26 மே 2023

42 கிலோ தங்கம் இருக்கும் வீட்டின் சித்திரம்

இது ஒரு மலை வீடு
இங்குதான்
என் தாத்தாவுக்கு தாத்தாவும்
அவர்கள் காதலியரும்
காடோடியாய் வாழ்ந்துள்ளார்கள்
அப்பாவும் அம்மாவும்
அநர்த்தம் இன்றி வாழ்கிறார்கள்
இந்த ஆவக்கீற்று கூரையின் கிழ்
நானும்தான் வாழ்கிறேன்
 
இது இயற்கையின் மடியில்
நவினமும் நாகரிகமும் புசிக்காத ஊர்
கொன்றை பூச்சொரியும் வழிகளையுடையது
சாரல் தூரும் மேகங்களையுடையது
மரங்கள் போர்த்திய பசுமையையுடையது
நாற்புறமும் அருவிப் புறங்களையுடையது
கொல்லையில் மரச்சீனி விளைகிறது
வீடண்டி முக்கனியும் கனியும்
மிளகுக் கொடி மயிலையில் ஏறும்
கிடா நார்த்தை ஓடைக்குள் உருளும்
கமுகு எப்பொதும் பேயாட்டம் கொள்ளும்
 
கொணர்ந்த தேன் திணைப்புன பரண் புகும்
புன்னையின் நிழலில் அரவம் கூடும்
கடப்பு அணையா தேதண்ணீர் உகும்
இவ்வீட்டிற்கு
காட்டுயிரிகள் வந்து போகும்
கரடி வருக்கை மணந்தால் வரும்
நெடுவாலி வளர்ந்து இன்றுதான் வெளியேறியது
கடுவன் மந்தியைத் தேடி இவ்வழி மருகும்
காட்டெருமையும் மிளாவும் எதிர்முகட்டில் மேயும்
மயிலின் அகவலுக்கு இருவாட்சி குரல் கொடுக்கும்
களிறு பிளிற அதிரும் இவ்வீடு
அனிலாடும் முன்றில் கொண்டது
மானுலவும் முன்றிலும் கூட
 
இவ்வீட்டில்
சண்டமாருதம் தவழும் சாளரம் இல்லை
ஆளுயர நிலைக்கண்ணாடி இல்லை
புத்தகம் அடுக்க அலமாரி இல்லை
இரவு கவிபயில மின்சாரம் இல்லை
ஆடம்பரத்தை அடுக்க பிரோ இல்லை
எல்லாநாளும் அரிசி சோறும் இல்லை
ஆனாலும் இவ்வீடு
செல்வ செழிப்போடு இருக்கிறது
 
அண்ணனுக்கு பட்டப் பெயர் சிங்கம்
எனக்குச் செல்லப் பெயர் தங்கம்
மாமன் என்னை ”தங்கம்” என விளித்த ஒருநாள்
நான் புடம் போட்ட தங்கமாகவே மாறிவிட்டேன்
அன்றிலிருந்து இவ்வீட்டில்
42 கிலோ தங்கம் இருக்கிறது
 
- திவ்யா ஈசன்

 

கருத்துகள் இல்லை: