10 மார்ச் 2021

என் நிலம்! என் உரிமை!!


வரப்பில் வாங்கும் விலைக்கும்
சந்தையில் விற்கும் விலைக்கும்
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்
மகசூல் பெரிதாய் சுரண்டப்படுகிறது
ஆனாலும்
நிலத்தின் மீதான உரிமை இருக்கிறது…
இந்த பத்துக்காட்டிற்குள்
வெள்ளம் வந்தது
வறட்சி வந்தது
புயல் வந்தது
கொல்லை நோய் வந்தது
வெட்டுக்கிளிகள் வந்தன
நெகிழிகள் வந்தன
குப்பிகள் வந்தன
பெருச்சாலிகள் வந்தன
ஆனாலும்
விளைச்சலைக் கணக்குப் பார்க்கையில்
”அடுத்தப் பூவில் பார்த்துக்கொள்ளலாம்” என்ற
நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கிறது…
டிராக்டர்களைத் தந்தீர்
கலப்பைகளைக் காணவில்லை
கால்நடைகளைக் காணவில்லை
டை அமோனியம் பாஸ்பேட் தந்தீர்
தொழுவங்களைக் காணவில்லை
புழுக்களைக் காணவில்லை
கிளைபோசட் தந்தீர்
தழைகளைக் காணவில்லை
நுண்ணுயிர்களைக் காணவில்லை
காப்பர் டை அசிட்டோ ஆர்சினைட் தந்தீர்
நீர்ப்பாம்புகளைக் காணவில்லை
ஊமச்சிகளைக் காணவில்லை
குறுங்கால ஹைப்ரேட் தந்தீர்
நெடுங்கால வித்துகளைக் காணவில்லை
சரிவிகித சத்துகளைக் காணவில்லை
ஸ்மார்ட் சிட்டிகள் தந்தீர்
பாசனக் குளங்களைக் காணவில்லை
மழை கால்வாய்களைக் காணவில்லை
ஆனாலும்
எங்களிடம் விவசாயம் இருக்கிறது…
அந்த உரிமைப்ப்பட்ட நிலத்தின் மீது
இப்போது குழி வெட்டுகிறீர்கள்…
அந்த மிச்சமிருக்கும் நம்பிக்கையின் மீது
இப்போது ஆணி அடிக்கிறீர்கள்…
ஆனாலும்
எங்களிடம் விவசாயத்தை இருத்துவோம்
இரக்கமற்ற உங்களுக்கும்
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும்
மூன்று வேளை உணவளிக்கும் பொருட்டு….

- மகேஷ் பொன்


கருத்துகள் இல்லை: