நட்பு காதலாக உருமாறுவது குறித்து பேசினோம்;
காதல் எல்லோருக்குமானது
அதனால்தான் ராக்கி என்ற நாய்
அக்காமகள் மடியில் தூங்குகிறது என்றேன்…
காதல் பால் பார்ப்பதில்லை
அதனால்தான் ஐசும் சோபியும்
உதட்டோடு உதடு முத்தமிடுகிறார்கள் என்றேன்…
காதல் வயதுடன் தொடர்புடையதல்ல
அதனால்தான் அதனால்தான்
பதினெட்டு ஆண்டுகளை அழித்துவிட்டேன் என்றாள்…
இப்போது எனக்கு நினைவுத் தப்புகிறது
மங்கலாக நெருங்கி வருகிறாள்…
பசலையில்லா முத்தம் இனிக்கும் என்பது
சுவை நாளங்களுக்கு உரைத்ததும்
மொத்த காதலும் வந்து
என் சுவரில் வண்ணம் பூசி
ஒரு வண்ணத்துப்பூச்சியை வரைகிறது
இந்த நெடுங்கால நட்பில்
ஒரு வானவில்ரோஸ் பூக்கும் காலம் இது…
செடியில் பூவொன்று அரும்பியதும்
ஓவியத்திலிருந்து வண்ணத்துப்பூச்சி வெளியேறிற்று…
காதல் ஒரு தற்செயல் நிகழ்வு
அது திடீரென நிலைகொள்ளுமென
நாங்கள் வெள்ளையடிக்கிறோம்
அது வண்ணங்களில் இலைகள் கொண்ட
மரத்தின் பூச்சொரிவைப் போல்
எங்களை வண்ணமயம் கொள்கிறது….
எனக்கு ஞாபகம் திரும்புகையில்;
ஊர் இன்னும் அழகாக இருந்தது
ஒரு மனைவியும்
இரு குழந்தைகளும்
ஒரு நண்பனும் இருந்தார்கள்
எனது அலுவலக இருக்கை
அப்படியேதான் இருந்தது
எல்லாம் இருந்துவிட்டு போகட்டும்
இனி நான் சுயநினைவுடன் காதலிக்கிறேன்…
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக