பெண் பிள்ளைக்கு
யாழினி
ஆண் பிள்ளைக்கு
பாரதிநிவேதன்
பெயர் வைத்து ஐந்து
வருடங்களாயிற்று
விளையாட்டு பொருட்களும்
ஆடை, அலங்காரப் பொருட்களும்
அவ்வப்போது வாங்கி
கொடுத்தாயிற்று
கணவன் அரசு பள்ளி
என்றான்
எப்படி ஏற்றுக்கொள்வது
சிபிஎஸ்இதான்….
பெண்கள் பேசிக்கொண்டே
இருக்கிறார்கள்
எதிர்விட்டுத்
திண்ணையில்
குழாயடியில்
கடைத்தெருவில்
பணியிடத்தில்
என்னைப் பற்றி
எனக்கேதிரே பேசநேரிடும்
ஆதலால் நான் அங்கே
வரவில்லை.
சொந்த ஊர் கோவில்
கொடைதான்
மணமாகிப் போன சித்தி
மகளும்
உடன்போக்கிய மாமா
மகளும்
இடுப்பில் ஒன்னும்
கையில் ஒன்னுமா
இழுத்துக்கொண்டுத்
திரிவார்கள்
நான் மட்டும் சாமிகிட்ட
அருள்வாக்கு கேட்கணும்
ஆதலால் நான் அங்கே
வரவில்லை.
இரவல் நகையணிந்து
திருமணவி்ழாவில்
கெளரவம் காக்கும்
உறவினர்களுக்கு புரியாது
இரவலுக்கு குழந்தைகள்
கிடைக்காதென
ஆதலால் நான் அங்கே
வரவில்லை.
பிள்ளையை பெத்த
மகராசிகளுக்கே வரவேற்பிருக்கிறது
பால்காய்ப்பு வீட்டில்
விளக்கேத்த
சடங்கு வீட்டில்
தண்ணீர் ஊத்த
வளைகாப்பு வீட்டில்
வளையலிட
பிறந்த வீட்டில்
சேனைத்தடவ
ஆதலால் நான் எங்கும்
வரவில்லை.
ஆத்தூர் காமாட்சி
அம்மனுக்கு தொடில் கட்டு
டாக்டர் மதுபாலா
கைராசியான ஆளு
மீனாட்சியம்மா
முரட்டு வைத்தியம் பலன்தான்
ஏழுக்கு அப்புறம்
நாலு நாள் சேர்ந்தே இரு
இயற்கை மருத்துவம்…
இங்கிலிஸ் மருத்துவம்
ஆசிரமத்தில் தத்தெடுப்பது
இரத்தத்துல சேராது
எல்லாம் கேட்டுக்கேட்டு
புளித்து புண்ணாகிவிட்டது
இனி யாருடைய அனுசரணையும்
தேவையில்லை
வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சும்
உங்கள் அறிவுரைகளை
நிறுத்தினால் போதும்
அட ச்சீ.. அப்பப்பம்
விளம்பரம் வேற
ஐஸ்வர்யா கருத்தரித்தல்
மையம், மையம்…
மாமனாருக்கும்
மாமியாருக்கும் பேரப்பிள்ளை
அதுவும் ஆண் வாரிசு
வேணும்
நாத்தனார்க்கு
ரெண்டு பெத்த திமிரு
கணவனின் தோழி பிள்ளைப்
பெற்றுத்தர ரெடி
உயிரியல் கடமை
தவறிவிட்டேன் என
நானே வீட்டுக்குள்
முடங்கி கிடக்கிறேன்
ஊர் பேசட்டும்,
உறவுகள் பேசட்டும்
நீயுமா என் அன்புக்
கணவா
இன்னொரு திருமணம்
குறித்து பேசுவது?
வீரியம் இல்லா
விந்தணுக்கள்
கடமைக்கு வாழும்
கணவனின் அன்பில்லாக் காமம்
மணவாழ்க்கைத் தந்த
மன அழுத்தம்
மரபணு மாற்றம்
செய்யப்பட்ட விதைகள்
ஹைபிரைட் காய்கனிகள்
கச்சாக்கழிவு சமையல்
ஆயில்
ஈஸ்டோரோஜன் ஊட்டப்பட்ட
இறைச்சி
காஸ்டிக் சோடா
பால்
கருக்கொள்ளாத முட்டை
அஜினமோட்டோ சிற்றூண்டிகள்
நெகிழிக் கலந்த
நொறுக்குத்தி தீனிகள்
இப்படி ஏதுவாகவேணும்
இருக்கலாம்..
கார்ப்ரேட் என்
தாய் நிலத்தை மலடாக்குகிறது
டாக்ட்ரேட் என்
சேயை டெஸ்ட்டியூப்ல் பிறப்பிக்கிறது
பெண்ணை மட்டும் பலிபோடும்
சமூகமே
எனதிந்நிலைக்கு
நான் மட்டும்தான் காரணமா?
பெற்றோர் இல்லாத
பிள்ளைகள் மட்டுமல்ல
பிள்ளைகள் இல்லாத
பெறாதோரும் அனாதைகள்தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக