31 டிசம்பர் 2019

அன்பெனும் சிலுவை



தாய் வழி வந்த அது
தந்தை வழி வளர்ந்த அது
கடமை கருதி பெற்றோரையும்
உரிமை கருதி பிள்ளைகளையும்
எதிர்பார்ப்புகளில்தான் வாழவைக்கிறது
மற்றப்படி அது நீள்வட்டம்தான்
நிறம்தான் வேறு வேறு

முட்டையை சோற்றில் மறைக்கும் அது
மீந்த உணவைதான் ஊட்டிவிடுகிறது

நல்லிரவில் செல்லொலியில்
கனவை கலைத்து
பல்சர் சாவியை வாங்கிச்செல்லும் அது
கோணிய ஹேண்ட்பர் குறித்தும்
மாஸ்க் சீராய்ப்பு  குறித்தும்
சொல்லாமல் கொள்ளாமல் விட்டுப்போகிறது

நான் வேண்டாம் என்றாலும் அது
பக்காடி லெமனை பரிந்துரை செய்கிறது

மாதக்கடைசி சிற்றிதழிலின்
தத்துவவாதி நேர்காணல் பதிவில்
கவியின் புள்ளியை நழுவவிட்டுவிட்டு
அது டேட்டா ரீசார்ச் செய்துக்கொள்கிறது

மீளக்கொடுத்தால் தேவலைதான்
ஆனால் அது வாங்கியதெல்லாமே
வராக்கடனென ஆகிவிடுகிறது

கூடுவிட்டு கூடுபாயும் சித்தம் அறிந்த அது
ஒரே இடத்தில் எப்படி இருக்கும்
கொடு மற்றும் எடு கொள்கைதான்
அதன் இடுகாடு வரை

நாள் கணக்கில் அடவியில் அலைபவன்
பெரும் பயண விரும்பி
ஆனாலும் மாலை வருவதற்குள் அது
வீட்டிற்கு இழுத்து வருகிறது

தன் இலையில் மட்டும்
ஜிலேபியே இல்லையென
மனவீட்டில் வெளிநடப்பு செய்தது
அதே நேர்த்திதான்

ரோஸ்நிற நம்பிக்கையில் கட்டம் போட்ட
அந்தச் சட்டையை
முந்தி போட்டுச்செல்லும் அது
கமுக்கட்டை கிழித்து திருப்பித்தருகிறது

அது ஒரு பறவை
இது எத்தனையாவது மரமோ
இது எத்தனையாவது கூடோ

அந்த பள்ளியை ஒட்டிய டீக்கடைக்கு
அது தினமும் வந்தது
ஒரு சமோசாவை சாப்பிடும் வரை

மனைவிக்கு கிள்ளி கொடுக்கும் அதுதான்
காதலிகளுக்கு அள்ளிக்கொடுக்கிறது

பெட்டிக்கடையில் கடன் இல்லை
ஆனாலும் அது இஎம்ஐ கட்டவைக்கிறது

ஜட்டி கிழிந்தாலும்
புது ஜட்டி வாங்கினாலும்
அது பார்ட்டிக் கேட்டு நச்சரிக்கிறது

காய்ச்சலுக்கு மருத்துவமனை வாசலில்
ஆரஞ்சுப்பழம் வாங்கி வருவது ஒரு வகை
பாகப்பிரிவினை செய்தாலும்
ஒரு பங்கை வைத்திருப்பது மறு வகை
முன்னது அதுக்கு சாயம் பூசுமிடம்
பின்னது அதன் சாயம் வெளுக்குமிடம்

வெறும் பாசம் மட்டும்தானா
நூறு காசும் வேண்டும்
அந்த பாயாசம் ஊசிவிடும்
மனைவி பாயாசம் இன்றே
அம்மா பாயசம் மூன்றாம் நாள்
மற்றவர் பாயாசம் அடுத்தடுத்து

விட்டுக்கொடுப்பதும்
தட்டிக்கொடுப்பதும்
மனிதத்தை உய்விக்கட்டும்
கொஞ்சம் இன்பம்
நிறையத் துன்பம்தான்  
அந்த சிலுவையை இறக்கிவிட்டு
முன்பினும் இலகுவாகுங்கள்
ஒரு குழந்தையைப் போல்

நீண்ட நகங்களும்
கோரமான பற்களும்
கொடுர முகமும்
றெக்கைகளும் கொண்ட
அந்த அன்பெனும் மிருகம்
அதோ வருகிறது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
அது எலோரையும் கடித்துக் குதறும்
குறைந்தப்பட்சம் பிராண்டும்
அதிகப்பட்சம் கொல்லும்
பழையத் தழும்புகளைக் காண்பித்தால்
விட்டுவிடும் என்பது நம்பிக்கைதான்
ஆனால் அது
இன்னும் மூர்க்கமாய் தாக்கவே செய்யும்

- மகேஷ் பொன்







24 டிசம்பர் 2019

நானும் முரட்டுத் தனியன்தான்


எல்லாத் தடயங்களும் அழிக்கப்பட்டுவிட்டது
முரட்டுத் தனியன்… இல்லை, இல்லை
சனியன் வரும் நேரமும் ஆகிவிட்டது
இவ்வறையில் கசங்கிய மல்லிகையின் இருப்பை
அடித்து விரட்டினால் திருப்பி அடிக்கிறது
பெருக்கித் தள்ளினால் நாற்றித் தள்ளுகிறது
வித் அவுட் இன்சுரன்ஸ் நண்ப!
இந்நேரம் நீ போலிஸில் சிக்குக..
 
- மகேஷ் பொன்


23 நவம்பர் 2019

நிலவில் குடியேறுதல் குறித்து


நதியில் கல்லெரிந்து
உன் முகம் கலைத்தவன் நான்
மொண்டுவந்த குடத்து நீரில்
வாசல்வரை வந்தவள் நீ
ஓதங்கள் உயரும் பொழுதுகள் நீளும்
ம்ம்… ஈர்ப்பில் ஒவ்வொரு செல்லும் வீழும்…

பண்பாட்டின் தவிர்க்கவியலா தொன்மம் நீ
எப்போதும் கவிஞர்களின் பாடுபொருள் நீ
என் பால்யத்தின் முதல் பாடல் நீ
சாளரவெளியின் வரையா ஓவியம் நீ
நாடோடிகளின் வழித்துணை நீ
கடல்பாடுகளின் ஒளி விளக்கம் நீ
இந்த வானத்தை இன்னமும் அழகாக்கியது நீ
ஆண்மைச் செருக்கும்
ஒர் அழகிய வாழ்வும்
இத்தனை நாள் இத்தனை நாள்
நான் பேணி வளர்த்த அறமும்
உன் நிரந்தர கிரகணத்தில்
கர்ணமடித்து குப்புற விழுவதை பார்…

செவிடன் இழந்த ராஜாவின் பாடலைப் போல்
குருடன் இழந்த அடவியின் எழிலைப் போல்
குடியானவன் நான்
இழந்துவிட்டேனோ நிலவில் குடியேறுதலை…

தீயாய் இருக்கும் நயனின் ஒளியிலும்
உருகாத பெரிய வெந்நெய் இவன்
நிலவொளியில் இப்படி உருகி வழிவானேன்
வழியவந்து வழிகிறேன் உன்னை
வழியட்டுமே ஏன் நிறுத்தனும் என்னை

பெயரறியா ஆதி எச்ச சாம்ராஜ்யத்தின்
ஓர் இளவரசி விட்டுச்சென்ற இடத்தில்
ஒரு போர் மள்ளன் அப்படியே நிற்கிறான்
இத்தனை யுகங்கள் கடந்துவிட்டது
நீ என்னை கடந்து செல்லும் அந்த கணம்தான்
இன்னமும் இன்னமும் வரவில்லை…

நிலவில் கால்பதிக்கும் எண்ணத்தில்தான்
நிலா முற்றத்தில் விடியும்வரை காய்கிறேன்

பார்! எண்ணவலை விசித்திரமாகும்
முகர்! வெறுமையில் களியுறுவாய்
பழகு! எப்போதும் விலகமாட்டாய்
உன் மனம் குதுகளிக்கும் இடங்கள்
என்னை கூட்டிச்சென்ற இடங்கள்தான்
எண்! நம் புனர் ஜென்மத்தை இன்னும் ஆழமாய்
இருக்கிறேன் நான் நிலவில்லாத நீல வானமாய்

எண் வகையினில் நீ வேட்டை நிலா
லூனார் ரேகையின் ஊடுறுவலில்
மான்களுக்கு மட்டுமல்ல
என் போன்ற ஆண்களுக்கும் பைத்தியம் பிடிக்கிறது
பழங்குடி பகழியின் கூர்விழியால்
என்னை குத்தி கொலை செய்து
கொன்று தின்கிறாய்….
நிலாவா என்றேன் ஆம் என்றாய்
விசாரித்தேன்
ஒருவன் குறை நிலா என்றான்
நின் ஒரே தோழி அரை நிலா என்றாள்
ஊரார் பிறை நிலா என்றனர்
அவர்களுக்கு எப்படி புரியவைப்பது
நீ முப்பது நாளும் நிறை நிலா என்று…


26 ஆகஸ்ட் 2019

நோ டென்சன்... நோ பிபி...


அலுவலக நிலுவைக் கோப்புகளும்
குடும்ப நிலுவைக் கோரிக்கைகளும்
என்னை ரொம்பவே வதம் செய்தாலும்
சனிக்கிழமை பனி இரவும்
நீளும் பால்யத் தோழமையும்
இந்த ஒருக் குவளை மதுவும்
என்னை கொஞ்சம் இதம் செய்கிறது..



18 ஆகஸ்ட் 2019

துளிர மறுக்கும் கடைசி விதை



பெண் பிள்ளைக்கு யாழினி
ஆண் பிள்ளைக்கு பாரதிநிவேதன்
பெயர் வைத்து ஐந்து வருடங்களாயிற்று
விளையாட்டு பொருட்களும்
ஆடை, அலங்காரப் பொருட்களும்
அவ்வப்போது வாங்கி கொடுத்தாயிற்று
கணவன் அரசு பள்ளி என்றான்
எப்படி ஏற்றுக்கொள்வது சிபிஎஸ்இதான்….

பெண்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
எதிர்விட்டுத் திண்ணையில்
குழாயடியில்
கடைத்தெருவில்
பணியிடத்தில்
என்னைப் பற்றி எனக்கேதிரே பேசநேரிடும்
ஆதலால் நான் அங்கே வரவில்லை.

சொந்த ஊர் கோவில் கொடைதான்
மணமாகிப் போன சித்தி மகளும்
உடன்போக்கிய மாமா மகளும்
இடுப்பில் ஒன்னும் கையில் ஒன்னுமா
இழுத்துக்கொண்டுத் திரிவார்கள்
நான் மட்டும் சாமிகிட்ட அருள்வாக்கு கேட்கணும்
ஆதலால் நான் அங்கே வரவில்லை.

இரவல் நகையணிந்து திருமணவி்ழாவில்
கெளரவம் காக்கும் உறவினர்களுக்கு புரியாது
இரவலுக்கு குழந்தைகள் கிடைக்காதென
ஆதலால் நான் அங்கே வரவில்லை.

பிள்ளையை பெத்த மகராசிகளுக்கே வரவேற்பிருக்கிறது
பால்காய்ப்பு வீட்டில் விளக்கேத்த
சடங்கு வீட்டில் தண்ணீர் ஊத்த
வளைகாப்பு வீட்டில் வளையலிட
பிறந்த வீட்டில் சேனைத்தடவ
ஆதலால் நான் எங்கும் வரவில்லை.

ஆத்தூர் காமாட்சி அம்மனுக்கு தொடில் கட்டு
டாக்டர் மதுபாலா கைராசியான ஆளு
மீனாட்சியம்மா முரட்டு வைத்தியம் பலன்தான்
ஏழுக்கு அப்புறம் நாலு நாள் சேர்ந்தே இரு
இயற்கை மருத்துவம்… இங்கிலிஸ் மருத்துவம்
ஆசிரமத்தில் தத்தெடுப்பது இரத்தத்துல சேராது
எல்லாம் கேட்டுக்கேட்டு புளித்து புண்ணாகிவிட்டது
இனி யாருடைய அனுசரணையும் தேவையில்லை
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்
உங்கள் அறிவுரைகளை நிறுத்தினால் போதும்
அட ச்சீ.. அப்பப்பம் விளம்பரம் வேற
ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம், மையம்…

மாமனாருக்கும் மாமியாருக்கும் பேரப்பிள்ளை
அதுவும் ஆண் வாரிசு வேணும்
நாத்தனார்க்கு ரெண்டு பெத்த திமிரு
கணவனின் தோழி பிள்ளைப் பெற்றுத்தர ரெடி
உயிரியல் கடமை தவறிவிட்டேன் என
நானே வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறேன்
ஊர் பேசட்டும், உறவுகள் பேசட்டும்
நீயுமா என் அன்புக் கணவா
இன்னொரு திருமணம் குறித்து பேசுவது?

வீரியம் இல்லா விந்தணுக்கள்
கடமைக்கு வாழும் கணவனின் அன்பில்லாக் காமம்
மணவாழ்க்கைத் தந்த மன அழுத்தம்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்
ஹைபிரைட் காய்கனிகள்
கச்சாக்கழிவு சமையல் ஆயில்
ஈஸ்டோரோஜன் ஊட்டப்பட்ட இறைச்சி
காஸ்டிக் சோடா பால்
கருக்கொள்ளாத முட்டை
அஜினமோட்டோ சிற்றூண்டிகள்
நெகிழிக் கலந்த நொறுக்குத்தி தீனிகள்
இப்படி ஏதுவாகவேணும் இருக்கலாம்..
கார்ப்ரேட் என் தாய் நிலத்தை மலடாக்குகிறது
டாக்ட்ரேட் என் சேயை டெஸ்ட்டியூப்ல் பிறப்பிக்கிறது
பெண்ணை மட்டும் பலிபோடும் சமூகமே
எனதிந்நிலைக்கு நான் மட்டும்தான் காரணமா?

பெற்றோர் இல்லாத பிள்ளைகள் மட்டுமல்ல
பிள்ளைகள் இல்லாத பெறாதோரும் அனாதைகள்தான்












13 ஆகஸ்ட் 2019

ஓர் இனத்தின் குரல்



இது கூட்டொழுக்கம் இங்கு எதிரிகளில்லை
காடு எம்மினத்தின் வேர்,
இல்லம் மட்டுமே கிளைகள்
மூட்டில்லம் வேலியில்லம்
முதலியனவெல்லாம் பிரிவுகள் அல்ல
மச்சான் மாப்பிள்ளை உறவுகள்
நட்புக்காக நஞ்சுண்ட வம்சம்
அன்புக்கு அளவிடெல்லாம் இல்லை
நாங்கள் ஊர்ப்பிள்ளைகள்
அம்மையப்பன் பிள்ளைகளில்லை
கொலைமிருகங்கள் வாழும் இந்த
வேலி இல்லாத ஊருக்கு
அன்பு மட்டும்தான் அரணாக இருக்கிறது
புலிவலிக் கொண்டக் கூட்டம்
ஓ என்ற குரலுக்கு ஒடிவந்துவிடும்
உங்கள் எதிர்விட்டுக்காரனைப் போல்
ஏதிர்பார்ப்புகள் ஏதுமில்லை
வந்து பழகிப்பாருங்கள்
திடம் கொண்டவர்கள்தான்
ஆனாலும் நல்மனம் கொண்டவர்கள்
எம் வயிறு காய்ந்தாலும்
நாய்களுக்கு மீன் சுட்டுக் கொடுப்போம்
ஒருபோதும் வந்த விருந்தாளிகளை
வெறும்கையோடு அனுப்போம்.

கொல்லையில் விளைந்த கப்பைக்கு
முற்றத்தில் நிற்கும் காந்தாரி சம்மந்தி
கம்பங்கஞ்சிக்கு சர்க்கரை நாரய் ஊறுகாய்
அவ்வளவுதான் நாங்கள் விரும்பும் உணவு
நான் வேகமாக வளர்கிறேனே மம்மி
புரோட்டின், விட்டமின்..
நூடுல்ஸ், பீட்ஷா, பர்கர்,
சிக்கன் பிரியாணி, வஞ்சிரம், இறால்,
ஆப்பிள், செர்ரி, கிரினி
கடைசியாய் கொஞ்சம் ஐஸ்கிரிம்
என வகைவகையாய் பரிமாறினாலும்
தேனும் தினைக்கஞ்சியும் இளநீரும்
நல்பானம்தான்
வேட்டைப்புலி விரட்டி இட்டுவந்த மிளாக்கறியிலும்
மச்சினன் கொண்டுவந்த உடும்பிலும்
தங்கைகளுக்கு நதியளித்த
கதிறன், கல்லன்காரி, பெரும்னாலி,
நண்டு, நத்தையிலும்
இருப்பது புரதம்தான்.
சலங்காய் மாவை பொட்டுக்கன்னி இலையில் மடித்து
வக்கி எடுப்பதும் சப்பாத்திதான்.
நவ்வல், நெல்லி, பூர்த்தி, மா, பலா, வாழையுடன்
கடுமுட்டை, புளிச்சை, ஈச்சம், லக்கூட்டு, மாந்தை
இவையும் இன்னவும் பழங்கள்தான்.
விஸ்கி, வோட்கா, ரம்முக்கு
எவ்வகையிலும் இணையாகாதுதான்
போதையில் மயங்கிய வண்டினங்களை நீக்கி
மனையாளோடு குடிக்கும்
வயிறு சுத்தி ரெட்டி போந்தலும்
உடல் குளிரி ஆவல் கள்ளும்.

செங்கல், சிமெண்ட், கம்பி, கான்கிரட்,
சன்னல், கதவு, கண்ணாடி
பால்கணி, பெட்ரூம்
அபார்ட்மெண்ட் இதுதான் வீடா
ஈத்தல், ஆவல் கீற்று,
சுக்குநாரி, வுலங்கை புல்,
நான்கு தேக்கந்தூண்கள்,
பதினாறு கூட்டபரா கைக்கய்,
ஒரு அனையாக் கொல்லி
இதுவும் வீடுதான்.
நிலா விளக்கிடும் இரவுகளில்
அடவியில் கணப்புக்கட்டி கூடியிருப்போம்
நதி நடுபாறைகளும் கரைமணலும்
இளஞர்களின் விருப்பமான தூங்கிடம்
எங்கள் தோட்டத்து பரண்களை
ஏர்கண்டிசனர் அறைகள் என்பேன்
காதலர் சயனித்த குகைகளும்
மழையிரவில் தங்கிய நாங்கமரப் பொந்துகளும்
எங்களுக்கு எழில்மிகு ரெசார்ட்தான்.

ஈசிஜி, ஸ்கேன், எக்ஸ்ரே
மாதாந்திர மாத்திரை
பிரசவ வார்டு யாருக்கு வேண்டும்
எங்கள் குலப் பெண்கள்
குளிக்கப் போன இடத்தில்
குழுந்தை ஈன்று வருகிறார்கள்
தாயும் சேயும் நலம்தான்.
பிபி, சுகரு, அட்டாக்கு
அப்படியே தொந்தினாலும்
என்னானே தெரியாது எங்களுக்கு…
ஆனால் பெரியப்பா பிச்சாண்டிகாணி
புற்றுநோயை முடக்க
பாசனம் வைத்திருப்பது தெரியும்.
சிறுவர்களுக்கு தெரிந்த சித்தக்குறிப்புகள்;
சளிக்கு கரிசாலை நெய்
தலைவலிக்கு சுக்கிலவங்க பத்து
காய்ச்சலுக்கு வில்வம்
செரிமானத்துக்கு துளசி கருவேப்பிலை
குடற்புண்ணுக்கு மஞ்சல்கரி
வாயுக்கு வேப்பம்பூ
காமாலைக்கு கைதை
காயத்துக்கு ஆனந்தங்கொல்லி
விஷக்கடிக்கு ஆடுதீண்டா பாலை, வாழை
சூட்டுக்கு இளநீர்
இளமைக்கு கற்றாலை கடுக்காய்
நடையா நட குளியா குளி
அவளவுதான் ஆரோக்கியம்.

பத்துப் படிக்கவே ஆளில்லை.
எதற்கு பி.இ., எம்.பி.பி.எஸ் ஒதுக்கீடு
படித்தால் வேலை கிடைக்குமாமே
சேந்தங்கல்லு, இஞ்சிக்குழி, தேன்பாறை
செங்கத்தேரி, இடிந்தகல்லு.. இந்தா
அலுவலகத்தை எந்த மலையில் போடலாம்?
தொல்காப்பியனும் வள்ளுவனும்
எங்கள் முப்பாட்டன் என்பது உண்மைதான்
இன்தமிழ் மொழிக்கு அச்சன்கள் இருக்கிறார்கள்
படிக்கும் குறுமாக்களுக்கு வடித்துக்கொட்டினார்கள்.
இலக்கியமும் இலக்கணமும்
களரியும் சிலம்பமும்
கோலாட்டமும் மரவாட்டமும்
பாட்டும் கொக்கரையும்
விலங்கினங்கள் போக்கறிவும்
நஞ்சுன்ன்னா நாக்கறிவும்
நாங்கள் கல்லூரியில் படித்ததல்ல
ஆனாலும் படித்தோம் அதனுடன்
மரமேற, தேனகழ,
மர்ச்சினி விளைவிக்க..
வீயைப் பூட்ட, மீன் பிடிக்க
வரலாற்றையும் பண்பாட்டையும்
கேட்டுதான் வளர்கிறோம்
எங்களுக்கும் தெரியும்
நெடுஞ்செழியனை சடையவர்மனை
செங்குட்டுவனை மார்த்தாண்டவர்மனை
அதிகனை பிர்ஷா முண்டாவை
காடு கலையும் நாங்கள் திசைமாறியதில்லை.

யாரும் எங்களுக்கு நாகரிகம் பழக்கவேண்டாம்
பண்பாட்டு விழுமியங்களைப் போதிக்க வேண்டாம்
மூட்டு முத்தன்
மருந்து பிலாத்தன்
தெய்வம் பூசித்தான்
தல ஊரான்
பொதுவர்
என்ற கட்டமைப்பில்
ஊர் கட்டுக்கோப்பாகத்தான் இருகிறது.
புத்தன், இயேசுவை
எங்களுக்கு தெரியாது
முத்தன் தம்புரான்
கன்னி கருமாண்டி
மள்ள முத்தன்
இன்னும் வரையும் மரமும் இறையெனப் போதும்.
நீங்கள் சொல்லும் மதத்தில்
நீங்கள் சொல்லும் பட்டியலில்
நாங்கள் இல்லை
எல்லோருக்கும் வேலை இருக்கிறது
அன்றன்றைய உணவைத் தேட
நாங்கள் உப்புக்காக தெள்ளியை,
தேனை மாற்றிக்கொள்கிறோம்
பணம் எதற்கு?
என் தந்தை எனக்கு எதையும் வைக்கவில்லை
யானும் பிள்ளைகளுக்கு எதையும் சேர்ப்பதில்லை
இந்த விளையில் இருக்கும்
நான்கு மாமரங்களும்
பதினாறு பலா மரங்களும்
ஐந்தாறு அண்டி மரங்களும்
மயிலை, நெல்லி, ஞாங்கு மரங்களேறிய மிளகும்
தோட்டோரமாய் கூட்டமாய் நிற்கும் கமுகும் வாழையும்
பம்புளி, நார்த்தை, எலுமிச்சை மரங்களும்
இன்னும் குச்சிலண்டி நிற்கும் வெற்றிலை
துளசி, வல்லாறை முதலியவற்றையும்
கொஞ்சம் மர்ச்சினி காட்டையும்
வழியென வந்ததையும் விட்டுசெல்வதே வழக்கம்
இக்காணி நிலத்திற்கு பட்டா ஏது? பத்திரம் ஏது?
பாலை மரத்திலும் ஆல மரத்திலும் வரைக்கட்டிலும்
தேன் வரும் இடமும் காலமும் தெரிந்தே வைத்திருக்கிறோம்.
ரேசனில் அரிசிக்கு வரிசையில் நிற்க வேண்டியதில்லை
கப்பையும் சேம்பும் நிறையவே விளைகிறது
காயலில் மீன்கள் பிடித்தாலும் குறையப்போவதில்லை
மூன்றாண்டுகளுக்கு மழைப் பொய்த்தாலும்
கவளைக்கிழங்கு இருக்கிறது
மூங்கிலரிசி இருக்கிறது
மீத்தன் புற்றில் புல்லரிசி இருக்கிறது.

எங்கள் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்
காசு பணமல்ல ஊர் உறவுகள் தான் தீர்மானிக்கின்றன
குன்றிமணி தங்கமில்லை
நன்றிக்கடன் தவிர வேறு கடன் இல்லை
பொருட்சேர்க்கும் ஆசையில்லை
சீர்வரிச்சை, ரொக்கம், வரதட்சனை,
என்ற சொல்லாடல்கள் புழக்கத்திலில்லை
விரும்பிய மனங்களை இணைத்து வைக்கிறோம்
ஆண் பெண் பேதமில்லை
இது தாய்வழிச் சமூகம்
கூட்டுவாழ்க்கை வாழ்கிறோம்
கூடி களித்திருக்கிறோம்
ஊர்காரனுக்கு ஒன்னுவிட்ட மாமிக்கு
ஃபேஸ்புகில் ஃபிரண்ட் ரிக்யூஸ்ட் கொடுக்கவேண்டியதில்லை
பி.எஸ்.என்.எல்., வோடபோன், ஏர்டெல்,
ஐடியா தொல்லையில்லை
செட்டாபாக்ஸ் இல்லை சினிமா இல்லை
ப்ரேகிங்க் நியுஸ் இல்லை இளையராஜா பாடல்கள் இல்லை
இண்டர்நெட் இல்லை செல் இல்லை
ஏன் மின்சாரமே இல்லை
எங்கள் பொழுதுப்போக்கு காடோடியாய் இருப்பதுதான்
இங்கு கதை சொல்லிகள் இருக்கிறார்கள்
நதிகரை, மலைமுகடு, பள்ளத்தாக்கு, மரஉச்சி என்று
போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டே வருகிறார்கள்.
என் தாயே சொல்லியிருக்கிறாள் அவளின் காதல் கதையை
கால்நடைகளோடு பேசுகிறார்கள்
நாய்களோடு சிறுவர்களுக்கும் வேட்டை பழக்குகிறோம்
இளைஞர்கள் காதலியரோடு சென்று மீன் பிடிக்கிறார்கள்
பெண்கள் தாயமிடுகிறார்கள்
சிறுவர்கள் ”மரமேறி குரங்கு” விளையாடுகிறார்கள்
அவர்களே செய்த வில் எய்து
மாபூ கொய்யும் கடுவனையும்
இளநீர் கறும்பும் செவ்வண்ணியையும்
நவ்வல்காட்டு தோட்டுக்கு ஓட்டுகிறார்கள்
கட்டமூடு, பாத்திக்காடு தலைப்பாறை என
கூட்டிடம் அமைத்து
சுட்ட கெளுத்தியுடன் சிவபானம் வளித்து
அலவளாவி நகைத்துக்கிடக்கிறோம்.

பொய், புரட்டு, பித்தலாட்டாம், களவு
கொலை, கொள்ளை, கற்பழிப்பு-குறித்து
எங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாற்றில்
ஒரு தொன்மமோ ஏன்
வெள்ளையர்கால குறிப்போக்கூட இல்லை
இப்போதும் இல்லை
இங்கு உங்கள் அரசியலும் சட்டமும்
சமூக சித்தாந்தங்களும், பண்பாட்டு விழுமியங்களும்
செயலற்ற ஒன்று தேவையற்ற ஒன்று
நல்லதோ கெட்டதோ பேசிமுடிக்க
மூட்டுக்காணியும் பிலாத்தியும்
மாமூட்டுக் கூட்டமும் போதும்.

உலகவங்கியிடமும், ஜப்பானிடமும் கோடிகளை வாங்கி
வனத்தை வளப்படுத்துவதாக கூறி பிழைப்புநடத்தும்
வனத்துறையே நீ உன் வேலையை செய்
தோட்டோரமாய் மலையெங்கும் பரவிகிடக்கும்
பெரிய இலை பால்வாடி உனக்கு எண்டமிக் பீசஸ்
எங்களுக்கு தெரியும் அழிந்துவரும்
இனங்கள் குறித்தும் வனங்கள் குறித்தும்
பல்லுயிரினப் பெருக்கம் குறித்தும்.
காடு ஆண்டாண்டு காலமாய் பத்திரமாகதான் இருக்கிறது
தேனீனமும் எம்மினமும்தான் அதன் வளம் காக்கிறது
உங்கள் ஆய்வு முடிவு அபத்தமானது
பழங்குடிகளை காட்டைவிட்டு அகற்றிவிட்டு
எப்படி காட்டை கட்டிக் காப்பீர்கள்
அரசு நியமனம் பெற்ற எத்தனை வனக்காப்பாளர்களுக்கு
ஜீபிஎஸ் கொண்டாவாது சொந்த பீட்டுக்கு வழித் தெரியும்
காட்டுவழி நடத்த நாங்கள் வேண்டும்
இந்த காட்டை இன்னும் இன்னும் நேசிப்பவர்களாய்
நாங்கள் இருக்க… நாங்கள் காப்பதும்
ஊதியத்திற்காய் நீங்கள் காப்பதும் ஒன்றாகுமா?

சதுரகிரி மகாலிங்கம்
பர்வதமலை சிவன்
ஏழுமலையான் முருகன்
சபரிமலை ஐயப்பன்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்
உய்யங்கொண்டான்மலை உஜ்ஜீவநாதர்
களக்காடு நம்பிக் கோவில்
காரையாறு சொரிமுத்தையன் கோவில்
என குன்றுக்குக்குன்று சாமிப் பெயரில்
ஆண்டுக்கு லட்சோபலட்ச மக்கள் வந்துபோவதால்
நதிகள் நாசமாவதில்லை
சிற்றுயிர்கள் சாவதில்லை
செடி கொடிகள் அழிக்கப்படுவதில்லை
எந்த மலை முகட்டிலும் எங்களுக்கு தெய்வமில்லை
அனாலும் நாங்கள் காட்டை அழித்துவிடுவோம்.

பட்ட மரத்திற்கு கூப்புவிட்ட சாக்கில்
ஈட்டி, கோங்கு, நாங்கு,
செம்மனை, செங்குறிஞ்சி,
கருங்காலி, கடம்பு, தேக்கு
எல்லாம் யார் வீட்டில்
கட்டிலாக கதவாக சன்னலாக என்னவாக இருக்கிறது
நாங்கள் காட்டுக்குள்தானே இருக்கிறோம்
எங்கள் வீட்டுக்குள் வந்து பார்த்துவிட்டு போங்கள்
கதவில்லாத கீற்றுக்குடிலில் தரையில்தான் கிடக்கிறோம்
அனாலும் நாங்கள் காட்டை அழித்துவிடுவோம்.

99 வருட குத்தகைக்குவிட்டு
டீ எஸ்டேட், ரப்பர் எஸ்டேட்,
ஏலம், கிராம்பு, மிளகு என
ஆயிரமாயிரம் ஏக்கரில் தோட்டம் அமைத்தது
ரோடு காரு ஃபேக்ட்ரி எல்லாம்
பொதுநலனில் வருகிறது
நாங்கள் கூரை வேய புல்தான் அறுக்கிறோம்
அது அடுத்த ஆறாவது நாளில் வளர்ந்துவிடும்
கொல்லைப்புற தோட்டத்துக்கு குச்சிவெட்டி வேலிக்கட்டுகிறோம்
அது அடுத்த மழைக்கு முளைத்துவிடும்
அனாலும் நாங்கள் காட்டை அழித்துவிடுவோம்.

நதிகரையோரம் அமைக்கப்பட்ட ரிசார்ட், ரெஸ்டாரண்ட்
அருவிக்கரையோரம் அமைக்கப்பட்ட கடைத்தெரு
தொலைதூர மலையின் கோடைவாழ் ஸ்தளம்
எல்லாம் வாங்க விற்க வாடகைக்கு விட்டு
மதுக் குப்பிகளையும் நெகிழிகளையும்
வனத்தின் கர்பத்தில் விதைப்பது
சுற்றாலா ஈகும் பொருளாதார வளர்ச்சி
எங்கள் வாழ்விடத்திற்கு பத்திரமில்லை பட்டாயில்லை
இயற்கையோடு இயற்கையாக
இயற்கையைத் தின்று இயற்கையைப் பேண்டு
இயற்கையால் இயற்கையில் இயற்கை எய்துகிறோம்
அனாலும் நாங்கள் காட்டை அழித்துவிடுவோம்.

கனிமூலம், கரிமூலம், இன்னும் நதிமூலத்தையும்
நிர்மூலமாக்கும் திட்டங்களுக்கு அனுமதியளிக்க
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் இடமில்லை
நெடுஞ்சாலைகள், தொழிற்சாலைகள்
யோக மையங்கள், ஆசிரமங்கள் எல்லாம்
யானைகள் வழித்தடத்திலோ, வனப்பகுதியிலோ
அமையவில்லையென சான்றளித்திருகிறது
சுற்றுச்சூழல்த் துறையும் பசுமைத் தீர்ப்பாயமும்.
எங்கள் ஊரில் சாலையில்லை, மின்சாரமில்லை
கடையில்லை, கட்டிடமில்லை
வீட்டண்டையுள்ள சக்கை மரத்தை கரடிக்கும்
வேலியோர கப்பை மூட்டின் கிழங்கினை பன்றிக்கும்
அண்டிமாவை செவ்வண்ணிக்கும்
தென்னை இளநீரை கடுவனுக்கும்
ஆண்டுக்கு நான்கு கமுகு, வழையேனும் யானைக்கும்
மாங்கனிகளை இரிகிளிக்கும்
நெல்லிக்கனிகளை வவ்வாளுக்கும்
சோளத் தட்டையில் கொஞ்சம் நாகனவாய்க்கும்
கம்பம்புல்லைக் காட்டெருமைக்கும்
கோழிகளை வெருவுக்கும்
ஆடுகளை சிறுத்தைக்கும்
வளர்ப்பு நாய்களை வரிப்புலிக்கும்
எடுத்துக்கொள்ள கொடுத்துக்கொண்டிருக்கிறோம்
இன்னும் அரணைக்கும் பாம்புக்கும்
கொல்லும் மிருகங்களுக்கும்
அவ்வப்போது எங்கள் உயிரையும் கொடுத்துவிட்டு
இயற்கையின் உணவுச் சங்கிலியில்
ஒரு அங்கமாகத்தான் இருக்கிறோம்
அனாலும் நாங்கள் காட்டை அழித்துவிடுவோம்.

பறவைகள் சரணாலயம்
மான்கள் சரணாலயம்
புலிகள் சரணாலயம்
யானைகள் சரணாலயம்
மூலிகைக் காடு
பல்லுயிரினக் காடு
காப்புக் காடு என
பறவையினத்தையும் விலங்கினத்தையும்
இவ்வனத்தையும் பேணிக் காப்பதில்
முனைப்புக் காட்டும் ஆர்வலர்களே
குமரிக் காட்டில் கடோடியாய் வாழ்ந்து
பரளியாற்றில் நாகரிகம் பழகி
பொதிகைச் சாலையில் தமிழ் பயின்று
பொருநைக் கரையில் குடியமர்ந்து
ஈராயிரம் வருடங்கள் தாண்டிற்று
எங்கள் மரபுகளை
ஆப்ரிக்காவிலும் மடகாஸ்கரிலும்
விட்டுவந்து ஆயிரமாயிரம் வருடங்களாயிற்று
எப்போதிருந்தோ இக்காட்டில்தான் வசிக்கிறோம்
இப்போது வந்து காப்புக்காடென ஆக்கிவிட்டு
எங்களை வெளியேறு என்கிறீர்களே
நாங்களும் ஓர் அருகிவரும் உயிரினம்தான்
ஏனெனில் உங்களில் ஒரு சதவீதம்கூட இல்லை
நீங்கள் காப்பு செய்யாவிட்டாலும் பரவாயில்லை
எங்களுக்கு ஆப்பு செய்யாமலிருங்கள்
இன்னும் முரண்டு பிடிக்கிறோம்
சமவெளியில் மூன்று செண்டில் வீடும்
தலைக்கு பத்து லட்சமும்
இன்னமும் தருகிறோம் என்கிறீர்கள்
யாருக்கு வேண்டும் வீடும் பணமும்
உங்கள் வாழ்வு வேண்டுமானால்
பணத்தோடு பிணைக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் வாழ்வும் உணர்வும்
வனத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே ஆகவே
இந்த வனத்தைவிட்டு
எங்கள் இனத்தைப் பிரிப்பதற்கு பதிலாக
இந்த உடலைவிட்டு
எங்கள் உயிரைப் பிரித்துவிடுங்கள்