12 செப்டம்பர் 2021

நீல நிலா

 

பொன்வானம் ஏழ்வண்ணம் கொள்ள

வெண்நிலா அல்நீலம் கொள்ள

நான் மோகனன் ஒளிக்கனல்  கொண்டேன்…

 

களவின் அந்நாணத்தை கொல்ல

நிலவின் எவ்விடத்தை வெல்ல

நீ மேனகை களியாடல் கொண்டாய்…

 

கால் தடம் பதிக்கும் எண்ணம் கொய்ய

கால் விலங்கு தடுக்கும் என்ன செய்ய

நாம் இந்திரலோகம் கொண்டோம்…

 

முன்பு வளர்வதும் பின்பு தேய்வதுமாய்

நான் சற்று இருள்கிறேன்…

நீதான் நிலா

ஆனாலும் முப்பது நாளும் ஒளிர்கிறாய்…

ஆதலால்

எங்கிருந்து சாபம் வரினும்

இங்கிருந்து தாபம் கொள்வோம்…

 

காதல் சரி என்பவர்கள்

ஆங்காங்கே நட்சத்திரங்களாய் மின்னுகிறார்கள்

காதல் தவறு என்பவர்கள்

இங்கே முண்டியடித்து வரிசையில் வருகிறார்கள்

கள்ளத்தோணியில் நிலவுக்கு பயணித்தல் குறித்து

நான் அவர்களுக்கு கதை சொல்ல

இல்லமின்றி  நிலவில் குடியேறுதல் குறித்து

நீ அவர்களுக்கு கவி சொல்ல

’கேரி சேப்மேன்’ புத்தகம் ஒன்றை மட்டும்

நாம் அவர்களுக்கு பரிசளிப்போம்…

 

- மகேஷ் பொன்




17 மே 2021

கிழித்தால் சரி

 

பேனாவை பரிசளித்துவிட்டு

நானே வெற்றுத்தாளாகிறேன்

ஒரு கடிதம்

ஒரு விண்ணப்பம்

ஒரு ஓவியம்

ஒரு கவிதை

இயேசுவின் இரத்தம் ஜெயம்

ஒன்றுமில்லை கிறுக்குகிறாய்…

 

- மகேஷ் பொன்



07 ஏப்ரல் 2021

காதல் மறுமொழிகள்

 

திட்டமிட்ட ஏற்பாடு அல்ல

காதல்

ஆதலால் திருமணத்திற்கு பின்

உங்கள் துணையைக்

காதலிக்க முடியாமல் போனால்

என்ன செய்வீர்கள்

 

காதல் என்பது கற்பனை

திருமணம் என்பது நிஜம்

கற்பனைக்கும் நிஜத்திற்குமான

முரண்பாடுகள்

தப்பமுடியாத தண்டனைதான்

 

இனப்பெருக்கத்திற்கு ஒத்துழைப்பவர்கள்

எல்லோரும் காதலர்களாக இருப்பார்களென

நம்புவது நல்லதொரு பொய்

 

செவ்விதழ்களையும்

முலைக்காம்புகளையும்

மட்டுமே ஆய்ந்துக்கொண்டிருப்பவனின்

காதல்

தொடை இடுக்கில் முடிந்துவிடுகிறது

 

கட்டுப்படுத்த முடியாத ஆசை

கிடைமட்டம் ஆனால்

உன் காதல்

கோபுரத்தில் இல்லை

 

காதல்

எதிர்பார்க்கப்படும் போது

சுகானுபவத்தையும்

நிராகரிக்கப்படும் போது

கூடுதலாய் வலிகளையும்

தரவல்லது

 

காதல் ஒரு நெருப்பு

உன்னையும் அது பற்றிக்கொண்டது

உன் இதயம் அதில்

குளிர்காயப் போகிறதா

உன் வாழ்வு அதில்

தீக்கறையாகப் போகிறதா

இப்போது அதை

உன்னால் தீர்மானிக்க முடியாது

 

காதல் ஒரு மாயவித்தை

நாம் வேண்டாமென்றாலும்

அது மீள மீள வந்து

நம்மை ஏமாற்றவே செய்யும்

 

காதல் வந்துவிட்டால்

எல்லாமே

உள்ளங்கையில் வந்துவிட்டதாக

எண்ணுகிறோம்

உண்மையில்

எல்லாமே

விரைவில் கைவிட்டு போய்விடும்

 

காதல் மிகவும் சுவாராஸ்யமானது

சேர்ந்து வாழாத வரை

 

காதலில் தோற்பது

பெரிய வலியில்லை

ஒருமுறை ஜெயித்து பார்

தோல்வியின் வலியே

பராவாயில்லை எனத் தோன்றும்

 

- மகேஷ் பொன்




 

04 ஏப்ரல் 2021

நீலம் பூத்தக் கைகள்

நமக்கு வாய்த்த

1008 துன்பங்களில் ஒன்று

அடர்நீல நிறச் சேலையில்

கண்ணத்தில் கை வைத்தப்படி

முதல் படியிலேயே

அமர்ந்துவிடுகிறது…

இரண்டுபடி ஏற்றிவிட்டால்

நான்குபடி சறுக்கும் அதற்கு

வெள்ளணியும் இல்லை

செவ்வணியும் இல்லை

இப்போது நாம் அதனுடன்

கைக் குலுக்கிக்கொள்ளலாம்

 

- மகேஷ் பொன்



வானவில்ரோஸ் பூக்கும் காலம்

நட்பு காதலாக உருமாறுவது குறித்து பேசினோம்;
காதல் எல்லோருக்குமானது
அதனால்தான் ராக்கி என்ற நாய்
அக்காமகள் மடியில் தூங்குகிறது என்றேன்…
காதல் பால் பார்ப்பதில்லை
அதனால்தான் ஐசும் சோபியும்
உதட்டோடு உதடு முத்தமிடுகிறார்கள் என்றேன்…
காதல் வயதுடன் தொடர்புடையதல்ல
அதனால்தான் அதனால்தான்
பதினெட்டு ஆண்டுகளை அழித்துவிட்டேன் என்றாள்…
இப்போது எனக்கு நினைவுத் தப்புகிறது
மங்கலாக நெருங்கி வருகிறாள்…
பசலையில்லா முத்தம் இனிக்கும் என்பது
சுவை நாளங்களுக்கு உரைத்ததும்
மொத்த காதலும் வந்து
என் சுவரில் வண்ணம் பூசி
ஒரு வண்ணத்துப்பூச்சியை வரைகிறது
இந்த நெடுங்கால நட்பில்
ஒரு வானவில்ரோஸ் பூக்கும் காலம் இது…
செடியில் பூவொன்று அரும்பியதும்
ஓவியத்திலிருந்து வண்ணத்துப்பூச்சி வெளியேறிற்று…
காதல் ஒரு தற்செயல் நிகழ்வு
அது திடீரென நிலைகொள்ளுமென
நாங்கள் வெள்ளையடிக்கிறோம்
அது வண்ணங்களில் இலைகள் கொண்ட
மரத்தின் பூச்சொரிவைப் போல்
எங்களை வண்ணமயம் கொள்கிறது….
எனக்கு ஞாபகம் திரும்புகையில்;
ஊர் இன்னும் அழகாக இருந்தது
ஒரு மனைவியும்
இரு குழந்தைகளும்
ஒரு நண்பனும் இருந்தார்கள்
எனது அலுவலக இருக்கை
அப்படியேதான் இருந்தது
எல்லாம் இருந்துவிட்டு போகட்டும்
இனி நான் சுயநினைவுடன் காதலிக்கிறேன்…
 
- மகேஷ் பொன் 



28 மார்ச் 2021

அன்பின் சுவை


பேசிக்கொண்டே வருகிறோம்

கல்லூரி நிறுத்தம் வந்துவிட

சகப் பயணிகள் பார்க்க

உடன் பயில்வோர் வெறிக்க

மிகையன்பு மட்டும்

என் கீழ்உதட்டை கடித்து இழுக்கிறது

அக்கா சாயலில் நான் இருக்க

என் சாயலில் அவள் இருக்க

இந்த ஒரே ஒரு முத்தத்தில்

அன்பின் சுவை ஆயிரம் இருக்கிறது

முத்தம் காமத்தில் சேராது என்றுணர

அவளுக்கு அடுத்தநிறுத்தம்

எனக்கோ முப்பத்தாறு ஆண்டுகள்

 

- மகேஷ் பொன்



10 மார்ச் 2021

ஒப்பந்தத்திற்கு முன் படிக்கப்பட்டவை


நான் ஒரு முதுநிலை பட்டதாரி
தேசியக் கபாடி வீராங்கனை
உடற்கல்வி ஆசிரியர் ஆவேன்
இந்தியச் சிவப்பு
நல்ல உயரம்
மருளும் கண்கள்
நீண்ட கூந்தல்
கள்ளூரும் உதடு
மென்னகை ததும்பும் முகம்
திரும்பி பார்க்கும் அழகு
ஐம்பது சவரன் தேறும்
தங்கை நயன்தாரா சாயலில் இருப்பாள்
உன்னைப் போலவே எனக்கும்
பார்த்ததும் பிடித்துவிட்டது…
உனது கடந்தகாலம் பற்றி
ஒருபோதும் கேட்கப்போவதில்லை
நீயாக சொல்வாய் எனில்
என்னிடம் எதிர்வினைகளுமில்லை
இருந்தாலும் நீ நோண்டுவாய்;
பதினாறு நிமிடங்கள்
பிரக்ஞையற்று இருந்திருக்கிறேன்…
நாற்பத்து இரண்டு நாட்கள்
விடாமல் காதலித்திருக்கிறேன்…
இரண்டு மாதங்கள்
கற்பத்தை கலைத்திருக்கிறேன்…
மணமான ஒருவன் நல்லானாய் இருக்கிறான்...
இப்போது
பீரேறிய அலமாரியைச் சுத்தம் செய்யவேண்டும்
கைப்பேசியை மறுபதிப்புச் செய்ய வேண்டும்
எனதொரே நல்லாளுக்கு புரியவைக்க வேண்டும்
காபி சங்கிலியிலிருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும்
அம்மாவிடம் சொல்லப்பட்ட பொய்கள் குறித்து
அம்மாவுக்கே தெரியாது; அதை விட்டுவிடலாம்.
அவர் அவர் வாழ்க்கையை
அவர் அவர் வாழ்ந்துகொள்ளலாம்
நீ என்ன சொல்கிறாய் ?
 
- திவ்யா ஈசன் 



என் நிலம்! என் உரிமை!!


வரப்பில் வாங்கும் விலைக்கும்
சந்தையில் விற்கும் விலைக்கும்
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்
மகசூல் பெரிதாய் சுரண்டப்படுகிறது
ஆனாலும்
நிலத்தின் மீதான உரிமை இருக்கிறது…
இந்த பத்துக்காட்டிற்குள்
வெள்ளம் வந்தது
வறட்சி வந்தது
புயல் வந்தது
கொல்லை நோய் வந்தது
வெட்டுக்கிளிகள் வந்தன
நெகிழிகள் வந்தன
குப்பிகள் வந்தன
பெருச்சாலிகள் வந்தன
ஆனாலும்
விளைச்சலைக் கணக்குப் பார்க்கையில்
”அடுத்தப் பூவில் பார்த்துக்கொள்ளலாம்” என்ற
நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கிறது…
டிராக்டர்களைத் தந்தீர்
கலப்பைகளைக் காணவில்லை
கால்நடைகளைக் காணவில்லை
டை அமோனியம் பாஸ்பேட் தந்தீர்
தொழுவங்களைக் காணவில்லை
புழுக்களைக் காணவில்லை
கிளைபோசட் தந்தீர்
தழைகளைக் காணவில்லை
நுண்ணுயிர்களைக் காணவில்லை
காப்பர் டை அசிட்டோ ஆர்சினைட் தந்தீர்
நீர்ப்பாம்புகளைக் காணவில்லை
ஊமச்சிகளைக் காணவில்லை
குறுங்கால ஹைப்ரேட் தந்தீர்
நெடுங்கால வித்துகளைக் காணவில்லை
சரிவிகித சத்துகளைக் காணவில்லை
ஸ்மார்ட் சிட்டிகள் தந்தீர்
பாசனக் குளங்களைக் காணவில்லை
மழை கால்வாய்களைக் காணவில்லை
ஆனாலும்
எங்களிடம் விவசாயம் இருக்கிறது…
அந்த உரிமைப்ப்பட்ட நிலத்தின் மீது
இப்போது குழி வெட்டுகிறீர்கள்…
அந்த மிச்சமிருக்கும் நம்பிக்கையின் மீது
இப்போது ஆணி அடிக்கிறீர்கள்…
ஆனாலும்
எங்களிடம் விவசாயத்தை இருத்துவோம்
இரக்கமற்ற உங்களுக்கும்
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும்
மூன்று வேளை உணவளிக்கும் பொருட்டு….

- மகேஷ் பொன்


மெகா ரப்பர்


முதல் நாயகியின் தங்கை நீ
பால்யம் மாறாமல் இருந்தாய்
அன்புள்ள மாமாவுக்கு
மருமகளாக இருந்தாய்
உரிமைகள் வகுத்துக்கொண்டு
நல்ல மகளாக இருந்தாய்
ங்க’வை தொலைத்தப்பின்
தோழியாக இருந்தாய்
ச்சி.. ப! ச்சி.. ப! என்ற போது
என் ஒரே செல்லமாக இருந்தாய்
அந்த மகாலெட்சுமி ஒடிப்போகையில்
நீ மட்டும் மிச்சம் இருந்தாய்
உன்னை காதலிக்க முடியாது
ஆனாலும் என் அத்தனை காதலையும்
நீயே எடுத்துக்கொண்டாய்
உன் புறலட்சணம்
என் மூன்றாவது தங்கையுடையது
உன் அகலட்சணம்
என் அருவ அன்னையுடையது
உன்னை தோளில் தூக்கி சுமந்திருக்கிறேன்
நானும் சிறுவனாகி விளையாடியிருக்கிறேன்
தவறுகளைத் திருத்தியிருக்கிறேன்
குற்றங்களைக் கண்டித்திருக்கிறேன்
உன் ருதுகாலத்தை கையாண்டிருக்கிறேன்
நீச்சல் பழக்கியிருக்கிறேன்
சைக்கிள் பழக்கியிருக்கிறேன்
பயணம் பழக்கியிருக்கிறேன்
புத்தகம் பழக்கியிருக்கிறேன்
நீ கைப்பிடித்து நடக்க வேண்டியதில்லை
உன்னை பறக்காட்டியிருக்கிறேன்
இப்போதும் இச்சையின்றி முத்தமிடுகிறாய்
எப்போது வளர்ந்தாயென அறியேன்
சுயம் கொண்டாய்
தனியே நடக்கிறாய்
அரசியல் பேசுகிறாய்
இலக்கியம் ரசிக்கிறாய்
கவிதை எழுதுகிறாய்
தீர்க்கமாக முடிவெடுக்கிறாய்
குடும்பத்தின் ஒரு தூண் ஆகிவிட்டாய்
உனக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறேன்
இப்போது
சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கிறாய்
மது நெடியைக் கடிந்துகொள்கிறாய்
அக்காவுக்கு துரோகமிளைத்தேன் என்கிறாய்
அன்பை கூட்டித்தரச் சொல்கிறாய்
அலுவலகத்திற்கு விடுப்பெழுத வைக்கிறாய்
எனது பதினெட்டு வருடங்களை அழித்துவிடும்
ஒரு மெகா ரப்பரை இழுத்து வருகிறாய்
மேலும்
இன்றைய உனது ஸ்பரிசத்தில் விரகமேறியிருக்கிறது...
நீ
என்னைக் கட்டிக்கொள்ளும்
ஆசையைத் தெரிவிக்கையில்
ஒரு மனைவியும்
இரு குழந்தைகளும்
என்னை கட்டிவைத்து
அடித்துக்கொண்டிருகிறார்கள்....
 
- மகேஷ் பொன் 



14 ஜனவரி 2021

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!


வெடிப்புகள் விழுந்த போது
மழைக்கு ஈரம் தப்பியதால்
புழுதிதான் பறந்தது…
கதிர்கள் கவிழ்ந்த போது
மழைக்கு பருவம் தப்பியதால்
வெள்ளாமை மிதக்கிறது…
இன்றைய மழை லயிக்கவில்லை
ஆயினும் சம்சாரி நான்
விற்றால் நூறு
வாங்கினால் ஆயிரம்
இந்த கணக்கில் நோக்கினால்
மழை பெரிதாயொன்றும் பாதிக்கவில்லை
அடுத்தப் பூவுக்கு ஆதாயம்தான்!
 
- மகேஷ் பொன் 



உடன்போக்கு ஒன்பது; வீடுதிரும்புதல்


காதலிகளுக்கு
மதுவை கூடுதலாய் குடித்தவன்
தங்கைகளுக்கு
நலம் வாழ்கவென வாழ்த்தியவன்
மருமகளுக்கு
நல்ல மாமாவாக மாறியவன்
மனைவி ஓடிப்போகையில்
துன்பம் தொலைந்ததென விட்டுவிடுகிறார்கள்
மகள் வரிசை வந்தபோது
அவசரமாக பேருந்தில் ஏறும்
அந்த கருப்பு சுடிதார் போட்டவள்
அவளென்றே மூளை மங்குகிறது
பதட்டம் பற்றிக்கொள்கிறது
இதயத்தின் படபடப்பு வெளியில் கேட்கிறது
மூன்றாம் நாள் பசி மறந்தேவிட்டது
தேடலில் தொண்டைக் கவ்வுகிறது
யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை
தூக்கம் தொலைந்து போனது
கண்ணீர் காலியான பின்னும் அழுகை வருகிறது
ஆனாலும் முன்னவர்களுக்கு வந்தது போல்
உன் மீது கோபமே வரவில்லை…
சட்டென்று போகட்டுமென தூக்கி எறிய
பாவம் எனக்கில்லை நெஞ்சுரம்
திடீரென்று கையை உதறிவிட்டுப் போக
உனக்கு இருந்திருக்கிறது அது…
உடன்போக்கு
எப்போதுமே சுரத்திடைதான் நிகழ்கிறது
நீ நீ
முள்ளின் மீது நடந்து இரத்தம் சிந்துவாய்
சீக்கிரம் வீடு திரும்பிவிடு
என்னிலிருந்து தொடங்கும் உன் பாதையில்
இன்னமும்
பூக்களைதான் தூவிக்கொண்டிருக்கிறேன்…
றெக்கை முளக்காத இளங்குருவி
பறக்க முயன்று
கூட்டிலிருந்து கீழே விழுந்தால்
அங்கலாயித்து பறப்பதும்
அரற்றி விம்முவதும்
வலியின் வலியும் யாருக்கென
உனக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லைதான்
தாயின் கதகதப்பு அற்றுவிட்டதே
குளிர் ஜீரம் வரவில்லையா உனக்கு
இதோ நேரம் இருட்டிவிட்டதே
தெரு நாய்களிடம் பயமில்லையா உனக்கு…
இத்தனை நாள் இத்தனை நாள்
நான் பேணி வளர்த்த அன்பில்
எங்ஙனம் எங்ஙனம்
ஒரு நொடியில் கரியைப் பூசினாய்
ஆனாலும் நீ இல்லாத வீடு வீடில்லை
என் பேரன்பே நீ நீ வந்துவிடு…
நாற்கவிராசநம்பி விட்டுவிட்டார்
உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்
ஒன்பது வீடுதிரும்புதல்!
பத்து இழுத்துவருதல்!!
பதினொன்று கொன்றொழித்தலும் உண்டு…
 
- மகேஷ் பொன்