29 ஏப்ரல் 2023

குறியிட்டத் தேன்

நெடுவரையை பார்த்தாயிற்று
கூடுபாறையை பார்த்தாயிற்று
பாலையை பார்த்தாயிற்று
கல்லாலை பார்த்தாயிற்று
நேற்றும்
பெருந்தேன் வாய்க்கவில்லை….
 
படப்பங்காட்டில்
தீக்கரைப்பட்டிருக்கிறது
மண் புடையில்
கரடி கைவரிசை காட்டியிருக்கிறது
மரப் புடையில்
யாரோ குறியிட்டு வைத்திருக்கிறார்கள்
இன்று
செறுதேன் கூட வாய்க்கவில்லை….
 
அடவிக்குள் ஏறி
நாளையோடு
பன்னிரெண்டு நாட்கள் ஆகிறது
என் கூட்டுகாரன்கள்
மிகுந்த களைப்பாய் இருக்கிறார்கள்
கொணர்ந்த பக்கறையில்
ஏதும் மிச்சமில்லை....
 
இப்பவோ எப்பவோ என
வெறித்துக்கொண்டிருக்கிறது மழை....
 
குறியிட்டத் தேன்
இனிக்காது இல்லையா?
வெறுங்கையோடு வீடு திரும்பிவிட்டோம்....
 
- திவ்யா ஈசன்
 

 

கருத்துகள் இல்லை: