே தின்று அதையே பேல்கிறாய்

ஓயெலெக்சில் டெல்டா டாய்லெட் ஆகிறது
ஆமேசானில் தண்ணீர் டப்பாவில் வருகிறது
இனி குண்டி கழுவாமல் பீ காய்வதற்கு
நீ மட்டுமே காரணமல்ல
நெட்வொர்க் ப்ராபளம்தான் காரணம்

அண்டர்வியர் முதல் ஆண்ட்ராய்டு முடிய
நீங்கள் பேசும் சுயச்சார்பில்
நிர்வாணம் மட்டுமே மிஞ்சுகிறது
ஆயினும்
என் நிலம் என்னிடம் இருக்கிறது
என் நதி என்னிடம் இருக்கிறது
என் காற்று என்னிடம் இருக்கிறது
என் வானம் என்னிடம் இருக்கிறது
அதுவும் அப்படியே இருக்கிறது
நான் காட்டுவாசியாய் இருப்பதனால்

இத்தேசத்து மக்களின் சோற்றில்
மண்ணை அள்ளிப் போட வேண்டாம்
மும்மாரி பொழியவும் விளையவும்
காடு வேண்டும் அதை விட்டுவிடுங்கள்
எனது கோவணத்தை உருவிவிட்டு
ஜாக்கி  ஜட்டியைத் தர  வேண்டாம்
நான் காட்டுவாசியாய் இருப்பதற்கு
காடு வேண்டும் அதை விட்டுவிடுங்கள்

ஜி! அந்த கோவணத்தை வேண்டுமானால்
நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்
நான் காட்டுவாசியாய் இருப்பதற்கு
காடு வேண்டும் அதை மட்டும் விட்டுவிடுங்கள்
 
- மகேஷ் பொன்


ஒரு கோப்பை தேநீர்


ஈரமேகம் தரை இறங்கி
சில்வர்ஓக் காடலையும்
மயிர் கூச்செரிய
உயிர்வளி தடுமாற
கொஞ்சம் சாரல்
கொஞ்சும் வாடை
வியாபித்து சில்லென்றுச் சொல்ல
ஸ்தம்பித்து நில்லென்றுக் கொல்லும்
மலையகத்து மாலைப் பொழுதில்
தீக்கணப்பில் சூடேற்றிய
இந்த ஒரு கோப்பை தேநீர்
இன்னும் லயிக்க செய்திருக்கும்
நமது நட்பை….
நடுங்கும் விரல்கள் அடங்க பிடித்து
அழகே நீ இதழ்க்கொண்டி இட்டதில்
காலம் கரைந்துப் போனது…
தேநீர் உறைந்துப் போனது…
இன்னொரு மாலைப் பொழுதில்
வேறொரு கோப்பை தேநீரில்
நமது நட்பை லயிக்க செய்வோம்
இத் துர்நிகழ்வை மறந்துவிடு!
 
- மகேஷ் பொன்



14 மே 2020

இப்போது நான் வெளியேற வேண்டும்

பாலுக்காக அழும்
குழந்தையின் பசிதான்
மிகக் கொடிய நோய்

ஊழிகாலத்தில்
ஊர் தொலைவிலிருப்பதுதான்
மிக வலிய ரணம்

வறுமையின் பிடியில்
இருத்தும் தனிமைதான்
மிகப் பெரிய சமூகவிலக்கல்

எங்கள் வீட்டிலிருப்பது
அட்சயப்பாத்திரம் அல்ல
வெறும் ஈயப்பாத்திரம்தான்
அது நேற்றிலிருந்து
ஈஈயென இளிக்கிறது
இப்போது நான் வெளியேற வேண்டும்

கார்பன்மோனாக்சைடை சுவாசிக்க முடிகிறது
ரசாயனத்தை குடிக்க முடிகிறது
பிளாஸ்டிக்கை திண்க முடிகிறது
கார்ப்ரேட் தொற்றை சமாளிக்க முடிகிறது
ஒரு வைரசுடன் வாழ முடியாதா
இப்போதே நான் வெளியேற வேண்டும்


- மகேஷ் பொன்




13 மே 2020

பூச்சாண்டி


தும்பிக்கையில் பழம் திணிப்பவர்கள்
பலசாலிகள் இல்லை
புத்திசாலிகளும் இல்லை
கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தாலும்
யானை ஒரு கொலை மிருகம்
ஓடிவிடும் இடைவெளியில் கடந்துவிடு

பூச்சாண்டி எப்படி இருப்பான்
யானை மாதிரியா
இல்லவே இல்லை
மனிதன் மாதிரியே இருப்பான்

காரி துப்புகிற
கரைவேட்டி தாத்தா
ஒரு பூச்சாண்டி…

லொக்குனு இருமிகிற
எதிர்வீட்டு சித்தி
ஒரு பூச்சாண்டி…

மார்க்கெட் போய்வரும்
நம்ம மாமா
ஒரு பூச்சாண்டி…

டீ போட்டுத்தரும்
அன்பான அக்கா
ஒரு பூச்சாண்டி…

அலுவலக இணையர் ஒரு பூச்சாண்டி…
டியுசன் டீச்சர் ஒரு பூச்சாண்டி…
நண்பன் ஒரு பூச்சாண்டி…
மானசிகி ஒரு பூச்சாண்டி….
அப்பா ஒரு பூச்சாண்டி….
பொண்டாட்டி ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டி குறித்த புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு
பீதி கிளப்பும் செய்தி வாசிப்பாளன்
ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளின் வருகையை ட்ரோன் கேமிராவில்
கண்காணிக்கும் போலிஸ்காரன்
ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டியால் பாதிக்கப்பட்ட நர்ஸ்க்கு
சிகிச்சையளிக்கும் மருத்துவன்
ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளை கிருமிநாசினி பீச்சி விரட்டும்
தூய்மைப் பணியாளன்
ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளிடமிருந்து தப்பிக்க
வீட்டிலேயே இருக்கச் சொல்லும்
முதலமைச்சர் ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளுக்கு எதிராக
கைத் தட்டி, விளக்கு பிடிக்கச் சொல்லும்
பிரதமர் ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளுக்கு பயப்படுபவரா நீங்கள்
பூச்சாண்டிகளுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்
நீங்களே ஒரு பூச்சாண்டியாக உருமாறி
பிறரை பயமுறுத்தும் காலம்
வெகு தொலைவில் இல்லை
அப்போது நீங்கள்
இன்னும் பல பூச்சாண்டிகளை உருவாக்கலாம்


- மகேஷ் பொன்

கம்பளிபூச்சி ஊறும் காலம்


எந்த இடம்
அங்கேதான் மேலே வலமாக
எவ்வளவு அழுத்தம்
பிராண்டாதே மெதுவாக
எத்தனை நேரம்
இன்னும் கொஞ்சம் சொரியலாம்
யார் வந்து சொரிந்தாலும்
நான் சொரிந்தது போலாகுமோ
நீ காதலோடுதான் சொரிகிறாய்
எனக்கு சொரியெடுக்கவில்லையே 
 
- மகேஷ் பொன்



20 ஏப்ரல் 2020

சாதாரணரின் அற்புதங்கள்


மது பிரியர்களுக்கு ஒன்றுமில்லை
மது வெறியர்களுக்கு இது போதாத காலம்
ஆனாலும் அற்புதங்கள் நிகழ்கின்றன
கானாவூர் கல்யாணத்தைப் போன்று...
புறக்கடையில் மது விற்பவனின்
தோற்றத்தை உற்றுப் பார்
அப்படியே இயேசுவின் சாயல் அவனுக்கு…
 
- மகேஷ் பொன்



சிவனோட புள்ளிங்கோ


எங்க காஸ்டீயுமுக்கு
டிசைனர் யாரும் இல்லிங்க
எங்க மாடலிங்கு
கலரிங்கு கம்பி மயிருங்க
அடாவடி அள்ளுவோம்
கானா பாடி கொல்லுவோம்
நைனாயே கலாய்க்க சொல்லுவோம்
பைக்குலதான் சுத்துவோம்
போலீஸ கண்டா கத்துவோம்
அடிதடினு வந்தாக்க மொத்துவோம்
நட்பு மட்டும் இல்லியினா
நாங்க எல்லாம் செத்ருவோம்

மூனு வக கம்பா பொண்ணுங்க
பால் சோறு ஒன்னுங்கோ
நெய் சோறு ரெண்டுங்கோ
மண் சோறு மூனுங்கோ
மூனு வக அழகு பொண்ணுங்க
முற்கால ரசன ஒன்னுங்கோ
தற்கால ரசன ரெண்டுங்கோ
பிற்கால ரசன மூனுங்கோ
மைனா வாட்சே உட்தா! அச்சா...
நயன் தேடி அலையிரவங்க
நாங்க இல்லிங்கோ

புள்ளிங்கோனா
தொல்லைங்கோனா சொல்ரிங்க
தம்மு கிசா இல்லனாலும்
நாங்க சிவனோட புள்ளிங்கோ

எங்க நெஞ்சத்துல
மஞ்சா கொஞ்சம் ஓவரு
இங்கேயே ஸ்டண்டு பண்ணி
காட்டட்டுமா பவரு

நாங்க செம்பு இல்லாதத் தங்கம்
புள்ளிங்கோ! சாதியில்லாத சங்கம்




19 ஏப்ரல் 2020

மேய்ப்பரை பலியிடும் ஆடுகள்


இரட்சிப்பின் மட்டன் பிரியானி
ஏழைகளுக்கு பரிமாரப்படுகிறது
இரத்தமும் சதையுமாய்
காரம் கொஞ்சம் தூக்கலாய்
தட்டில் அவரே இருக்கிறார்
கர்த்தர் நல்லவர் என்பதை
பந்தியில் வந்து ருசித்துப்பாருங்கள்….
பரிமாறுபவன் கொழுத்து வீங்குகிறான்
உண்பவன் முன்பினும் மெலிகிறான்
ஊழியக்காரனுக்கு;
கார், பங்களா
ஜெருசலேம் சுற்றுலா
வங்கி இருப்பு
சுகபோக வாழ்க்கை
எல்லாம் தந்தீர்
ஸ்தோத்திரம் ஆண்டவரே!
வக்கற்றவனுக்கு;
இருப்பதையும் சுரண்டிவிட்டு
வெறும் இரட்சிப்பு மட்டும்தானா!!
 
- மகேஷ் பொன்