இயல்பாகவே என்னிடம்
ஓவியம் வரையும் பழக்கம் உண்டு
பேப்பரும் பேனாவும் கிடைத்தால்கூட
கைகள் தானாகவே
வரையத் தொடங்கிவிடும்.
வளைந்து செல்லும் நதி
கரையில் கட்டப்பட்ட படகு
தென்னை மரம்
கொஞ்சம் வானம்
நிறைய பறவை
கனி மரம்
ஒற்றை ரோஜா
நிலாவும் நட்சத்திரங்களும்
தூண்டிலிட்டு மீன் பிடிக்கும் சிறுவன்
என்று அதன் பட்டியல் நீளமானது
ஆனால்
பற்பலமுறை
அன்னிச்சையாய் வரைந்தது
இரண்டு பசுமை படர்ந்த மலைகளும்
ஒரு ஓடு வேயந்த வீடும்தான்.
அந்த வீடு பார்ப்பதற்கு
என் வீடு போலவே இருக்கும்.
நேற்றும் அன்னிச்சையாய்
இரண்டு மலைகளை வரைந்தேன்
முன்பு எப்போதும் இல்லாதபடிக்கு
வளைந்து வளைந்து மலையேறும்
ஒரு சாலையை வரைந்தேன்
மலை அடிவாரத்தில்
ஒரு சோதனைச்சாவடியை வரைந்தேன்
அதன் இரும்புத் தடைக் கம்பிகளில்
மஞ்சள் மற்றும் பச்சை வண்ணத்தை
மாறி மாறி தீட்டினேன்
மற்ற எல்லாம் கருப்பு வெள்ளைதான்.
அதன் நுழைவாயிலில் ஒரு பெண்
யாரிடமோ மன்றாடிக்கொண்டிருந்தாள்.
அந்த பெண் பார்ப்பதற்கு
என்னைப் போலவே இருந்தாள்.
என் மலையூர்
எனக்கு ரொம்ப அந்நியமாகிவிட்டது
என் வீடு
எனது பழைய ஓவியங்களிலிருந்து
ஒருபோதும் மீள முடியாமல்
மெல்ல மெல்ல வண்ணம் இழந்து
பாழடைந்துகொண்டிருக்கிறது.
- செ.நிவிதா






