தாய் வழி வந்த அது
தந்தை வழி வளர்ந்த அது
கடமை கருதி பெற்றோரையும்
உரிமை கருதி பிள்ளைகளையும்
எதிர்பார்ப்புகளில்தான் வாழவைக்கிறது
மற்றப்படி
அது நீள்வட்டம்தான்
நிறம்தான்
வேறு வேறு
முட்டையை சோற்றில் மறைக்கும் அது
மீந்த உணவைதான் ஊட்டிவிடுகிறது
நல்லிரவில் செல்லொலியில்
கனவை கலைத்து
பல்சர் சாவியை வாங்கிச்செல்லும் அது
கோணிய ஹேண்ட்பர் குறித்தும்
மாஸ்க் சீராய்ப்பு குறித்தும்
சொல்லாமல்
கொள்ளாமல் விட்டுப்போகிறது
நான் வேண்டாம் என்றாலும் அது
பக்காடி
லெமனை பரிந்துரை செய்கிறது
மாதக்கடைசி சிற்றிதழிலின்
தத்துவவாதி
நேர்காணல் பதிவில்
கவியின்
புள்ளியை நழுவவிட்டுவிட்டு
அது டேட்டா ரீசார்ச் செய்துக்கொள்கிறது
மீளக்கொடுத்தால் தேவலைதான்
ஆனால் அது வாங்கியதெல்லாமே
வராக்கடனென
ஆகிவிடுகிறது
கூடுவிட்டு கூடுபாயும் சித்தம் அறிந்த அது
ஒரே இடத்தில் எப்படி இருக்கும்
கொடு மற்றும் எடு கொள்கைதான்
அதன் இடுகாடு வரை
நாள் கணக்கில் அடவியில் அலைபவன்
பெரும் பயண விரும்பி
ஆனாலும்
மாலை வருவதற்குள் அது
வீட்டிற்கு
இழுத்து வருகிறது
தன் இலையில் மட்டும்
ஜிலேபியே
இல்லையென
மனவீட்டில்
வெளிநடப்பு செய்தது
அதே நேர்த்திதான்
ரோஸ்நிற நம்பிக்கையில் கட்டம் போட்ட
அந்தச் சட்டையை
முந்தி போட்டுச்செல்லும் அது
கமுக்கட்டை
கிழித்து திருப்பித்தருகிறது
அது ஒரு பறவை
இது எத்தனையாவது மரமோ
இது எத்தனையாவது கூடோ
அந்த பள்ளியை ஒட்டிய டீக்கடைக்கு
அது தினமும் வந்தது
ஒரு சமோசாவை சாப்பிடும் வரை
மனைவிக்கு கிள்ளி கொடுக்கும் அதுதான்
காதலிகளுக்கு அள்ளிக்கொடுக்கிறது
பெட்டிக்கடையில் கடன் இல்லை
ஆனாலும் அது இஎம்ஐ கட்டவைக்கிறது
ஜட்டி கிழிந்தாலும்
புது ஜட்டி வாங்கினாலும்
அது பார்ட்டிக் கேட்டு நச்சரிக்கிறது
காய்ச்சலுக்கு மருத்துவமனை வாசலில்
ஆரஞ்சுப்பழம் வாங்கி வருவது ஒரு வகை
பாகப்பிரிவினை செய்தாலும்
ஒரு பங்கை வைத்திருப்பது மறு வகை
முன்னது
அதுக்கு சாயம் பூசுமிடம்
பின்னது
அதன் சாயம் வெளுக்குமிடம்
வெறும் பாசம் மட்டும்தானா
நூறு காசும் வேண்டும்
அந்த பாயாசம் ஊசிவிடும்
மனைவி பாயாசம் இன்றே
அம்மா பாயசம் மூன்றாம் நாள்
மற்றவர்
பாயாசம் அடுத்தடுத்து
விட்டுக்கொடுப்பதும்
தட்டிக்கொடுப்பதும்
மனிதத்தை
உய்விக்கட்டும்
கொஞ்சம்
இன்பம்
நிறையத்
துன்பம்தான்
அந்த சிலுவையை இறக்கிவிட்டு
முன்பினும்
இலகுவாகுங்கள்
ஒரு குழந்தையைப் போல்
நீண்ட நகங்களும்
கோரமான பற்களும்
கொடுர முகமும்
றெக்கைகளும் கொண்ட
அந்த அன்பெனும் மிருகம்
அதோ வருகிறது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
அது எலோரையும் கடித்துக் குதறும்
குறைந்தப்பட்சம் பிராண்டும்
அதிகப்பட்சம் கொல்லும்
பழையத் தழும்புகளைக் காண்பித்தால்
விட்டுவிடும் என்பது நம்பிக்கைதான்
ஆனால் அது
இன்னும்
மூர்க்கமாய் தாக்கவே செய்யும்
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக