08 நவம்பர் 2024

கால இரயிலின் குதிரைத்திறன்

இந்த வழித்தடத்தில் ஓடும்
அத்தனை இரயில்களுக்கும் தெரியும்
எங்கள் காதல் கதை

இரயில் பயணத்தில்தான்
ஒருவருக்கு ஒருவர்
காதலைப் பரிமாறிக்கொண்டோம்

இரயில் தண்டவாளத்தில்தான்
கைகள் கோர்த்தப்படி
காதலை நடைப்பழக்கிக்கொண்டோம்

இரயில் நிலையத்திற்கும்
எங்கள் இருப்பிடத்திற்கும்
ஒரே மூச்சில் ஓடிவரும் தூரம்தான்

இரயிலில்தான்
கல்லூரிக்குப் போனோம்
இரயிலில்தான்
வேலைக்குப் போனோம்

இரயிலடி இருக்கையில் அமர்ந்துதான்
இளையராஜா பாடல் கேட்போம்

இரயிலின் வாசல் கம்பிகளில்தான்
முதல் பரிசத்தைத் தொடங்கினோம்

எங்கள் நட்பை
ஓவியமாக வரைய நேரிட்டால்
பின்புலத்தில்
நிச்சயமாக ஓர் இரயில் இருக்கும்

இருவரும்
தற்கொலை முடிவுக்கு வருகையில்
இரயில் முன் பாய்வதாகதான் இருந்தது

நீளும் இரயில் பயணத்தில்
அவள் முன்பதிவு வகையறா
நான் இல்லைமுன்பதிவு வகையறா

எனக்கு முன்பே தெரியும்
ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள்
இந்த இரயிலைத்
தலைகீழாய் கட்டித் தொங்கவிடுவார்களென

பிறகு
அவள் அப்பனின் கெளரவம்
இரயில் முன் பாய்ந்துவிடக் கூடாதென
ஓர் இராணுவ வீரனுக்கு வாக்கப்பட்டு
அவனுடன் பெருஞ்சுமையுடன்
இரயில் ஏறிப் போனதை
தூரமாய் நின்றுப் பார்த்தேன்

அன்றைய இரயில் எல்லாமே
என் நெஞ்சில் ஏறி
தடதடத்துப் போனது
கடந்த ஆறுமாதமாக
விதவிதமான இரயில்கள்
என் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தன

ஒரு இரயில் இன்ஜின்
12000 குதிரைத்திறன் கொண்டது
காலம்
அதனினும் அதித திறன் கொண்டது
அதனால்தான்
இன்றைய இரயில் எல்லாமே
வழக்கம் போல்
இருப்புபாதையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

 - மகேஷ் பொன்

09 ஜூலை 2024

பாவம் சுசீலன்கள்

வாழ்க்கையில் முன்னேறுவதற்காக
நானும் சுசீலனும்
இருசக்கர வாகனத்தில்
வேகமாக போய்க்கொண்டிருந்தோம்
முப்பது கிலோ மீட்டர் போவதற்குள்
முப்பத்து இரண்டு அழைப்புகள்...

செல் போனை
ஸ்விட்ச்ஆப் செய்துவிடலாம்
சுசீலனின் மனைவிகளை
எப்படி ஸ்விட்ச்ஆப் செய்வது...

_ திவ்யா ஈசன்

 


30 மார்ச் 2024

தேடுங்கள் கண்டடைவீர்கள்

அதிக மதிப்பெண்கள் பெற
போட்டித்தேர்வில் வெற்றி பெற
உடல் பலம் பெற
உள்ளம் சுகம் பெற
தீய ஆத்துமாவிடமிருந்து விடுபட
காச்சல் தலைவலி தீராநோய் நீங்க
விரைவான தொழில் வளர்ச்சிக்கு
வழுக்கையில் முடி வளர்ச்சிக்கு
என எல்லாவற்றுக்கும்
முதலில்
கர்த்தர்தான் அருளிக்கொண்டிருந்தார்
இப்போது யூடியூப்பர்கள்...
 
     - மகேஷ் பொன் 


 

நேற்று காலை 8 மணியளவில் செத்துவிட்டேன்

என் எதிரிகள்
என்னை கொல்வதற்காக
வைத்திருக்கும் ஆயுதங்கள்
முனை மழுங்கியவை
அவர்கள்
வீச்சருவாள் சரியாக வெட்டாது
பிச்சுவாகத்தி சரியாக குத்தாது
அதனால்தான்
பிழைத்துக்கிடக்கிறேன்….
ஆனால்
எனக்கு பிரியமானவர்கள்
என்னை கொல்வதற்காக
வைத்திருக்கும் ஆயுதங்கள்
மிகமிகக் கூர்மையானவை
அபபடியொரு
கூர்மையானச் சொல்லை எடுத்துதான்
நேற்று நீ
என்னை சதக் சதக் என குத்தினாய்….
 
          - மகேஷ் பொன்