10 மார்ச் 2021

ஒப்பந்தத்திற்கு முன் படிக்கப்பட்டவை


நான் ஒரு முதுநிலை பட்டதாரி
தேசியக் கபாடி வீராங்கனை
உடற்கல்வி ஆசிரியர் ஆவேன்
இந்தியச் சிவப்பு
நல்ல உயரம்
மருளும் கண்கள்
நீண்ட கூந்தல்
கள்ளூரும் உதடு
மென்னகை ததும்பும் முகம்
திரும்பி பார்க்கும் அழகு
ஐம்பது சவரன் தேறும்
தங்கை நயன்தாரா சாயலில் இருப்பாள்
உன்னைப் போலவே எனக்கும்
பார்த்ததும் பிடித்துவிட்டது…
உனது கடந்தகாலம் பற்றி
ஒருபோதும் கேட்கப்போவதில்லை
நீயாக சொல்வாய் எனில்
என்னிடம் எதிர்வினைகளுமில்லை
இருந்தாலும் நீ நோண்டுவாய்;
பதினாறு நிமிடங்கள்
பிரக்ஞையற்று இருந்திருக்கிறேன்…
நாற்பத்து இரண்டு நாட்கள்
விடாமல் காதலித்திருக்கிறேன்…
இரண்டு மாதங்கள்
கற்பத்தை கலைத்திருக்கிறேன்…
மணமான ஒருவன் நல்லானாய் இருக்கிறான்...
இப்போது
பீரேறிய அலமாரியைச் சுத்தம் செய்யவேண்டும்
கைப்பேசியை மறுபதிப்புச் செய்ய வேண்டும்
எனதொரே நல்லாளுக்கு புரியவைக்க வேண்டும்
காபி சங்கிலியிலிருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும்
அம்மாவிடம் சொல்லப்பட்ட பொய்கள் குறித்து
அம்மாவுக்கே தெரியாது; அதை விட்டுவிடலாம்.
அவர் அவர் வாழ்க்கையை
அவர் அவர் வாழ்ந்துகொள்ளலாம்
நீ என்ன சொல்கிறாய் ?
 
- திவ்யா ஈசன் 



கருத்துகள் இல்லை: