08 நவம்பர் 2024

கால இரயிலின் குதிரைத்திறன்

இந்த வழித்தடத்தில் ஓடும்
அத்தனை இரயில்களுக்கும் தெரியும்
எங்கள் காதல் கதை

இரயில் பயணத்தில்தான்
ஒருவருக்கு ஒருவர்
காதலைப் பரிமாறிக்கொண்டோம்

இரயில் தண்டவாளத்தில்தான்
கைகள் கோர்த்தப்படி
காதலை நடைப்பழக்கிக்கொண்டோம்

இரயில் நிலையத்திற்கும்
எங்கள் இருப்பிடத்திற்கும்
ஒரே மூச்சில் ஓடிவரும் தூரம்தான்

இரயிலில்தான்
கல்லூரிக்குப் போனோம்
இரயிலில்தான்
வேலைக்குப் போனோம்

இரயிலடி இருக்கையில் அமர்ந்துதான்
இளையராஜா பாடல் கேட்போம்

இரயிலின் வாசல் கம்பிகளில்தான்
முதல் பரிசத்தைத் தொடங்கினோம்

எங்கள் நட்பை
ஓவியமாக வரைய நேரிட்டால்
பின்புலத்தில்
நிச்சயமாக ஓர் இரயில் இருக்கும்

இருவரும்
தற்கொலை முடிவுக்கு வருகையில்
இரயில் முன் பாய்வதாகதான் இருந்தது

நீளும் இரயில் பயணத்தில்
அவள் முன்பதிவு வகையறா
நான் இல்லைமுன்பதிவு வகையறா

எனக்கு முன்பே தெரியும்
ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள்
இந்த இரயிலைத்
தலைகீழாய் கட்டித் தொங்கவிடுவார்களென

பிறகு
அவள் அப்பனின் கெளரவம்
இரயில் முன் பாய்ந்துவிடக் கூடாதென
ஓர் இராணுவ வீரனுக்கு வாக்கப்பட்டு
அவனுடன் பெருஞ்சுமையுடன்
இரயில் ஏறிப் போனதை
தூரமாய் நின்றுப் பார்த்தேன்

அன்றைய இரயில் எல்லாமே
என் நெஞ்சில் ஏறி
தடதடத்துப் போனது
கடந்த ஆறுமாதமாக
விதவிதமான இரயில்கள்
என் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தன

ஒரு இரயில் இன்ஜின்
12000 குதிரைத்திறன் கொண்டது
காலம்
அதனினும் அதித திறன் கொண்டது
அதனால்தான்
இன்றைய இரயில் எல்லாமே
வழக்கம் போல்
இருப்புபாதையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

 - மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை: