07 ஏப்ரல் 2021

காதல் மறுமொழிகள்

 

திட்டமிட்ட ஏற்பாடு அல்ல

காதல்

ஆதலால் திருமணத்திற்கு பின்

உங்கள் துணையைக்

காதலிக்க முடியாமல் போனால்

என்ன செய்வீர்கள்

 

காதல் என்பது கற்பனை

திருமணம் என்பது நிஜம்

கற்பனைக்கும் நிஜத்திற்குமான

முரண்பாடுகள்

தப்பமுடியாத தண்டனைதான்

 

இனப்பெருக்கத்திற்கு ஒத்துழைப்பவர்கள்

எல்லோரும் காதலர்களாக இருப்பார்களென

நம்புவது நல்லதொரு பொய்

 

செவ்விதழ்களையும்

முலைக்காம்புகளையும்

மட்டுமே ஆய்ந்துக்கொண்டிருப்பவனின்

காதல்

தொடை இடுக்கில் முடிந்துவிடுகிறது

 

கட்டுப்படுத்த முடியாத ஆசை

கிடைமட்டம் ஆனால்

உன் காதல்

கோபுரத்தில் இல்லை

 

காதல்

எதிர்பார்க்கப்படும் போது

சுகானுபவத்தையும்

நிராகரிக்கப்படும் போது

கூடுதலாய் வலிகளையும்

தரவல்லது

 

காதல் ஒரு நெருப்பு

உன்னையும் அது பற்றிக்கொண்டது

உன் இதயம் அதில்

குளிர்காயப் போகிறதா

உன் வாழ்வு அதில்

தீக்கறையாகப் போகிறதா

இப்போது அதை

உன்னால் தீர்மானிக்க முடியாது

 

காதல் ஒரு மாயவித்தை

நாம் வேண்டாமென்றாலும்

அது மீள மீள வந்து

நம்மை ஏமாற்றவே செய்யும்

 

காதல் வந்துவிட்டால்

எல்லாமே

உள்ளங்கையில் வந்துவிட்டதாக

எண்ணுகிறோம்

உண்மையில்

எல்லாமே

விரைவில் கைவிட்டு போய்விடும்

 

காதல் மிகவும் சுவாராஸ்யமானது

சேர்ந்து வாழாத வரை

 

காதலில் தோற்பது

பெரிய வலியில்லை

ஒருமுறை ஜெயித்து பார்

தோல்வியின் வலியே

பராவாயில்லை எனத் தோன்றும்

 

- மகேஷ் பொன்




 

04 ஏப்ரல் 2021

நீலம் பூத்தக் கைகள்

நமக்கு வாய்த்த

1008 துன்பங்களில் ஒன்று

அடர்நீல நிறச் சேலையில்

கண்ணத்தில் கை வைத்தப்படி

முதல் படியிலேயே

அமர்ந்துவிடுகிறது…

இரண்டுபடி ஏற்றிவிட்டால்

நான்குபடி சறுக்கும் அதற்கு

வெள்ளணியும் இல்லை

செவ்வணியும் இல்லை

இப்போது நாம் அதனுடன்

கைக் குலுக்கிக்கொள்ளலாம்

 

- மகேஷ் பொன்



வானவில்ரோஸ் பூக்கும் காலம்

நட்பு காதலாக உருமாறுவது குறித்து பேசினோம்;
காதல் எல்லோருக்குமானது
அதனால்தான் ராக்கி என்ற நாய்
அக்காமகள் மடியில் தூங்குகிறது என்றேன்…
காதல் பால் பார்ப்பதில்லை
அதனால்தான் ஐசும் சோபியும்
உதட்டோடு உதடு முத்தமிடுகிறார்கள் என்றேன்…
காதல் வயதுடன் தொடர்புடையதல்ல
அதனால்தான் அதனால்தான்
பதினெட்டு ஆண்டுகளை அழித்துவிட்டேன் என்றாள்…
இப்போது எனக்கு நினைவுத் தப்புகிறது
மங்கலாக நெருங்கி வருகிறாள்…
பசலையில்லா முத்தம் இனிக்கும் என்பது
சுவை நாளங்களுக்கு உரைத்ததும்
மொத்த காதலும் வந்து
என் சுவரில் வண்ணம் பூசி
ஒரு வண்ணத்துப்பூச்சியை வரைகிறது
இந்த நெடுங்கால நட்பில்
ஒரு வானவில்ரோஸ் பூக்கும் காலம் இது…
செடியில் பூவொன்று அரும்பியதும்
ஓவியத்திலிருந்து வண்ணத்துப்பூச்சி வெளியேறிற்று…
காதல் ஒரு தற்செயல் நிகழ்வு
அது திடீரென நிலைகொள்ளுமென
நாங்கள் வெள்ளையடிக்கிறோம்
அது வண்ணங்களில் இலைகள் கொண்ட
மரத்தின் பூச்சொரிவைப் போல்
எங்களை வண்ணமயம் கொள்கிறது….
எனக்கு ஞாபகம் திரும்புகையில்;
ஊர் இன்னும் அழகாக இருந்தது
ஒரு மனைவியும்
இரு குழந்தைகளும்
ஒரு நண்பனும் இருந்தார்கள்
எனது அலுவலக இருக்கை
அப்படியேதான் இருந்தது
எல்லாம் இருந்துவிட்டு போகட்டும்
இனி நான் சுயநினைவுடன் காதலிக்கிறேன்…
 
- மகேஷ் பொன்